36. என் இழந்தது இவ் அழுங்கல் ஊரே?

 

36. என் இழந்தது இவ் அழுங்கல் ஊரே?

 

பாடியவர்: சீத்தலைச் சாத்தனார்

சங்க இலக்கியப் பாடல்களைப் பாடிய புலவர்கள் பட்டியலில், நற்றிணையில் மூன்று பாடல்களை (36, 127, 339) இயற்றியவரின் பெயர் 'சீத்தலைச் சாத்தனார்' என்றும், குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு ஆகிய நூல்களில் உள்ள பாடல்களை இயற்றிய புலவரின் பெயர் 'மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்' என்றும் காணப்படுகிறது. சிலர், 'சாத்தனார்' என்ற பெயர் கொண்ட புலவர் இருவரும் ஒருவரே என்றும், வேறு சிலர், இருவரும் வெவ்வேறான புலவர்கள் என்றும் கருதுகின்றனர். இவரே மணிமேகலைக்  காப்பியத்தைப் பாடியவராக இருக்கக்கூடும். 

 

திணை: குறிஞ்சி

 

துறை: இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது

 

துறை விளக்கம்:

தலைவன் தலைவியை இரவு நேரத்தில் சந்திக்க வரும் ‘இரவுக்குறி’ நிகழ்வில், அவன் வேலியின் புறத்தே மறைந்து நிற்பதை அறிந்த தோழி, அவனுக்குக் கேட்கும்படி தலைவியிடம் பேசுவதுபோல உரக்கக் கூறி, விரைந்து திருமணம் செய்து கொள்ளுமாறு (வரைவு கடாதல்) வற்புறுத்துகிறாள்.

 

பாடலின் பின்னணி:

இப்பாடல், இரவு நேரத்தில் ஆபத்தான மலைவழியே தன்னைத் தேடிவரும் தலைவனின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த தலைவியின் கவலையையும், ஊராரின் பழிச்சொல்லையும் விளக்கும் பின்னணியைக் கொண்டது. குறுகிய முன்னங்கால்களையும், வேட்டையாடுவதில் வல்லமையையும் உடைய ஆண் புலியானது, அழகிய நெற்றியைக் கொண்ட பெண் யானை கதறி அழும்படியாக, அகன்ற நிலப்பரப்பில் அதன் பெரிய ஆண் யானையைத் தாக்கி அழிக்கும் கரடுமுரடான மலைநாட்டிற்குரியவன் தலைவன். அவனது பொய்வார்த்தைகளை மெய்யென நம்பிக் காதலித்ததால், தலைவி தன் அழகையும் பொலிவையும் இழந்து துன்புறுகிறாள். அதே வேளையில், நள்ளிரவிலும் உறங்காமல் வாய் ஓயாது பழிபேசும் ஊர்ப்பெண்கள், ஒன்றுகூடி குற்றமற்ற காதலர்களின் காதலைப் பற்றித் தேவையற்ற அவதூறுகளைப் பரப்புகிறார்கள். இவ்வாறு பழிதூற்றி ஆரவாரம் செய்யும் இந்த ஊரார், இதனால் எதையும் இழக்கப்போவதில்லை; மாறாக, தன் நலனையும் மன அமைதியையும் இழந்து தவிப்பது தலைவி மட்டுமே என்பதைத் தோழி தலைவன் கேட்குமாறு தலைவியிடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

 

குறுங் கை இரும் புலிக் கோள் வல் ஏற்றை
பூ நுதல் இரும் பிடி புலம்ப தாக்கி
தாழ் நீர் நனந் தலை பெருங் களிறு அடூஉம்
கல்லக வெற்பன் சொல்லின் தேறி
யாம் எம் நலன் இழந்தனமே யாமத்து                 5
அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து
ஆனா கௌவைத்து ஆக
தான் என் இழந்தது இல் அழுங்கல் ஊரே

 

அருஞ்சொற்பொருள்:

1.குறுங் கை - குறுகிய (குட்டையான) முன்னங்கால்கள்; இரும்  - பெரிய;

கோள்வல் - இரையைக் கொல்லும் வல்லமை பெற்ற; ஏறு – ஆண் புலி

2. பூ நுதல் – புள்ளிகளையுடைய நெற்றி; இரும் – பெரிய; பிடி – பெண் யானை;

புலம்ப – வருந்த

3. தாழ் நீர் – ஆழமான நீர்; நனந்தலை – அகன்ற இடம்; களிறு – ஆண் யானை; அடூஉம் – கொல்லும்

4. கல்லக வெற்பன் – மலைநாட்டை உடைய தலைவன்

5. நலன் – அழகு; யாமம் - நள்ளிரவு

6. அலர் – வெளிப்படையாகப் பலரும் கூறும் பழிச்சொற்கள்; அம்பல் – மறைமுகமாக ஒரு சிலர் கூறும் பழிச்சொற்கள்

7. புரை – மேன்மை; தீ மொழி – தீய சொற்கள்

8. கௌவை – பழிச்சொற்கள்

9. அழுங்கல் – ஆரவாரம்

பதவுரை:

1. குறும் கை இரும் புலி கோள் வல் ஏற்றை - குட்டையான முன்னங்கால்களையுடைய பெரிய புலியின் கொல்லுதலில் வல்ல ஆண்புலி

2. பூ நுதல் இரும் பிடி புலம்ப தாக்கி – அழகிய நெற்றியையுடைய பெரிய பெண் யானை வருந்தும்படி தாக்கி

3.  தாழ் நீர் நனந் தலை பெருங் களிறு அடூஉம் – ஆழ்ந்த நீரையுடைய அகன்ற இடத்தில் பெரிய களிற்றினைக் கொல்லும்

4. கல் அக வெற்பன் சொல்லின் தேறி - பாறைகள் நிறைந்த மலைநாட்டு மலைநாட்டுத் தலைவனின் சொல்லை நம்பி

5. யாம் எம் நலன் இழந்தனமே யாமத்து - நாம் எம் பெண்மைநலத்தை இழந்தோம்!; நள்ளிரவிலும்,

6. அலர் வாய் பெண்டிர் அம்பலொடு ஒன்றி – வெளிப்படையாகப் பழிச்சொற்களைப் பேசும் வாயையுடைய பெண்டிரும் மறைமுகமாகத் தங்களுக்குள் பேசும் பெண்டிரும் ஒன்று சேர்ந்து

7. புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து - உயர்வற்ற தீய சொற்களைக் கூறுவதற்குரிய பேச்சுக்களை மேற்கொண்டு,

8. ஆனா கௌவைத்து ஆக - பொருந்தாத பழிச்சொற்களைப் பேசுவதாக ஆயிற்று என்றால்

9. தான் என் இழந்தது இவ் அழுங்கல் ஊரே - தான் எதை இழந்தது இந்த ஆர்ப்பரிக்கும் ஊர்?

 

உரை:

குறுகிய முன்னங்கால்களையும் வலிமையையும் உடைய ஆண் புலியானது, புள்ளிகளையுடைய நெற்றியைக் கொண்ட பெண் யானை கதறி அழும்படி தாக்கி, அகன்ற மலைச்சாரலில் உள்ள அதன் பெரிய ஆண் யானையைக் கொன்றுவிடும். இத்தகைய கொடூரமான மலைநாட்டைச் சேர்ந்த தலைவனின் வாக்குறுதிகளை நம்பி நாம் எங்களது மேனி அழகையும் பொலிவையும் இழந்துவிட்டோம்.

நள்ளிரவிலும் தூங்காது அலர் தூற்றும் வாயையுடைய ஊர்ப் பெண்டிர், ஒன்றுகூடித் தீய பழிச்சொற்களைப் பேசி ஓய்வில்லாமல் பேசி ஆரவாரிக்கின்றனர். எங்களைப் பழித்துப் பேசுவதால் இந்த ஊர் மக்கள் எதை இழக்கப் போகிறார்கள்?

 

சிறப்புக் குறிப்பு:

‘பெண் யானை கதறி அழும்படியாக, அதன் ஆண் யானையைப் புலி தாக்கி அழிக்கும் ஆபத்தான மலைநாட்டைச் சேர்ந்தவனே!’ என்பது, ’நீ இரவில் வருவதால், உனக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்துவிடுமோ என்று தலைவி மிகுந்த அச்சமும் துன்பமும் அடைகிறாள்’ என்பதைக் குறிக்கிறது. இரவில் திருட்டுத்தனமாக வருவதைக் கைவிட்டு, தலைவியை முறைப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தோழி தலைவன் கேட்குமாறு மறைமுகமாகக் கூறுகிறாள்.


 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே

28. கள்வர்போலக் கொடியன்!