37. அகறிர் ஆயின் என் பரம் ஆகுவது அன்று!
37. அகறிர் ஆயின் என் பரம் ஆகுவது அன்று!
பாடியவர்: பேரிசாத்தனார்
இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல்
25-ன் உரையில் காணலாம்.
திணை:
பாலை
துறை: வரைவிடை
வைத்துப் பிரியக் கருதும் தலைமகற்குத் தோழி சொல்லியது.
துறை விளக்கம்: திருமணம்
செய்துகொள்வதற்கான பொருளைத் தேடிப் பெற, சில காலம் பிரிந்து செல்ல நினைக்கும் தலைவனிடம்,
அவனுடைய காதலியின் நிலையை விளக்கித் தோழி கூறியது.
பாடலின் பின்னணி:
பொருளீட்டுவதற்காகத் தலைவன் பிரிந்து செல்ல
நினைப்பதை அறிந்த தலைவி, ஆண் மானைப் பிரிந்த பெண் மான்போலக் கலங்கி, நீரால் சூழப்பட்ட
குவளை மலரைப்போல் தன் அழகிய கண்களிலிருந்து கண்ணீர் வடித்து வருந்துகிறாள். மரங்கள் வறண்டு, புல் தேடும் பசுவின் மணியோசை மட்டும்
மெல்ல ஒலிக்கும் கொடிய காட்டு வழியாக இருந்தாலும், தலைவியையும் உடன் அழைத்துச் செல்வதே
நல்லது என்றும், மேகங்கள் இடியுடன் முழங்கி மழை பொழியும் கார் கால மாலைப் பொழுது அருகில்
வந்துவிட்ட இந்நேரத்தில் அவளைப் பிரிந்து சென்றால் அவள் அடையும் துயரத்தை தன்னால் பொறுத்துக்கொள்ள
முடியாது என்றும், அன்பில்லாதவனைப்போலத் தனியே செல்லும் எண்ணத்தைக் கைவிடுமாறும் தோழி
தலைவனிடம் எடுத்துரைக்கிறாள்.
பிணங்கு
அரில் வாடிய பழ விறல் நனந் தலை
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெள் மணி
பைபய இசைக்கும் அத்தம் வை எயிற்று
இவளடும் செலினோ நன்றே குவளை
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ 5
கலை ஒழி பிணையின் கலங்கி மாறி
அன்பிலிர் அகறிர் ஆயின் என் பரம்
ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்து
அணங்குடை அருந் தலை உடலி வலன் ஏர்பு
ஆர் கலி நல் ஏறு திரிதரும் 10
கார் செய் மாலை வரூஉம் போழ்தே
அருஞ்சொற்பொருள்:
1. பிணக்கம் – பின்னிக்கிடத்தல்; அரில் – புதர்;
பழ - பழைய; விறல் – பெருமை; நனந்தலை – அகன்ற இடம்
2. உணங்குதல் – மெலிதல்,
காய்தல், வாடல் ; ஆயம் -
கூட்டம்; ஆன் – பசுமாடு; தெள்மணி – தெளிவான ஒலியெழுப்பும் மணி
3. பைபய - மெல்ல; அத்தம் – காட்டு வழி; வை
– கூர்மை. எயிறு – பல்
4. செலினோ - சென்றால்; குவளை – குவளை மலர்
5. மா – பெரிய
6. கலை – ஆண் மான்; பிணை – பெண் மான்; மாறி
– மாறுபட்டு
7. அன்பிலிர் – அன்பில்லாதவராய்; அகறிர் –
பிரிந்து சென்றீர்; பரம் – பாரம், பொறுப்பு
8. அவலம் – துன்பம், வருத்தம்
9. அணங்கு - வருத்தம்; அருந்தலை – அரிய தலை;
உடலி – சினந்து; வலன் ஏர்பு –வலமாக எழுந்து
10. ஆர்கலி – மிகுந்த முழக்கம்; திரிதரும்
– திரியும்
11. கார் – கார்காலத்து மழை; வரூஉம் – வரும்;
போழ்து – பொழுது
பதவுரை:
1. பிணங்கு அரில் வாடிய பழ விறல் நனந்தலை
- பின்னிக்
கிடக்கும் புதர்கள் காய்ந்துபோன பழமையான பெருமையுடைய அகன்ற இடத்தில்
2. உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெள்மணி - காய்ந்துபோன
புல்லைத் தின்னும் பசுக்கூட்டத்திலுள்ள ஒரு பசுவின் தெள்ளிய மணி
3. பைபய இசைக்கும் அத்தம் வை எயிற்று - மெல்ல
இசைக்கும் காட்டுவழியில், கூர்மையான பற்களைக்கொண்ட
4. இவளொடும் செலினோ நன்றே குவளை - இவளோடு சென்றால் நலமாக
இருக்கும்; குவளை மலரின்
5.
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ - நீர் சூழ்ந்த பெரிய மலர் போன்ற கண்கள் அழும்படியாக
6. கலை ஒழி பிணையின் கலங்கி மாறி - ஆண்மானைப்
பிரிந்த பெண்மானைப்போலக் கலங்கி, மனம் மாறி
7. அன்பு இலிர் அகறிர் ஆயின் என் பரம் - அன்பு
இல்லாதவராய்ப் பிரிந்து சென்றீராயின், என் பொறுப்பாக
8. ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்து - ஆவது
அன்று இவளது துன்பம்; பாம்பினுடைய
9. அணங்கு உடை அரும் தலை உடலி வலன் ஏர்பு
- துன்பம் தரும் அரிய தலையைச் சினந்து தாக்குமாறு, வலமாக எழுந்து
10. ஆர் கலி நல் ஏறு திரிதரும் - மிகுந்த முழக்கமுடைய
மேகம் இடியுடன் முழங்கித் திரியும்
11. கார் செய் மாலை வரூஉம் போழ்தே - கார்காலத்து
மாலைப்பொழுது வரும் பொழுது
கொண்டு கூட்டு: இவளொடு செல்லின் நன்று; மாறி, கலங்கிக்
கண்ணழ, அன்பிலிர் அகறிராயின், இவள் அவலம், கார் செய் மாலை வரூஉம்பொழுது என் பரம்
ஆகுவதன்று எனக் கூட்டுக.
உரை:
மரங்களும் புதர்களும்
காய்ந்து பின்னிக் கிடக்கும் அகன்ற காட்டு வழியில், மேய்ச்சலுக்கு உணவின்றி வாடும்
பசுக்கூட்டத்தின் ஒரு பசுவின் கழுத்து மணி மெதுவாக ஒலித்துக் கொண்டிருக்கும்.
கூரிய பற்களை உடைய இவளையும் உன்னோடு அத்தகைய வழியில் அழைத்துச் சென்றால் அதுவே
நல்லது! அவ்வாறு செய்யாமல், நீர் சூழ்ந்த கரிய குவளை மலர் போன்ற இவளது கண்கள்
கண்ணீரைச் சிந்த, ஆண் மானைப் பிரிந்த பெண்மான்போல இவள் கலங்கி நிற்க, நீ அன்பு
இல்லாதவனாகப் பிரிந்து சென்றால், பாம்பின்
தலையை அச்சுறுத்தும் வகையில் இடி முழங்கி, கார்காலத்து மாலைப் பொழுது வரும்போது
இவள் அடையும் அளவற்ற துயரத்தை என்னால் பொறுத்துக்கொள்ள இயலாது.
சிறப்புக் குறிப்பு:
”உணங்கு ஊண் ஆயத்து ஓரான்” என்பது, தலைவன் செல்லும் இடம் வறண்ட காட்டு நிலம் ஆகையால்,
அங்கு மேயும் பசுக்கூட்டம் தழைகளைத் தேடி உண்பதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தனித்துத்
தோன்றும் என்பதைக் குறிக்கிறது. ”தெள்மணி பைபய இசைக்கும்” என்பது, தலைவன் செல்லும் வழி வறண்ட காட்டு வழியாகையால், அங்குள்ள பசுக்கள்
உணவில்லாமல் பசியால் வாடி, மெதுவாக நடக்கும் என்பதைக் குறிக்கிறது.
Comments
Post a Comment