நற்றிணை - முன்னுரை

 

நற்றிணை

 

நற்றிணை என்பது தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்னும் சங்க இலக்கிய வகைப்பாட்டினுள் காணப்படும் ஒரு நூலாகும். இந்நூல் பல புலவர்களால் தனித்தனிப் பாடல்களாகப் பாடப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டது. எட்டுத்தொகை நூல்கள் இவை எனக் குறிப்பிடும் பழைய வெண்பாவில் முதலிடம் பெற்றுத் திகழ்வது நற்றிணையாகும். எட்டுத்தொகை நூல்களில் “நல்” என்னும் அடைமொழியைப் பெற்ற நூல் இதுவேயாகும். இதனால் இது “நல் + திணை” எனப் பொருள்படும் நற்றிணை என அழைக்கப்படுகிறது. இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். பிற்காலத்தில் சிறந்து விளங்கிய “தூதுஎன்னும் சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகவும் நற்றிணைப் பாடல்கள் அமைந்துள்ளன.

இந்நூலில் திருமாலை வாழ்த்தும் கடவுள் வாழ்த்துடன் 401 பாடல்கள் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஒன்பது முதல் பன்னிரண்டு அடிகளைக் கொண்ட பாடல்களாக அமைந்துள்ளன. ஏழு அடிகளைக் கொண்ட பாடல்களும், பதின்மூன்று அடிகளைக் கொண்ட பாடல்களும் நற்றிணையில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூலைத் தொகுத்தவர் யார் என்பது அறியப்படவில்லை. எனினும், இதனைத் தொகுப்பித்தவர் “பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி” ஆவார்.

நற்றிணைப் பாடல்கள் அனைத்தும் அகப்பொருளை அடிப்படையாகக் கொண்ட பாடல்களாகும். இந்நூலில் 401 பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர். குறுந்தொகைப் புலவர்களைப் போலவே, நற்றிணைப் புலவர்களும் தங்கள் பாடல்களில் இடம்பெற்றுள்ள தொடர்களின் அடிப்படையில் பெயர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நற்றிணையில் 132 குறிஞ்சித் திணைப் பாடல்களும், 104 பாலைத் திணைப் பாடல்களும், 102 நெய்தல் திணைப் பாடல்களும், 32 மருதத் திணைப் பாடல்களும், 30 முல்லைத் திணைப் பாடல்களும் உள்ளன.

நற்றிணை காட்டும் வாழ்க்கை

நற்றிணைப் பாடல்கள் வாயிலாக அக்கால மக்களிடையே நிலவிய பல்வேறு பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் அறிந்துகொள்ள முடிகிறது. தலைவன் பிரிவால் வாடும் தலைவி, தன் தலைவன் திரும்பி வரும் நாளைச் சுவரில் கோடிட்டுக் கணக்கிடும் வழக்கமும், காதலன் வருகையைப் பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்த்தறியும் வழக்கமும் அக்கால மக்களின் நம்பிக்கைகளை எடுத்துக்காட்டுகின்றன.

மேலும், மகளிர் காற்பந்து விளையாடும் வழக்கமும் இருந்ததை நற்றிணைப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது. பிற்காலத்தில் சிறந்து விளங்கிய “தூது” என்னும் சிற்றிலக்கியத்திற்கு முன்னோடியாக, குருவி, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பாங்கையும் நற்றிணையில் காணலாம்.

 

மேலும், மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, அவர்களின் கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறிந்துகொள்வதற்கும் நற்றிணைப் பாடல்கள் துணைபுரிகின்றன. இவ்வாறு, நற்றிணை வெறும் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் அகப்பாடல்களின் தொகுப்பாக மட்டுமல்லாமல், அக்காலத் தமிழரின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், பண்பாடு, அரசியல் மற்றும் அறவாழ்வு ஆகியவற்றை அறிந்துகொள்ள உதவும் சிறந்த இலக்கியச் சான்றாகவும் விளங்குகிறது.

எனது உரை முயற்சி

நான் தற்போது நற்றிணைப் பாடல்களுக்கு உரை எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இதுவரை முதல் 50 பாடல்களுக்கு உரை எழுதியுள்ளேன். தொடர்ந்து உரை எழுதி, முதல் 200 பாடல்களுக்கான உரையை ஒரு நூலாக வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்.

என்னுடைய உரையில், பாடல், பாடலாசிரியர் பற்றிய குறிப்பு, பாடலின் துறை, துறைக்கான விளக்கம், கொண்டுகூற்று, உரை, சிறப்புக் குறிப்பு ஆகிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன. பாடலின் சொற்பொருளையும் உள்ளார்ந்த பொருளையும் இயன்றவரை எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குவதே இம்முயற்சியின் நோக்கமாகும்.

என்னுடைய உரைகளைப் படித்துத் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு நற்றிணையில் ஆர்வமுள்ள நண்பர்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் கருத்துகளும் திருத்தங்களும் இம்முயற்சியை மேலும் சிறப்பாக அமைக்க உதவும்.


 

 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே

28. கள்வர்போலக் கொடியன்!