6. இவர் யார் என்குவள் அல்லள்
6. இவர் யார் என்குவள் அல்லள்
பாடியவர்:
பரணர்
சங்க காலப் புலவர்களிலேயே மிகவும் சிறந்த புலவர்களில் ஒருவர் பரணர். பரணரால் பாடப்படுவது பாராட்டுதற்குரியது என்ற
கருத்தில் “பரணன் பாடினன்’
என்று ஔவையார் குறிப்பிடுகிறார்
(புறநானூறு - 99). பரணர், புறநானூற்றில் 13 செய்யுட்களும், அகநானூற்றில் 34 செய்யுட்களும், நற்றிணையில் 12 செய்யுட்களும், பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தும் பாடியுள்ளார். இவரால் பாடப்பட்டோர் உருவப் பஃறேர்
இளஞ்சேட்சென்னி, சேரமான்
குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி,
வையாவிக் கோப்பெரும் பேகன்,
சேரமான் கடல்பிறக்கோட்டிய வேல்கெழு
குட்டுவன் ஆகியோராவர். இவருடைய பாடல்கள்
வரலாற்றுச் செய்திகள் நிறைந்தவை. இவர்
கபிலரின் நண்பர். மருதத் திணைக்குரிய
பாடல்கள் இயற்றுவதில் வல்லவர். இவர் பதிற்றுப்பத்தில் கடல் பிறக்கோட்டிய வேல்குழு
குட்டுவனைப் பாடியதற்கு, உம்பற்காட்டு வாரியையும் அவன் மகன் குட்டுவன் சேரனையும்
பரிசாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
திணை:
குறிஞ்சி
துறை:
இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாகிய தலைவன் தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
துறை விளக்கம்: இரவில்
தலைவியைச் சந்திக்க முடியாமல் ஏமாற்றமடைந்த தலைவன், தோழியின் காதில் விழும்படி தன்
நெஞ்சத்திடம் கூறியது.
பாடலின் பின்னணி:
களவுக்காலத்தில் தலைவன் ஓர் இரவில் சந்திக்க வந்தபோது, சூழ்நிலை
சரியாக அமையாததால், தலைவியைச் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றான்.
மறுநாள் பகலில் தலைவியைச் சந்திக்கும் இடத்திற்கு வந்த தலைவன், தோழியைக் கண்டு
"நான் வந்திருக்கும் செய்தியைத் தலைவியிடம் சொல்" என்று கேட்டுக்கொண்டான்.
அதற்குத் தோழி "நேற்று இரவு வரவில்லையே என்று கோபமாக இருக்கிறாள். இப்போது நான்
போய் உன்னைப் பற்றிச் சொன்னால் அவள் ஏற்றுக்கொள்ள மாட்டாள்" என்று பதிலளித்தாள்.
தோழியின்
பதிலைக் கேட்டுத் தலைவன் மனக்கலக்கம் அடைந்தான். "என் அன்பான தலைவியிடம்
சென்று, உன் தலைவன் உன்னைப் பார்க்க முடியாமல் மிகவும் வருந்துகிறான் என்று
சொல்வதற்கு எவரும் இல்லையே! எவராவது சொல்வார்களானால், ’வந்திருப்பது யார்? எதற்காக
வந்தார்கள்’ என்றெல்லாம் அவள் ஆராய்ச்சி செய்ய மாட்டாள்; என் நிலையறிந்து உடனே
வந்துவிடுவாள்.” என்று தோழியின் காதில் விழும்படித் தன் நெஞ்சிடம்
கூறுகிறான்.
நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்
நார் உரித்தன்ன மதனில் மாமை
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்
திதலை அல்குல் பெருந் தோள் குறுமகட்கு
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே 5
இவர் யார் என்குவள் அல்லள் முணாது
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி
இரும் பல் ஒலிவரும் கூந்தல் 10
பெரும் பேதுறுவள் யாம் வந்தனம் எனவே
அருஞ்சொற்பொருள்:
1. ஆம்பல் – அல்லி; தூம்பு – துளை;
திரளுதல் – திரண்ட; கால் – தண்டு
2. மதன் – அழகு ; மாமை – கருமை
(மாந்தளிர் நிறம்)
3. ஏந்து - உயர்ந்த; எழில் - அழகு;
மழைக்கண் – நீர்நிறைந்த கண்
4. திதலை - தேமல் ; அல்குல் – இடை;
குறுமகள் - தலைவி
5. எய்தல் – அடைதல், கிட்டுதல்;
செப்புதல் – சொல்லுதல்
6. முணாது – வெறுப்படையாது
7. அத்தம் – காடு; குமிழ் – ஒருவகை
மரம்; கொடு – வளைந்த; விளை – விளைந்த (பழுத்த)
8. எறிதல் – துள்ளுதல்; வல்சி - உணவு
9. ஓரி – கடையெழு வள்ளல்களில் ஒருவன்;
நாறி – நறுமணமுடையதாகி
10. இரும் - கரிய; பல் – பல; ஒலிவரும் –
தழைத்த
11. பேது – மயக்கம்
பதவுரை:
1. நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள்
கால் - நீரில் வளரும் ஆம்பலின் துளையுள்ள
திரண்ட தண்டின்
2. நார் உரித்தன்ன மதன் இல் மாமை - நாரை
உரித்தது போன்ற அழகிழந்த மாமை நிறத்தவளும்,
3. குவளை அன்ன ஏந்து எழில் மழை கண் -
குவளை மலரைப் போன்ற உயர்ந்த அழகுள்ள குளிர்ந்த கண்களையுடைவளும்
4. திதலை அல்குல் பெரும் தோள்
குறுமகட்கு - தேமல் படர்ந்த அல்குலை உடையவளும், பெரிய தோளினையுடையவளுமாகிய
தலைவியிடம்
5. எய்த சென்று செப்புநர் பெறினே –
அருகில் சென்று உரைப்பவரைப் பெற்றால்,
6. இவர் யார் என்குவள் அல்லள் முணாது -
“இவர் யார்” என்று சொல்பவள் அல்லள் அவள், வெறுப்படையாமல்
7. அத்த குமிழின் கொடு மூக்கு விளை கனி
– காட்டு வழியில் இருக்கும் குமிழமரத்தின் வளைந்த மூக்கையுடைய நன்கு முதிர்ந்த
பழம்
8.
மட மாற்கு வல்சி ஆகும் துள்ளிக்குதிக்கும் – துள்ளிக் குதிக்கும் இளைய
மானுக்கு உணவு ஆகும்
9. வல் வில் ஓரி கானம் நாறி – வல்வில் ஓரியின்
காட்டைப்போல் மணம் மிக்க
10. இரும் பல் ஒலிவரும் கூந்தல் - கரிய
பலவாகிய தழைத்துத் தாழ்ந்த கூந்தலையுடைய அவள்
11. பெரும் பேதுறுவள் யாம் வந்தனம் எனவே
– நான் வந்திருக்கிறேன் என்பதை அறிந்து, மகிழ்ச்சியால் மிகவும் மயங்குவாள்
கொண்டுகூட்டு: நெஞ்சே!
குறுமகட்குச் செப்புநர்ப் பெறின், இவர் யார் என்குவள் அல்லள்; பெரும்
பேதுறுவள் எனக் கூட்டுக.
உரை:
நெஞ்சே! நீரில் வளரும்
ஆம்பல் மலரின், உள்ளே துளையுடைய (தூம்பு) திரண்ட தண்டை உரித்தால் உள்ளிருக்கும்
நார் எப்படி இருக்குமோ, அதைப் போன்ற மென்மையான, (பிரிவினால்) அழகு குறைந்த மாமை
நிறம் கொண்டவள் தலைவி. குவளை மலரைப் போன்ற அழகிய, குளிர்ச்சியான கண்களையும், தேமல்
படர்ந்த அல்குலையும், மற்றும் பெரிய தோள்களையும் உடைய இளையவளாகிய தலைவியிடம்,
அவளருகே சென்று, "உன் தலைவன் உன்னைக் காண வந்திருக்கிறான்" என்று
சொல்லக்கூடிய தூதுவர்களை நாம் பெற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்படிச்
சொன்னால், அவள் நம்மிடம் கோபித்துக் கொண்டு "இவர் யார்?" என்று கேட்க மாட்டாள்;
நம் மீது வெறுப்பும் கொள்ள மாட்டாள். ஓரி என்னும் கடையெழு வள்ளலின் காட்டில், குமிழ மரத்தின் வளைந்த மூக்கு போன்ற வடிவமுடைய
முற்றிய கனிகள் கீழே உதிர்ந்து கிடக்கும். அங்கு துள்ளிக் குதித்து விளையாடும் இள
மான்களுக்கு அக்கனிகள் நல்ல உணவாகும். அத்தகைய காட்டைப்போல் நறுமணம் வீசுகின்ற,
கரிய, அடர்ந்த, தாழ்ந்து தொங்கும் கூந்தலை உடைய நம் தலைவி, "யாம் அவளைத் தேடி
வந்திருக்கிறோம்" என்ற செய்தியைக் கேட்ட மாத்திரத்திலேயே, அளவற்ற
மகிழ்ச்சியினால் மிகவும் மயங்குவாள்.
Comments
Post a Comment