35. இவள் கண் பசந்ததுவே!

 

35. இவள் கண் பசந்ததுவே!

 

பாடியவர்: அம்மூவனார்

இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 4-ன் உரையில் காணலாம்.

 

திணை: நெய்தல்

 

துறை: மணமனைப் பிற்றைஞான்று புக்க தோழி நன்கு ஆற்றுவித்தாய் என்ற தலைமகற்குச் சொல்லியது.

 

துறை விளக்கம்: திருமணத்திற்குப் பிறகு வீட்டிற்கு வந்த தோழியிடம், “களவுக் காதல் காலத்தில் நீ தலைவியை நன்றாக ஆறுதல் கூறித் தேற்றினாய்.” என்று தலைவன் கூறியதற்குத் தோழி அளித்த மறுமொழி.

 

பாடலின் பின்னணி:

தலைவனும் தலைவியும் முதலில் மறைவாகக் களவொழுக்கத்தில் காதலித்து, பின்னர் ஊரறிய மணம் முடித்து இல்வாழ்க்கையைத் தொடங்கினர். அவர்களின் புதிய வாழ்க்கையைக் காண வந்த தோழி, தலைவியின் மேனியில் ஏற்பட்ட மாற்றத்தையும், காதல் இன்பத்தின் மிகுதியால் கண்கள் பசலை நிறம் அடைந்ததையும் கண்டு மகிழ்ந்தாள். அதனைக் கண்ட தலைவன், "முன்பு நாம் மறைவாகக் காதலித்த காலத்தில் நான் பிரிந்திருந்தபோது நீதானே இவளைத் தேற்றி ஆறுதல் கூறினாய்? இப்போது நான் எப்போதும் இவளோடு இருப்பதால் உன் உதவி தேவையில்லை; அதனால்தான் இவள் கண்கள் நிறம்மாறித் தோன்றுகின்றன" என்று தோழியைப் புகழ்ந்தான். அதற்குத் தோழி, "தலைவனே! இவளது அழகு சேரனின் மாந்தை நகரைப்போல என்றும் மாறாதது; நீ தழுவியிருக்கும் கைகளைச் சற்று நெகிழ்த்தினாலும் இவள் மேனி வாடிவிடும்; கள்ளுண்டவருக்குக் கள்ளினால் வரும்  மயக்கம்போல, இன்பக் களிப்பால் கண்கள் நிறம்மாறுவது இந்தத் திருமண வாழ்க்கையின் அழகாகும்; மறைவாகக் காதலித்த பழங்காலத்திலும் இவள் இயல்பு இதுவேதான்" என்று மறுமொழி கூறினாள்; இக்காட்சியைப் புலவர் அம்மூவனார் இப்பாடலில் அழகாக எடுத்துரைக்கிறார்.

 

பொங்கு திரை பொருத வார் மணல் அடை கரைப்
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி
கிளை செத்து மொய்த்த தும்பி பழம் செத்துப்
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்                 5
இரை தேர் நாரை எய்தி விடுக்கும்
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம்
பண்டும் இற்றே கண்டிசின்தெய்ய
உழையின் போகாது அளிப்பினும் சிறிய
ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ மகிழ்ந்தோர்       10
கட்களி செருக்கத்து அன்ன
காமம்கொல் இவள் கண் பசந்ததுவே

 

அருஞ்சொற்பொருள்:

1. பொங்கு திரை – பொங்கி வரும் கடல் அலைகள்; வார் மணல் – நீண்ட/பரந்த மணற்பரப்பு

2. புன் கால் நாவல் – சிறிய அடியைக்கொண்ட நாவல் மரம்

3. செத்து –  கருதி; தும்பி – வண்டு

4. அலவன் – நண்டு; கோட்கு அசாந்து – வருந்தி

5. இமிரும் – ஒலிக்கும்; பூசல் – ஆரவாரம் செய்யும் ஒலி

7. மாந்தை - மாந்தை என்னும் சேரர் துறைமுக நகரம்

8. கண்டிசின் – காண்பாயாக; செருக்கம் - மயக்கம்

9. உழையின் போகாது – பக்கத்திலேயே இருந்து நீங்காமல்; அளிப்பினும் - அன்பு செய்தாலும்

10. ஞெகிழ்ந்த – தளர்ந்த; கவின் - அழகு

11. கட்களி -  கள்ளை உண்டதால் பெற்ற களிப்பு; செருக்கம் – மயக்கம்

12. பசந்தது – பசலை நிறம் அடைந்தது

 

பதவுரை:

1. பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரை – பொங்கி எழுகின்ற அலைகளால் அலைத்து ஒதுக்கப்பட்ட நீண்ட மணல் பரந்த கரையில் உள்ள

2. புன் கால் நாவல் பொதி புற இரும் கனி – மெல்லிய அடிமரத்தையுடைய நாவல் மரத்தினின்று உதிர்ந்த கரிய நாவற் பழத்தைக் கண்டு

3. கிளை செத்து மொய்த்த தும்பி பழம் செத்து – தன் இனத்து வண்டு என்று தவறாகக் கருதிச் சூழ்ந்த வண்டை நாவற் பழம் என்று நினைத்து

4. பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து – பல கால்களையுடைய நண்டு ஒன்று அந்த நாவற்கனியைப் பற்றிக்கொண்டதால் வருந்தி

5. கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் – மீட்டப்படாத யாழின் நரம்பின் இசைபோல ஒலிக்கும் வண்டின் ஓசையைக் கேட்டு

6. இரை தேர் நாரை எய்தி விடுக்கும் – இரை தேடித் திரியும் நாரை வரக் கண்டு அஞ்சி, தான் கொண்ட நாவற்கனியை நண்டு  கைவிட்டுவிடும்

7. துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம் - துறையைப் பொருந்திய மாந்தை நகரத்தைப் போன்ற இவளின் அழகு

8. பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய - முன்பும் இப்படியேதான் இருந்தது, நீ காண்பாயாக!

9. உழையின் போகாது அளிப்பினும் சிறிய – நீ பக்கத்திலிருந்து நீங்காமல் அன்பு செலுத்தினாலும், சிறிதளவு

10. ஞெகிழ்ந்த கவின் நலம் கொல்லோ மகிழ்ந்தோர் - கைதளர்ந்ததால் அழகு குறைந்ததோ? மேனியழகின் கள்ளுண்டு மகிழ்ந்தோர்க்கு

11. கள் களி செருக்கத்து அன்ன - கள்ளால் ஏற்பட்ட களிப்பின் மயக்கத்தைப்போல

12. காமம்கொல் இவள் கண் பசந்ததுவே – காம மயக்கமோ? இவள் கண்கள் பசலை அடைந்ததற்குக் காரணம் காதல் மயக்கமோ?"

 

கொண்டு கூட்டு: கனியைக் கிளைசெத்து மொய்த்த தும்பி, அலவன் கொண்டகோட்கு அசாந்து, இமிரும் பூசல் கேட்டு, நாரை எய்தியதனால், அலவன் விடுக்கும் துறைகெழு மாந்தை அன்ன இவள் நலம் பண்டும் இற்று; கண்டிசின்; கண்பசந்ததற்குக் காரணம் அளிப்பினும் ஞெகிழ்ந்த கவின் நலம் கொல், கட்களி செருக்கத்து அன்ன காமம் கொல் எனக் கூட்டுக.

 

உரை:

பொங்கி வரும் அலைகள் மோதும் மணற்பரப்பைக் கொண்ட கடற்கரையில், நாவல் மரத்தின் கரிய பழத்தைக் கண்டு, அதை மற்றொரு வண்டு  என்று நினைத்து வண்டு ஒன்று மொய்க்கின்றது.  பல கால்களையுடைய நண்டு, நாவற் பழத்தைப் பற்றிக்கொள்கிறது.   தன்  இனத்தைச் சார்ந்த வண்டை நண்டு பற்றிக்கொண்டது என்று தவறாக நினைத்து அஞ்சி, மீட்டப்படாத யாழ்நரம்பு எழுப்பும் ஒலியைப்போல வண்டு ஓலமிடுகிறது. உணவைத் தேடி வரும் நாரையைக் கண்டு அஞ்சிய நண்டு நாவற் பழத்தை விட்டுவிட்டுச் செல்கிறது. இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறும் கடற்கரையையுடைய, வளம் மிக்க மாந்தை என்னும் நகரைப் போன்ற அழகுடையவள் இவள்! தலைவனே, நீ இவள் பக்கத்திலேயே இருந்து நீங்காது அன்பு செய்தாலும், இவள் கண்கள் பசலை நிறம் அடைகின்றன. கள் உண்டவருக்கு ஏற்படும் மயக்கத்தைப்போல, இவள் கண்கள் பசலை அடைந்தது காமமயக்கத்தினாலோ?

 

சிறப்புக் குறிப்பு:

உள்ளுறை: நாவற்கனி தலைவிக்கும், தும்பி தோழிக்கும், அலவன் செயல் பெற்றோர் செய்த இற்செறிப்பிற்கும், நாரை தலைவனுக்குத் தலைவியை மணம் செய்துகொடுக்குமாறு வேண்டி வந்த சான்றோருக்கும் உள்ளுறையாகக் களவின்கண் நிகழ்ந்தன.


 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே

28. கள்வர்போலக் கொடியன்!