33. மறுத்தல் வல்லுவம் கொல்லோ

 

33. மறுத்தல் வல்லுவம் கொல்லோ

 

 

பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்.

அறுவை என்ற சொல் சீலை, ஆடை, உடை போன்ற பொருள்களைக் குறிக்கும் சொல். இவரது இயற்பெயர் இளவேட்டன்.  இவர் மதுரையில் அறுவை வாணிகத்தில் ஈடுபட்டிருந்ததால் மதுரை அறுவை இளவேட்டனார் என்று அழைக்கப்பட்டார். இவர் அகநானூற்றில் ஆறு செய்யுட்களும் (56, 124, 230, 254, 272, 302) குறுந்தொகையில் ஒரு செய்யுளும்(185) , நற்றிணையில் நான்கு செய்யுட்களும் (33, 157, 221, 344), புறநானூற்றில் ஒருசெய்யுளும் (329) இயற்றியுள்ளார்.

திணை: பாலை

துறை: பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகளது குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குச் சொல்லியது

துறை விளக்கம்: தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து பொருள் ஈட்டப் போகிறான் என்பதைத் தலைவி அறிந்துகொள்கிறாள். அந்தப் பிரிவை எண்ணித் தலைவி அடையும் வேதனையையும், அவளது மனநிலையையும்  உணர்ந்துகொண்ட தோழி, அதைத் தலைவனிடம் சென்று கூறுவது. 

 

பாடலின் பின்னணி:

தலைவன் பொருள் தேடுவதற்காகத் தன்னைத் பிரிந்து, கதிரவன் மறையும் மாலை வேளையில் கொடிய காட்டு வழியே பயணம் செய்யத் திட்டமிடுவதைத் தலைவி அறிகிறாள்.  அதனால் மிகுந்த கவலையும் அச்சமும் அடைந்த தலைவி, கண்ணீர் மல்கத் தோழியிடம் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

 “கதிரவன் பெரும் பிளவுகளைக் கொண்ட நெடிய மலைகளுக்குப் பின்னே மறையும் மாலைக் காலத்தில், வறண்ட நிலமுடைய சிறிய குடியிருப்புப் பகுதிகள் தனிமையில் மூழ்கும். அங்கே கற்கள் நிறைந்த சுனையிலிருந்து சேற்று நீர் மட்டுமே கிடைக்கும். மழையே இல்லாத, உணவுக்குப் பஞ்சம் நிலவும் அந்த ஊர்களில், நள்ளிரவு நேரத்தில், அழுக்கு ஆடை  அணிந்த வில்லேந்திய மறவர்கள் (வேடர்கள்) வழிப்போக்கர்களைக் கொல்வதற்காகக் காத்திருப்பார்கள். பார்ப்பதற்கே அச்சம் தரும் அந்தக் காட்டு வழியே தலைவன் செல்லத் துணிகிறான் என்பதை எண்ணி, மெல்லிய இயல்புடைய தலைவி கலங்குகிறாள். "அவர் அப்படிச் செல்ல நினைத்தால் நம்மால் அவரைத் தடுத்து நிறுத்த முடியுமா?" என்று விம்மி அழுகிறாள். அவள் கண்களிலிருந்துவரும் கண்ணீர் அவள் மார்பை நனைக்கிறது.” என்று தலைவி தன்னிடம் கூறியதைத் தோழி தலைவனிடம்  கூறுகிறாள் .

 

 

படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை
முரம்பு சேர் சிறுகுடிப் பரந்த மாலை
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்துக்
கல்லுடை படுவில் கலுழி தந்து
நிறை பெயல் அறியாக் குறை ஊண் அல்லில்        5
துவர் செய் ஆடை செந் தொடை மறவர்
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை
இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல்
வல்லுவம் கொல்லோ மெல்லியல் நாம் என
விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி             10
நல்லக வன முலை நனைப்ப
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே

 

அருஞ்சொற்பொருள்:

1. படுசுடர் – மறையும் கதிரவன்; பகுவாய் – பிளப்புகளையுடைய; நெடுவரை – நெடியமலை

2. முரம்பு - பருக்கைக் கற்கள் நிறைந்த நிலம், வறண்ட நிலம்; பரந்த – பரவிய

3. புலம்பு - தனிமை; கூட்டுண்ணும் – ஒன்று சேர்ந்து உண்ணும் ; புல்லென் – பொலிவிழந்த; மன்றம் – பொதுவிடம்

4. படு - பள்ளம்; கலுழி – கலங்கலான நீர்

5. நிறை பெயல் - மிகுந்த மழை; அல் – இரவு

6. துவர் – காவி நிறம்; செந்தொடை – இரத்தக் கறைபடிந்த அம்புகள்; மறவர் -  பாலை நிலத்து வேடர்கள் (வழிப்பறி செய்பவர்கள்)

7. அதர் - வழி; அல்கும் - தங்கியிருக்கும்; அஞ்சுவரு – அச்சத்தை தரும்; நெறி – வழி

8. இறப்ப – செல்ல

9. வல்லுவம் - முடியுமோ

10. விம்முறு – தேம்பி அழுதுகொண்டு; கிளவி – சொல்

11. வன – அழகிய; கரை சேர்பு – கரையைச் சேர்ந்து

12. மல்குதல் – பெருகுதல்; புனல் – நீர் (கண்ணீர்); பரந்த – பரவிய, சொரிந்த

 

 

பதவுரை:

1. படுசுடர் அடைந்த பகு வாய் நெடு வரை - கதிரவன் சென்று மறைகின்ற பிளவுகளை உடைய உயர்ந்த மலைப்பக்கத்தில்

2. முரம்பு சேர் சிறுகுடி பரந்த மாலை - பருக்கைக் கற்கள் நிறைந்த நிலத்திலுள்ள சிறிய குடிகளிலே மாலைக் காலம் பரவுவதால்

3. புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து - தனித்திருப்போர் சேர்ந்துண்ணும் பொலிவிழந்த மன்றத்தில்

4. கல் உடை படுவில் கலுழி தந்து - பாறைகளையுடைய பள்ளங்களில் உள்ள கலங்கல் நீரைக் குடித்து;

5. நிறை பெயல் அறியா குறை ஊண் அல்லில் - நிறைந்த மழையை அறியாத, குறைந்த உணவையுடைய இரவில்

6. துவர் செய் ஆடை செந்தொடை மறவர் - பழுப்பேறிய ஆடையையுடைய, குருதிக்கறை படிந்த அம்புகளையும் உடைய மறவர்கள்

7. அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறி இடை – வழிப்போக்கர்கள் வரும் வழியைப் பார்த்துப் பதுங்கியிருக்கும் அஞ்சத்தக்க பாதையில்

8. இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல் - செல்ல எண்ணுகிறார் அவர் என்றால் அதை மறுப்பதற்கு

9. வல்லுவம் கொல்லோ மெல்லியல் நாம் என - மென்மையான இயல்பை உடைய நாம் அதனைத் தடுக்க வல்லமையுடையோமா?' என்று

10. விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி - என் முகத்தைப் பார்த்து விம்மிக்கொண்டே சொல்பவளின்

11. நல் அக வன முலை கரை சேர்பு - நல்ல மார்பிலுள்ள அழகிய முலைளை நனைக்குமாறு

12. மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே - நிரம்பி வழியும் நீர் பரவியது மலரைப் போன்ற அவளது அழகிய கண்களிலிருந்து

    

கொண்டு கூட்டு: செந்தொடை மறவர் அல்கும் நெறியிடை, அவர் இறப்ப எண்ணுவர் எனின், மெல்லியல் மறுத்தல் வல்லுவம் கொல்லோ நாம் எனக் கூட்டுக.

உரை:

கதிரவன் மறையும் பிளவுபட்ட உயர்ந்த மலைகளும், பருக்கைக் கற்கள் நிறைந்த சிற்றூர்களில் மாலைக் காலம் வந்து சேர்வதால் தனிமைத் துன்பம் மிகுதியாகும் பொலிவற்ற மன்றங்களும் கொண்ட பாலை நிலம் அது. அங்கே, பாறைப் பள்ளங்களில் தேங்கியுள்ள கலங்கல் நீரைக் குடித்துக்கொண்டு, மழை வளமே இல்லாத வறண்ட சிறுகுடியில் உணவின்றி, அழுக்கடைந்த ஆடை அணிந்து, குருதி படிந்த கூரிய அம்புகளுடன் வழிப்போக்கர்களைத் தாக்குவதற்கு  இரவில் காத்திருக்கும் கொடூரமான மறவர்கள் வாழ்கின்றனர்.

அத்தகைய அச்சமளிக்கும் கொடிய பாதையைக் கடந்து, "தலைவர் பொருள் ஈட்டுவதற்காக நம்மைப் பிரிந்து செல்ல நினைக்கிறார் என்றால், மென்மையான இயல்புடைய நாம் அவரைப் போக வேண்டாம் என்று தடுத்து நிறுத்தும் வலிமை உடையோமா?" என்று விம்மிய குரலில் என்னிடம் (தோழியிடம்) கூறி, தன் மலர் போன்ற கண்களிலிருந்து பெருகிய கண்ணீர் தன் நல்ல மார்பில் உள்ள அழகிய முலைகளின்மீது வழியுமாறு தலைவி என் முகத்தைப் பார்க்கிறாள்.

 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே

28. கள்வர்போலக் கொடியன்!