4. கொண்டும் செல்வர் கொல்?

 

4. கொண்டும் செல்வர் கொல்?

 

பாடியவர்: அம்மூவனார்

இவர் குறுந்தொகையில் பதினொரு பாடல்களும் (49, 125, 163, 303, 306, 318, 327, 340, 351, 397, 401), ஐங்குறுநூற்றில் 100 பாடல்களும், அகநானூற்றில் ஆறு பாடல்களும் ( 10, 71, 35, 140, 280, 370, 390), நற்றிணையில் பத்துப் பாடல்களும் ( 4, 35, 76, 138, 275, 307, 315, 327, 395, 397) இயற்றியவர். இவர் சேரன், பாண்டியன் ஆகிய இருவேந்தர்களாலும், திருக்கோவலூரை ஆண்ட காரி என்னும் வள்ளலாலும் ஆதரிக்கப்பட்டவர். சேர நாட்டுக் கடற்கரைப் பட்டினமாகிய தொண்டியும், அந்நாட்டிலிருந்த மரந்தை என்னும் நகரமும், பாண்டி நாட்டுக் கடற்கரைப் பட்டினமாகிய கொற்கையும், நடுநாட்டில் இருந்த கோவலூரும் இவரால் பாராட்டப்பட்டதால் இவர் அந்நகரங்களில் இருந்தவர் என்றும், இவர் காலத்தில் அவைகள் மிக்க விளக்கமுற்றிருந்தன என்றும் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

 

திணை: நெய்தல்

 

துறை: தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது

துறை விளக்கம்: தலைவன் மறைவாக இருக்கும்பொழுது, ஊர்மக்கள் பேசிக்கொள்ளும் அலருக்கு (பழிச்சொல்லுக்கு) அஞ்சி, தோழி அவனிடம் ”விரைந்து தலைவியைத் திருமணம் செய்துகொள்” என்று அவன் கேட்குமாறு வற்புறுத்துவது.

 

பாடலின் பின்னணி:

பரதவர் புன்னையின் நிழலிருந்து, கடலிற் செல்வதற்குப் பரதவர் தக்க நேரம் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நெய்தல் நிலத்து இளைஞன் ஒருவன் தன் காதலியைக் காண்பதற்காக இரகசியமாக அங்கே வந்து மறைவான இடத்தில் காத்திருக்கிறான். அலைகளின் ஓசையோடு தன் காதலனின் நினைவும் நெஞ்சில் மோத, தலைவி தன் தோழியுடன் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தாள். தலைவன் மறைந்திருப்பதை உணர்ந்த தோழி, காதலர்களின் சந்திப்பு இனி எளிதாக இருக்காது என்பதை அவனுக்குச் சுட்டிக்காட்ட விரும்பினாள்.

"தோழீ! இக்கடற்கரைத் தலைவனோடு நமக்கு இருக்கும் இக்காதல் உறவு ஊரறியப் பரவிவிட்டது," என்று தொடங்கினாள் தோழி.  " உப்பை ஏற்றிச் செல்லும் உமணர்களின் வண்டிச் சக்கரங்கள் மணலில் உருளும் பேரொலியைக் கேட்டு, வயலில் இருக்கும் வெண் நாரைகள் அஞ்சிப் பறக்கும் சிறப்புமிக்க நிலத்திற்கு உரியவன் இவன். இவன் மீதுள்ள காதலை அன்னை அறிவாளானால், நம் வீட்டின் கதவுகள் மூடப்படும்; வெளியில்கூட வர முடியாது. அன்னைக்குத் தெரியும் முன், இவன் உன்னை மணந்துகொண்டு தன் சொந்த ஊருக்கு முறைப்படி அழைத்துச் செல்வானா?" என்று மறைந்திருக்கும் தலைவனின் செவிகளில் விழுமாறு தோழி கேட்கிறாள்.

கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்
நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇத்
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு
அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை        5
அரிய ஆகும் நமக்கு எனக் கூறின்
கொண்டும் செல்வர்கொல் தோழி உமணர்
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்               10
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்
கருங் கால் வெண் குருகு வெரூஉம்
இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே

அருஞ்சொற்பொருள்:

1. கானல் - கடற்கரைச்சோலை; மேம் - மேல்; பரதவர் – நெய்தல் நிலமக்கள்

2. நீல் - நீல; கொழு - அடர்ந்த; அசைஇ – தங்கி

3. தண் – குளிர்ந்த; பரப்பு – கடற் பரப்பு; ஒண்பதம் – தக்க சமயம்

4. அம் - அழகிய; கண் – துளை; அரில் – முறுக்கேறிய; உணக்கும் – காயவைக்கும்; துறைவன் – நிலத் தலைவன்

5. அலர் – ஊராரின் பழிச்சொற்கள்; இவண் – இங்கு

6. அரிய ஆகும் – அரிதாகும்

7. உமணர் – உப்பு வணிகர்

8. கொள்ளை - விலை; சாற்றி – கூறி

9. கிளர்க்கும் - எழுப்பும்; நெடு நெறி – நீண்ட வழி; சகடம் – வண்டி

10. உரறும் – ஒலிக்கும்; கழனி – வயல்

11. வெரூஉம் -அஞ்சும்

12. இரும் - கரிய; கழி - உப்பங்கழி; சேர்ப்பு – இடம்;

உறைவின் (உறைவு+இன்) – வாழ்வதற்கு இனிய

 

பதவுரை:

1. கானல் அம் சிறுகுடி கடல் மேம் பரதவர் - கடற்கரைச் சோலையிடத்தே அமைந்த அழகான சிறுகுடியில் வாழும் கடற்மேற்செல்லும் பரதவர்கள்

 

2. நீல் நிற புன்னை கொழு நிழல் அசைஇ - நீல நிறப் புன்னையின் அடர்ந்த  நிழலில் தங்கி,

3. தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி - குளிர்ந்த பெரிய கடற்பரப்பில் செல்வதற்குரிய நேரம் பார்த்து

4. அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு - அழகிய துளைகளையுடைய  முறுக்கேறிய வலைகளைக் காயவைக்கும் கடற்கரைக்குரிய தலைவனுடன்

5. அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை - ஊராரின் பழிச்சொற்களை அன்னை அறிந்தால் இங்கு வாழ்வது

6. அரிய ஆகும் நமக்கு என கூறின் - நமக்குக் கடினம் ஆகும் என்று கூறினால்

7. கொண்டும் செல்வர்கொல் தோழி உமணர் - நம்மை அழைத்துக்கொண்டு செல்வாரோ? தோழி! உப்பு வணிகர்

8. வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி - வெள்ளைக்கல்லான உப்பின் விலையைக் கூவிக்கூறி

9. கண நிரை கிளர்க்கும் நெடு நெறி சகடம் – கூட்டாமாகிய தங்கள் எருதுகளைச் செலுத்தும் நீண்ட வழியில் வண்டியின் உருளைகள்

10. மணல் மடுத்து உரறும் ஓசை கழனி - மணலைத் தேய்த்து எழுப்பும் பேரொலியைக் கேட்டு, வயல்வெளிகளிலுள்ள

11. கரும் கால் வெண் குருகு வெரூஉம் - கரிய கால்களையுடைய வெள்ளை நாரைகள் அஞ்சும்

12. இரும் கழி சேர்ப்பின் தம் உறைவு இன் ஊர்க்கே - கரிய கழிசூழ்ந்த நெய்தல் நிலத்தில் உள்ள தம்முடைய வாழ்தற்கு இனிதாகிய ஊருக்கு

 

கொண்டுகூட்டு: தோழீ! அலர்‌ அன்னை அறியின்‌ இவணுறை வாழ்க்கை அரிது என்று கூறில்‌ தலைவர்‌ கொண்டு செல்வர்‌ கொல்‌, என முடிக்க.

 

உரை:

தோழீ! கடற்கரைச் சோலையிடத்தே அமைந்த அழகான சிறுகுடியில் வாழும் கடற்மேற் செல்லும் பரதவர்கள் நீல நிறப் புன்னையின் அடர்ந்த  நிழலில் தங்கி, குளிர்ந்த பெரிய கடற்பரப்பில் செல்வதற்குரிய நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்; தங்களின் அழகிய முறுக்கேறிய வலைகளைக் காயவைப்பார்கள். அத்தகைய நெய்தல் நிலத்திற்குரிய தலைவனுடன் உனக்குள்ள நட்பைப் பற்றி ஊரார் கூறும் பழிச்சொற்களை அன்னை அறிந்தால் இங்கு வாழ்வது நமக்குக் கடினம் ஆகும். உப்பு வணிகர் உப்பின் விலையைக் கூவிக்கூறித் தங்கள் எருதுகளைச் செலுத்தும் நீண்ட வழியில், வண்டிகளின்  உருளைகள் மணலைத் தேய்த்து எழுப்பும் பேரொலியைக் கேட்டு, வயல்வெளிகளிலுள்ள, கரிய கால்களையுடைய வெள்ளை நாரைகள் அஞ்சும். அத்தகைய கரிய கழிசூழ்ந்த நெய்தல் நிலத்தில் உள்ள, தம்முடைய வாழ்தற்கு இனிய ஊருக்கு உன்னை அழைத்துச் செல்வாரா?

 

சிறப்புக் குறிப்பு:

இப்பாடலில் உள்ளுறையாக ஒரு செய்தி கூறப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.  பரதவர் புன்னையின் நிழலிருந்து, கடலிற் செல்வதற்குப் பரதவர் தக்க நேரம் பார்த்துக் காத்திருப்பது தலைவன் மறைவான இடத்திலிருந்து, தலைவியைக் கூடுவதற்கேற்ற நேரத்திற்காகக் காத்திருப்பதைக் குறிக்கிறது.

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே

28. கள்வர்போலக் கொடியன்!