5. பிரிதல் அரிதே!
5. பிரிதல் அரிதே!
பாடியவர்:
பெருங்குன்றூர்கிழார்
வையாவிக் கோப்பெரும் பேகன் தன் மனைவியைத் துறந்து
வாழ்வதைக் கேள்வியுற்று, அவனுக்கு அறிவுரை கூறிய புலவர்களில் பெருங்குன்றூர் கிழாரும்
ஒருவர். இவர் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பாடிப் பரிசில் பெற்றவர். பின்னர்
குடக்கோப் பெருஞ்சேரலிரும்பொறையைக் கண்டு, தம் வறுமையை எடுத்துரைத்தார். ஆனால், குடக்கோப்
பெருஞ்சேரலிரும்பொறை இவருக்குப் பரிசு எதுவும் அளிக்கவில்லை. அதனால் வருத்தமுற்ற பெருங்குன்றூர்
கிழார், குடக்கோப் பெருஞ்சேரலிரும்பொறையின் தம்பியாகிய இளஞ்சேரலிரும்பொறையைக் காணச்
சென்றார். அவன் இவரை நன்கு வரவேற்றுச் சிறப்பித்தான். இவர் அவனைப் புகழ்ந்து பதிற்றுப்பத்தின் ஒன்பதாம்
பத்தைப் பாடினார். அதனால் பெருமகிழ்ச்சியுற்ற இளஞ்சேரலிரும்பொறை,
இவருக்கு முப்பத்தீராயிரம் பொற்காசுகளைக் கொடுத்துச் சிறப்பித்தான். இவர் நற்றிணையில்
நான்கு பாடல்களும், குறுந்தொகையில் ஒரு பாடலும், அகநானூற்றில்
ஒரு பாடலும், புறநானூற்றில் ஐந்து பாடல்களும், பதிற்றுப்பத்தில்
பத்துப்
பாடல்களும் இயற்றியுள்ளார்.
திணை:
குறிஞ்சி
துறை:
தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.
துறை விளக்கம்: தலைவன் (கணவன்) பொருள் ஈட்டுவதற்காகத் தன்னைப் பிரிந்து
செல்ல எண்ணுவதை அறிந்து வருந்திய தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுவது.
பாடலின் பின்னணி:
மலைநாட்டில்
கார்மேகம் சூழ்ந்து பெருமழை பொழிந்தது. மழைநீரால் நிலம் நனைய, குன்றுகளின்
இடுக்குகளில் இருந்த சுனைகள் நிரம்பி வழிகின்றன.
அவற்றின் கரைகளில் பசுமையாக வளர்ந்த பயிர்கள் காற்றில் அசைகின்றன.
குறவர்கள் வெட்டிப்போட்ட நறவுக் கொடிகள் (வாசனைத் துளிர்கள்), மழையினால் மீண்டும்
உயிர் பெற்று, நறுமணமிக்க வைரம்பாய்ந்த சந்தன மரங்களைச் சுற்றிக்கொண்டு மேலே ஏறித்
துளிர்க்கின்றன. இயற்கை முழுவதும் புத்துயிர் பெற்று, மலைநாடு பசுமையும் மணமும்
நிறைந்த பேரழகுடன் விளங்குகிறது. குளிர்காற்று மழையின் ஈரத்தையும் மலர்களின்
நறுமணத்தையும் தன்னோடு சுமந்து வருகிறது.
இத்தகைய
காலத்தில், கணவனைப் பிரிந்து வாழ வேண்டிய நிலை தலைவிக்குப் பெரும் துயரமாக
இருக்கிறது. தோழி அந்த இயற்கைக் காட்சிகளைச் சுட்டிக்காட்டி, “இத்தகைய காலத்தில்
பிரிவை ஏற்றுக்கொள்வது மிகவும் அரிது. இப்போது வீசும் குளிர்காற்றே உன் கண்களில்
கண்ணீரை வரவழைக்கும் துயரத் தூதாக மாறிவிடும். ஆகையால், இப்பொழுது உன் கணவர்
உன்னைவிட்டுப் பிரிந்து செல்ல மாட்டார். “ என்று
கூறுகிறாள்.
நிலம்
நீர் ஆர குன்றம் குழைப்ப
அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்பக்
குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்
நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்பப்
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி 5
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்
அரிதே காதலர்ப் பிரிதல் இன்று செல்
இளையர்த் தரூஉம் வாடையொடு
மயங்கு இதழ் மழைக் கண் பயந்த தூதே
அருஞ்சொற்பொருள்:
1. ஆர – நிரம்பப் பெற்று ; குழைப்ப –
தழைக்க
2. அகல் -அகன்ற; பைஞ்சுனை – பசிய சுனை;
கால்யாப்ப – நெருங்கி வளர
3. குறைக் கொடி - வெட்டப்பட்டகொடி; நறை
– அடர்ச்சியான மணமுள்ள ஒருவகைக்கொடி;
4. ஆரம் - சந்தனம்; அகைப்ப – வளர, படர
5. பெயல் - மழை; தொழில - தொழிலையுடைய;
எழிலி – மேகம்
6. ஏர்பு - எழுச்சி; இரங்கும் -
ஒலிக்கும்; அற்சிரம் – முன்பனிக்காலம்; காலை – காலத்தில்
8. தரூஉம் - தரும்; வாடை – வாடைக்
காற்று
9. மயங்கும் - வருந்தும்; பயத்தல் -
உண்டாதல்
பதவுரை:
1.
நிலம் நீர் ஆர குன்றம் குழைப்ப - நிலம்
நீரால் நிரம்பப்பெற்று, மலையில் உள்ள மரம் செடி தழைப்ப
2.
அகல் வாய் பைம் சுனை பயிர் கால்யாப்ப - அகன்ற
வாயையுடைய பசிய சுனையில் நீர் நிறைந்ததால் அங்குள்ள பயிர் நெருங்கி வளர
3.
குறவர் கொன்ற குறை கொடி நறைப் பவர் - குறவர்கள்
வெட்டிப்போட்டதால் குறைவுபட்ட நறைக்கொடி
4.
நறும் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப - நறுமணமிக்க
வயிரம் பாய்ந்த சந்தனமரத்தைச் சுற்றிக்கொண்டு படர
5.
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி - பெருமழையைப்
பொழிந்த தொழிலையுடைய மேகங்கள்
6.
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிர காலையும்
- தெற்குப்பக்கமாய் எழுந்து முழங்கும் முன்பனிக்காலத்தில்
7.
அரிதே காதலர் பிரிதல் இன்று செல - அரிதானதாகும்
உன் காதலர் உன்னைவிட்டுப் பிரிதல்; இன்று, செல்லும்
8.
இளையர் தரூஉம் வாடையொடு – இளைஞரைச் செல்லாமல் செய்யும் வாடைக்காற்றினால்
9.
மயங்கு இதழ் மழை கண் பயந்த தூதே - வருந்துகின்ற
இமைகளில் மழைபோல் நீரைச் சிந்தும் உன் கண்கள் தூதை விடுத்தன.
கொண்டுகூட்டு: அற்சிரக்காலையும்
வாடையும் மழைக்கண்ணும் தூது பயந்தன; ஆகலான், பிரிதல் அரிது; செலவும் இன்று எனக்
கூட்டுக.
உரை:
தோழீ! மழைக்காலத்தில் நிலம் நீர் நிரம்பப்பெற்று நீரை முழுமையாகப் பருகியது;
மலைகள் யாவும் பச்சைப் பசேலெனத் தழைத்தன. அகன்ற வாயைக் கொண்ட குளிர்ந்த சுனைகளில்
நீர் நிறைந்ததால் அங்குள்ள பயிர்கள் நெருங்கி வளர்ந்தன. குறவர்கள் வெட்டிப்போட்ட
நறவுக் கொடிகள் (வாசனைத் துளிர்கள்), மழையினால் மீண்டும் உயிர் பெற்று, நறுமணமிக்க
வைரம்பாய்ந்த சந்தன மரங்களைச் சுற்றிக்கொண்டு மேலே ஏறித் துளிர்த்தன. இவ்வாறு
தகுந்த காலத்தில் பெருமழையைப் பொழிந்து தன் கடமையை முடித்த மேகங்கள், இப்போது
தெற்கு நோக்கிச் சென்று இடி முழக்கம் செய்கின்றன. அத்தகைய மழைக்காலம் முடிந்து
அற்சிரக் காலம் (முன்பனிக்காலம் / குளிர்காலம்) தொடங்கிவிட்டது. இந்தக்
குளிர்காலத்தில் காதலியைப் பிரிந்து செல்வது என்பது மிகவும் அரிதான (முடியாத)
காரியம். வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கும் இளைஞர்களை எல்லாம் (குளிர் தாங்க
முடியாமல்) தம் மனைவியரிடம் திரும்பி வரச் செய்யும் வாடைக் காற்று வீசுகிறது. இந்த
வேளையில், உன்னுடைய குளிர்ச்சி பொருந்திய கண்கள் சிந்தும் கண்ணீர்தான், தலைவன்
பிரியாமல் இருக்க அவரிடம் நீ அனுப்பும் தூது.
Comments
Post a Comment