8. இவள் தந்தை வாழ்க! திறம் பெறுக இவள் தாயே!

 

8. இவள் தந்தை வாழ்க! திறம் பெறுக இவள் தாயே!

 

பாடியவர்: பெயர் கிடைக்கவில்லை[1]

 

திணை: குறிஞ்சி

 

துறை: இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடும் கண்ட தலைமகன் சொல்லியது

 

துறை விளக்கம்: தற்செயலாக நடைபெற்ற சந்திப்பின் இறுதியில், தலைவி தன் தோழியர் கூட்டத்துடன் சேர்ந்து நிற்பதைக் கண்ட தலைமகன், தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டது.

பாடலின் பின்னணி:

தலைவன் தன் தோழனுடன் சென்றுகொண்டிருந்தபோது, கடற்கரைச் சோலையில் எழில்மிக்க தலைவியைக் கண்டு காதல் கொள்கிறான். அவளது மயக்கும் அழகிலும், மானைப்போன்ற மருண்ட பார்வையிலும் தன்னையே மறக்கும் தலைவன், தன் உள்ளத்தில் மலர்ந்த அரிய வேட்கையினால் தவிக்கின்றான். அவளது எழிலும், அவள் அணிந்துள்ள நறுமண மலர்த் தழையாடையும் அவனைப் பெரிதும் கவர்கின்றன. தமக்குத் துயரத்தைத் தரும் பேரழகைக் கொண்ட இந்த நங்கை யாருடைய மகளோ என்று வியக்கும் தலைவன், "இவளைப் பெற்ற தந்தை வாழ்க!" என மனதார வாழ்த்துகிறான். தொடர்ந்து, ”வயலில் நெல் அறுப்போர் அறுத்துப் போட்டும், நெய்தல் மலர்கள் நெற்போர்களில் பூக்கும், திண்ணிய தேரையுடைய பொறையனின் தொண்டி நகரம் போன்ற சிறப்பினை இவளைப் பெற்ற தாய் பெறுவாளாக!” என்று அவள் தாயை வாழ்த்துகிறான்.

 

 

அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்
திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள்கொல் இவள் தந்தை வாழியர்
துயரம் உறீஇயினள் எம்மே அகல்வயல்        5
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்
தண் சேறு தாஅய மதனுடை நோன் தாள்
கண்போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி
தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே         10

அருஞ்சொற்பொருள்:

1. அல்கல் – மிகுதல்; படர் - படர்ந்த; உழந்த – வருந்திய; அரி – செவ்வரி; மதர் - செருக்கு; மழைக்கண் – குளிர்ச்சியான கண்கள்

2. பல் - பல; நுடங்கும் - அசையும்; அல்குல் – இடை

3. திரு - அழகிய; மணி – நீலமணி; புரையும் - போன்ற; மேனி - உடல்; மடவோள் – இளையவள்

5. உறீஇயினள் – துயரம் அடையடையச் செய்தாள்; எம்மே - எமக்கு; அகல்வயல் – அகன்ற வயல்

6. அரிவனர் – கதிர் அறுப்பவர்கள்; அரிந்தும் – அறுக்கப்பட்டும்; தருவனர் – கொண்டுவந்து தருபவர்கள்;

7. தண் – குளிர்ந்த ; தாஅய - பரவ; மதன் – அழகு; நோன்– வலிய

8. நெய்தல் – நெய்தல் மலர்; போர்வில் – நெற்போரில்

9. திண் தேர் – வலிமையான தேர்; பொறையன் – ஒரு மன்னன்; தொண்டி – ஓர் ஊர்

10. திறம் – சிறப்பு, மேன்மை

 

பதவுரை:

1. அல்கு உழந்த அரி மதர் மழைக்கண் – மிகுந்த துயரத்தில் வருந்திய செவ்வரி படர்ந்த குளிர்ச்சியான கண்களையும்,

2. பல் பூ பகை தழை நுடங்கும் அல்குல் - பல பூக்களும் மாறுபட்ட தழைகளும் உடைய தழையாடை அசைந்தாடும் அல்குலையும்

3. திரு மணி புரையும் மேனி மடவோள் - அழகிய நீலமணி போன்ற மேனியையும் கொண்ட இளம்பெண்

4. யார் மகள்கொல் இவள் தந்தை வாழியர் - யாருடைய மகளோ? இவளின் தந்தை வாழ்க!

5. துயரம் உறீஇயினள் எம்மே அகல் வயல் – எமக்குத் துயரத்தை உண்டாக்கினாள்; அகன்ற வயலில்

6. அரிவனர் அரிந்தும் தருவனர் பெற்றும் - கதிரறுப்போரால் அறுக்கப்பட்டும், அதனைக் கொண்டுவருவோரால் பெறப்பட்டும்

7. தண் சேறு தாஅய மதன் உடை நோன் தாள் - குளிர்ந்த சேறு பரவிய அழகுடைய வலிய தண்டினையுடைய

8. கண்போல் நெய்தல் போர்வில் பூக்கும் - கண் போன்ற நெய்தல் பூ, நெற்போரில் பூத்திருக்கும்

9. திண் தேர் பொறையன் தொண்டி - திண்ணிய தேரைக்கொண்ட பொறையனின் தொண்டிப் பட்டினத்துச்

10. தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே - சிறப்பெல்லாம் பெறுக இவளை ஈன்ற தாய்.

 

கொண்டுகூட்டு: மடவோள்‌ தந்தை வாழியர்‌; தாய்‌ தொண்டி தன்‌ திறம்‌ பெறுக என முடிக்க.

உரை:

மிகுந்த துன்பத்தில் உழந்த செவ்வரி படர்ந்த அழகிய கண்களையும் பலவகை மலர்களுடன்  தொடுக்கப்பட்ட தழையுடன் அசையும் இடையையும், அழகிய நீலமணியை ஒத்த மேனியையும் உடைய இந்த இளம்பெண் யாருடைய  மகள்?  இவளுடைய தந்தை நீடு வாழ்வாராக!  கலங்காத நெஞ்சையுடைய எமக்கே இவள் துயரத்தைக் கொடுத்தாள். அகன்ற வயல்களில் கதிரறுப்பவர்களால் அரியப்பட்டும் நெற்கதிரை எடுப்பவர்களால் கொண்டு வரப்பட்டும், குளிர்ந்த சேறு பரவிய அழகிய வலிய தண்டினையுடையதும் கண்போலத் தோன்றும் நெய்தல் மலர்கள் நெற்போர்களில் பூக்கும் திண்ணிய தேரையுடைய பொறையனின் தொண்டி நகரம் போன்ற சிறப்பினை இவளைப் பெற்ற தாய் பெறுவாளாக!

 

சிறப்புக் குறிப்பு: வயலை அழகுபடுத்திய நெய்தல் மலர் தான் சேர்ந்த நெற்போரிலும் அழகு செய்யவதைப்போல், அவள் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் சிறப்பினைத் தருவாள் என்று தலைவியைத் தலைவன் வியந்து போற்றுகிறான்.



[1] . இப்பாடலை இயற்றியவர் கண்ணகனார் என்று ஒளவை சு.  துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிப்பிடுகிறார்.

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே

28. கள்வர்போலக் கொடியன்!