7. கார்காலம் உணர்த்தும் தலைவன் வருகை
7. கார்காலம் உணர்த்தும் தலைவன் வருகை
பாடியவர்: நல்வெள்ளியார்
நல்வெள்ளியார் என்றும் நல்லொளியார்
என்றும் அழைக்கப்பட்ட இவர் மதுரையைச் சேர்ந்த பெண்பாற் புலவர். இவர் பாடியதாக
நற்றிணையில் இரண்டு பாடல்கள் (7,47),
குறுந்தொகையில் ஒரு பாடல் (365), அகநானூற்றில் ஒரு பாடல் (32) ஆகியவை இடம்
பெற்றிருக்கின்றன.
திணை: பாலை
துறை:
பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டி இடைக் கழிந்து பொருள்வயிற் பிரிய ஆற்றாளாய
தலைவிக்குத் தோழி சொல்லியது
துறை விளக்கம்: காதல் உறவு ஏற்பட்ட பிறகு, திருமணம்
செய்துகொள்ளாமல், தலைவன் பொருள்
தேடுவதற்காக நீண்ட காலம் பிரிந்து செல்ல, அந்தப் பிரிவைத் தாங்க முடியாத
தலைவிக்குத் தோழி கூறியது.
பாடலின் பின்னணி:
தலைவன்
தலைவியைப் பிரிந்து பொருள் தேடச் சென்ற சூழலில், அவன் திரும்பி வருவதாகக் கூறிச் சென்ற
கார்காலம் தொடங்குகிறது. இயற்கை கொந்தளிக்கும் இச்சூழலில், தலைவனின் பிரிவைத் தாங்க
முடியாமல் வருந்தும் தலைவியை நோக்கி, அவளது ஆற்றாமையைப் போக்கி ஆறுதல் அளிப்பதற்காகத்
தோழி கார்காலத்தின் வருகையையும் மலைநாட்டின் இயற்கை வளத்தையும் விவரித்துக் கூறுவதாக
இப்பாடலின் பின்னணி அமைந்துள்ளது.
அச்சம்
நிறைந்த அகன்ற சுனைகளில் நீர் நிறைந்து வழிய, பெருமலையிலிருந்து அருவிகள்
பேரொலியுடன் கொட்டுகின்றன. பாறைகளை மோதி உருட்டிவரும் காட்டாற்றின் பெருவெள்ளம்
மூங்கில்களையே மூழ்கடித்துக் காட்டை அசைத்துப் பாய்கிறது. இடி முழக்கத்துடன் வானம்
மின்னத் தொடங்கி மழை பெய்யும் இக்காலகட்டத்தில், வெண்ணெல்லைத் தின்ற
புள்ளிகளையுடைய யானை நறுமணம் கமழும் சந்தனக் காட்டில் அச்சமின்றி உறங்குகிறது.
இத்தகைய வளம் மிக்க மலைநாட்டுக்குரிய தலைவன், இயற்கை மழை பொழியும் இத்தகு இனிய
சூழலில் விரைந்து வந்து உன்னை மணந்துகொள்வான் எனத் தோழி தலைவியைத் தேற்றும்
முறையில் இப்பாடலின் காட்சிப் புலப்படுத்தப்பட்டுள்ளது.
சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப
கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப
தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம் 5
இன்னே பெய்ய மின்னுமால் தோழி
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும்
சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே
அருஞ்சொற்பொருள்:
1. சூர் – வருத்தும் தெய்வம்; நனந்தலை –
அகன்ற இடம் ; சுனை – நீர்நிலை; மல்குதல் – நிறைதல்
2. வரை – மலை; அடுக்கம் - சரிவு; ஆர்ப்ப
– ஆரவாரிக்க
3. இழிதரும் - இறங்கும்; கடுவரல் –
விரைந்து வருதல்; கான் – காடு
4. கழை – மூங்கில்; மாய்த்தல் –
அழித்தல். மூழ்கச் செய்தல், மறைத்தல்; நீத்தம் – வெள்ளம்; ஆர்ப்ப –ஆரவாரிக்க
5. தழங்குதல் – முழங்குதல்; குரல் -
ஒலி; ஏறு – இடி
6. இன்னே – இப்பொழுதே; மின்னுமால்
(மின்னும்+ஆல்) – மின்னுகின்றது (ஆல் – அசை)
7. அருந்திய - உண்ட; நுதல் – நெற்றி
8. தண் – குளிர்ந்த; சிலம்பு –
மலைச்சாரல்; துஞ்சும் – உறங்கும்
9. சிறியிலை – சிறிய இலை; சந்தின –
சந்தன மரங்கள்; வாடு - வாடிய
பதவுரை:
1. சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க – அச்சம்
தரும் தய்வம் உறையும் அகன்ற இடத்திலுள்ள சுனையின் நீர் பொங்கி வழிய
2. பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப - பெரிதான
மலையின் சரிவுகளில் அருவிகள் ஆர்த்தொலிக்க
3. கல் அலைத்து இழிதரும் கடு வரல் கான்யாற்று
– கற்பாறைகளை மோதித் தள்ளிக்கொண்டு இறங்கும் விரைந்து வருகின்ற காட்டாற்றின்
4. கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப - மூங்கில்களை
மூழ்கச்செய்யும் வெள்ளம் காட்டில் மோதி ஆரவாரிக்க,
5. தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம் - மிக்கு
ஒலிக்கின்ற இடியோடு முழக்கமிட்டு வானம்
6. இன்னே பெய்ய மின்னுமால் தோழி – இப்பொழுதே
பெய்வதற்கு மின்னுகின்றது. தோழீ!
7. வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை - வெண்ணெல்லை
உண்ட வரிகளையுடைய நெற்றியைக்கொண்ட யானை
8. தண் நறும் சிலம்பில் துஞ்சும் - குளிர்ந்த
நறுமணமிக்க மலைச்சாரலில் தூங்கும்
9. சிறியிலை சந்தின வாடு பெரும் காட்டே
- சிறிய இலைகளையுடைய சந்தன மரங்கள் வாடியிருக்கும் பெரிய காட்டினில்
கொண்டுகூட்டு: தோழீ, காட்டில் சுனைமல்க, அருவி
ஆர்ப்ப, அலை ஆர்ப்ப, வானம் மின்னும் என முடிக்க.
உரை:
தோழீ! அச்சம் தரும், தெய்வம்
உறையும் அகன்ற இடத்தையுடைய சுனைகளில் நீர் நிறைந்து வழியும்படியாகவும், பெரிய மலைப்பக்கங்களில்
உள்ள அருவிகள் ஆரவாரம் செய்து கொட்டும்படியாகவும் மழை பொழிவதற்காக வானம் மின்னுகிறது.
பாறைகளையும் கற்களையும் மோதித் தள்ளிக்கொண்டு வேகமாக இறங்கி வரும் காட்டாற்றில், உயர்ந்த
மூங்கில்களே மூழ்கிப் போகும் அளவுக்குப் பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அது காடு
முழுவதும் பேரொலியை எழுப்புகிறது.
இத்தகைய
சூழலில், மேகங்களின் இடிமுழக்கத்தோடு, வானம் இப்பொழுதே பெருமழையைப் பொழிவதற்காக
மின்னி முழங்கிக் கொண்டிருக்கிறது. காட்டில் விளைந்த வெண்ணெல்லை உண்ட, வரிகளையுடைய
நெற்றியையுடைய யானை, குளிர்ந்த நறுமணம் கமழும் மலைப்பக்கத்தில் உள்ள, சிறிய
இலைகளையுடைய சந்தன மரங்கள் வாடிக் கிடக்கும் பெரிய காட்டில் கவலையின்றித் தூங்கிக்
கொண்டிருக்கிறது. கார்காலம் தொடங்கிவிட்டது. தலைவன் தன் செயலை முடித்துக்கொண்டு
இப்பொழுதே வந்துவிடுவான், நீ வருந்தாதே!
சிறப்புக் குறிப்பு:
இப்பாடலில்
இரண்டு இறைச்சிப் பொருள்கள் உள்ளன. 1) வாடிய காட்டை வாழ்விக்க மழை பெய்யப்போகிறது
என்றது, உன் காதலர் வந்து உன்னை மகிழ்விப்பார் என்று தோழி தலைவிக்குச் சொன்னதைக்
குறிக்கிறது. 2) வெண்ணெல் அருந்திய யானை சந்தனக் காட்டில் கவலையின்றித் தூங்குவது
என்றது, நீயும் மகிழ்ச்சியோடு சந்தன மணம் கமழும் உன் காதலனின் மார்பில் உறங்குவாய்
என்று தோழி தலைவிக்குச் சொல்வதைக் குறிக்கிறது.
Comments
Post a Comment