39. காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ!
39. காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ!
பாடியவர்: மருதன் இளநாகனார்
இவரை மதுரை மருதன் இளநாகனார் என்றும் கூறுவர். இவர் மருதத்திணைப்
பாடல்களை இயற்றுவதில் வல்லவர். இவர் தந்தையின் பெயர் மருதன். ஆகவே, தந்தையின் பெயர்
காரணமாகவும் மருதத்திணைக்குரிய பாடல்களை இயற்றியதாலும் இவர் மருதன் இளநாகனார் என்று
அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவரது இயற்பெயர் இளநாகன். இவர் புறநானூற்றில்
ஐந்து செய்யுட்களும், அகநானூற்றில் 23 செய்யுட்களும், கலித்தொகையில் மருதக்கலி எனப்படும்
35 செய்யுட்களும், குறுந்தொகையில் 4 செய்யுட்களும், நற்றிணையில் 12 செய்யுட்களும் இயற்றியுள்ளார்.
திணை: குறிஞ்சி
துறை: இரண்டாம்
கூட்டத்து எதிர்ச்சியில் தலைவன் சொல்லியது.
துறை விளக்கம்: தலைவனும்
தலைவியும் முதன்முதலில் சந்தித்துக் கூடிய பின்னர் (இயற்கைப் புணர்ச்சி), மீண்டும்
அதே இடத்தில் சந்திக்கின்றனர் (இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சி / இடந்தலைப்பாடு). அப்போது
நாணத்தால் தலைகுனிந்து நிற்கும் தலைவியைப் பார்த்து, அவளது பேரழகையும் தன் காமத்தின்
மிகுதியையும் புலப்படுத்தித் தலைவன் கூறியது.
பாடலின் பின்னணி:
தலைவன் தலைவியைக் கண்டு காதல் கொள்கிறான். பின்னர்
ஆவலோடு மீண்டும் அதே இடத்திற்கு வருகிறான். அவனைக் கண்டதும், பேசுவதற்குச் சொற்களின்றி நாணத்தால் தன் முகத்தைக் கீழ்நோக்கிக்
குனிந்து கொள்ளும் தலைவியின் இயற்கை அழகில் அவன் மெய்மறக்கிறான். அவளது பேரழகால் மயங்கிய
அவன், தன் காதலின் மிகுதியை வெளிப்படுத்துகிறான். ஆனால் நாணம் மிகுந்த தலைவி நேரடியாக
ஒப்புதல் அளிக்காமல் அமைதியாக நிற்கிறாள். அதனால் தலைவன், தன் காமம் அளவுகடந்து பெருகிவிட்ட
நிலையில் அதை இனி அடக்க முடியாது என்று கூறுகிறான். அவளுடைய சிவந்த கடைக்கண்களும் அழகிய
தோள்களும் தன்னை வருத்துவதாகக் கூறுகிறான்.
சொல்லின்
சொல் எதிர் கொள்ளாய் யாழ நின்
திரு முகம் இறைஞ்சி நாணுதி கதுமென
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ
கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்தி
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் 5
தலை மருப்பு ஏய்ப்ப கடை மணி சிவந்த நின்
கண்ணே கதவ அல்ல நண்ணார்
அரண் தலை மதிலர் ஆகவும் முரசு கொண்டு
ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன்
பெரும் பெயர் கூடல் அன்ன நின் 10
கரும்புடைத் தோளும் உடைய வால் அணங்க
அருஞ்சொற்பொருள்:
1. யாழ – அசைநிலை
2. இறைஞ்சி – முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு;
நாணுதி – நாணமடைகிறாய்; கதுமென – விரைவாக
3. கைம்மிகின் - கைமீறிப்போனால்
4. கொடுங் கேழ் – வளைந்த
வரிகளையுடைய; இரும் – பெரிய; புறம் – முதுகு
5. புலவு – புலால்; வேழம்
– யானை
6. மருப்பு – கொம்பு
(தந்தம்); ஏய்ப்ப – போல; கடைமணி – கண்ணின் ஓரம், கடைக்கண்
7. கதவுதல் – சினமடைதல்;
நண்ணார் – பகைவர்
8. அடுதல் – அழித்தல்
9. கூடல் – மதுரை நகரம்
10. உடையவால் அணங்கு -
வருத்துதலை உடையன (ஆல் – அசைநிலை)
பதவுரை:
1. சொல்லின் சொல் எதிர் கொள்ளாய் யாழ நின்
- நான் ஒரு சொல் சொன்னால் அதற்கு எதிர்சொல் ஏதும் நீ கூறமாட்டாய்; உனது
2. திரு முகம் இறைஞ்சி நாணுதி கதுமென - அழகிய
முகம் கவிழ்ந்து நாணுகின்றாய்; விரைவாகக்
3. காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ - காமம்
கைமீறிப் போனால் அதனைத் தாங்கிக்கொள்ளுதல் எளிதோ?
4. கொடுங் கேழ் இரும் புறம் நடுங்க குத்தி
- வளைந்த நிறக்கோடுகளைக் கொண்ட பெரிய முதுகு நடுங்கக் குத்திப்
5. புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின்
– புலியைத் தாக்கியதால் புலால் நாறும் யானையின்
6. தலை மருப்பு ஏய்ப்ப கடை மணி சிவந்த நின்
- கொம்பினைப்போல் ஓரங்கள் சிவந்த உன்
7. கண்ணே கதவ அல்ல நண்ணார் - கண்கள் மட்டுமா சினம் மிகுந்தன?
அல்ல; பகைவர்கள்
8. அரண் தலை மதிலர் ஆகவும் முரசு கொண்டு
- கோட்டையின் உச்சி மதிலிலே இருக்கும் பகைவரை வென்று அவரின் முரசைக் கைப்பற்றி
9. ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன் -
அவர் காத்துநின்ற அரணையும் வென்று அழிக்கின்ற போரினையுடைய
10. பெரும் பெயர்
கூடல் அன்ன நின் - பெரும் புகழ்பெற்ற கூடல் மாநகரைப் போன்ற உன்னுடைய
11. கரும்பு உடை தோளும் உடையவால் அணங்கே
- கரும்பு உருவம் வரையப்பட்ட தோள்களும் என்னை
வருத்துதலை உடையன.
கொண்டு கூட்டு: சொல்லின் சொல் எதிர்கொள்ளாய், கதுமெனத்
திருமுகம் இறைஞ்சி நாணுதி; காமம் தாங்குதல் எளிதோ; குத்தி விளையாடிய வேழத்தின்
மருப்பு ஏய்ப்பக் கண்மணி சிவந்த நின் கண்ணே கதவ அல்ல; கூடல் அன்ன நின் கரும்புடைத்
தோளும் அணங்குடைய; அறிவாயாக எனக் கூட்டுக.
உரை:
நான் கூறும் சொற்களுக்கு எதிர்சொல்
எதுவும் நீ சொல்லவில்லை. உன் அழகிய முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு, நீ விரைவாக வெட்கப்படுகின்றாய். காமம் கைமீறிப்
போனால் அதைத் தாங்குதல் எளிதோ?
வளைந்த வரிகளையுடைய பெரிய முதுகு நடுங்குமாறு புலியைத் தாக்கியதால் புலால் நாற்றம்
உடைய யானையின் தலையில் உள்ள குருதி படிந்த தந்தம் போன்ற உன் சிவந்த கடைக்கண்கள் என்னை வருத்துகின்றன.
அவை மட்டும் என்னை வருத்துவன அல்ல.
பகைவர்களின் கோட்டையில் உள்ள மதிலைக் கடந்து அவர்களுடைய முரசைக் கைப்பற்றி
அவர்களால் பாதுகாக்கப்பட்ட அரண்களை அழித்துப் போரில் பகைவரைக் கொல்லும்
பாண்டியனின் பெரும்புகழ் பெற்ற மதுரை நகரை ஒத்த உன்னுடைய கரும்பு வரையப்பட்ட
தோள்களும் என்னை வருத்துகின்றன.
சிறப்புக் குறிப்பு:
’கரும்புடைத் தோள்’ என்பது, மகளிரின் தோளில்
காமனது கரும்புவில்லைப் போன்ற உருவத்தைச் சந்தனக் குழம்பால் வரைந்து அழகு செய்வது பழங்காலத்து
மரபு என்பதைக் குறிக்கிறது என்று சில உரையாசிரியர்கள் கருதுகின்றனர்.
Comments
Post a Comment