32. மறுத்தற்கு அரியது

 

32. மறுத்தற்கு அரியது

 

பாடியவர்: கபிலர்

இவரைப் பற்றிய குறிப்புகளை முதற் பாடலின் உரையில் காணலாம்.

 

திணை: குறிஞ்சி

 

துறை: தலைவிக்குக் குறைநயப்புக் கூறியது

 

துறை விளக்கம்: தோழி, தலைவனின் காதலையும் அவனது வருத்தத்தையும் தலைவியிடம் சென்று, அவள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நயமாக எடுத்துக் கூறுதல்.

 

பாடலின் பின்னணி:

நீல மேகம் போன்ற நிறமுடைய திருமால்போல் நிமிர்ந்து நிற்கும் மலையில், பால் போன்ற வெண்ணிறமுடைய பலராமனைப்போல் பொங்கி வழியும் அருவிகள் கொஞ்சும் அழகிய நிலப்பகுதிக்குரியவனான தலைவன், பேரன்போடு தலைவியை நினைந்து உருகி வருந்துகிறான் என்று தோழி பலமுறை கூறியும், தலைவி அதனை வெறும் வாய்ச்சொல் என்று எண்ணி, அவன் காதலை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றாள். “பண்புமிக்க பெரியோர்கள் ஒருவரை ஏற்றுக்கொள்வதற்கு முன்பே அவருடைய குணநலன்களை நன்கு ஆராய்வர், மாறாக அன்புகொண்டு ஏற்ற பிறகு ஆராய்ந்து விலக்க மாட்டார்கள் என்னும் அறநெறியை உணர்ந்து, நீயே அவனது பேராற்றலையும் தூய காதலையும் உனது கண்களால் நேரில் கண்டு தெளிந்து, உனது உற்றார் உறவினரோடும் கலந்து பேசி, அவனை  ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என்று தோழி தலைவியிடம் நயம்பட உரைக்கிறாள்.

 

 

மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி
அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி                  5
அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு
அரிய வாழி தோழி பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே

 

அருஞ்சொற்பொருள்:

1. மாயோன் - திருமால்; மால் - பெரிய; வரை - மலை; கவாஅன் – மலைப்பக்கம்

2. வாலியோன் - பலராமன் (வெள்ளை நிறமுடையவன்); அன்ன – போல;

வயங்கு – விளங்கும்

3. கிழவோன் – தலைவன், உரிமையுடையவன்; நயந்து – விரும்பி

4. தேறாய் – தெளிவடைவாய்

5. நுமர் – உன்னுடைய சுற்றத்தார்

6. அளவல் – ஆராய்தல், கலந்தாலோசித்தல்; மறுதரற்கு – மறுத்தற்கு, விலக்குவதற்கு

8. நாடி – ஆராய்ந்து பார்த்து

9. நட்டு – நட்புக்கொண்டு, காதல் கொண்டு; நாடார் - ஆராயமாட்டார்; ஒட்டியோர் – பொருந்தியவர், அன்புகொண்டவர் ; திறத்தே - அவர்களது இயல்பில், அவர்களைப் பொறுத்தவரை.

 

பதவுரை:

1. மாயோன் அன்ன மால் வரை கவாஅன் - திருமாலைப் போன்ற கரிய நிறத்தையுடைய பெரிய மலையின் பக்கத்திலே

2. வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி - பலராமனைப் போன்ற ஒளிவிடும் வெண்மையான அருவிகள்

3. அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும் - அழகிய மலைக்கு உரியவனான தலைவன் நம்மை விரும்பி எப்போதும்

4.  என்பது ஓர் வாய்ச்சொல் தேறாய் - வருந்தினான் என்ற ஒரு வாய்ச்சொல்லை

நீ நம்ப வில்லை

5. நீயும் கண்டு நுமரொடும் எண்ணி - நீயே நேரில் கண்டும், உன் சுற்றத்தாரோடும் கலந்தாலோசித்து அறிந்து ஆராய வேண்டும்

6.  அறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு - அறியவேண்டியவற்றை அறிந்து ஆராய வேண்டும்; அவனது நிலையை மறுப்பதற்கு

7. அரிய வாழி தோழி பெரியோர் - அரியது ஆகும், வாழ்க தோழியே! பெரியவர்கள்

8. நாடி நட்பின் அல்லது - முதலில் ஆராய்ந்து நட்புச் செய்வரே அன்றி,

9. நாடார் தம் ஒட்டியோர் திறத்தே – நட்புக் கொண்டபின் அவரைப்பற்றி ஆராயமாட்டார், தம்மைச் சார்ந்தவரிடத்து

 

கொண்டு கூட்டு: கிழவோன் வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய் ஆகலின், தோழி, நீயும் கண்டு, எண்ணி அறிந்து, அளவல் வேண்டும்; மறுத்தற்கு அரிய, பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டுத் தம் ஒட்டியோர் திறத்து நாடார் எனக் கூட்டுக.

 

உரை:

தோழீ! நீ வாழ்க! திருமால் போன்ற கரிய பெரிய மலையின் பக்கத்தில், பலராமனைப்போல வெண்மையான அருவி விழுகின்ற அழகிய மலைக்கு உரியவன்  நம் தலைவன். அவன் நம்மை விரும்பி எப்போதும் வருந்துகின்றான் என்று நான் கூறும் வாய்ச்சொல்லை நீ நம்பவில்லை. அதனை நீயும் நேரில்  கண்டு, உன் சுற்றத்தாரோடும் கலந்தாலோசித்து, நல்லறிவோடு ஆராய வேண்டும். அவனுடைய அன்பை மறுப்பது இயலாத ஒன்று. ஏனெனில், பெரியோர்கள் ஒருவரோடு அன்புச் செலுத்துவதற்குமுன்  அவரைப் பற்றி ஆராய்வார்களே தவிர, அன்பு கொண்ட பிறகு தம்மிடம் பொருந்தியவரின் தகுதியை ஆராய மாட்டார்கள்.

 

சிறப்புக் குறிப்பு:

நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு (குறள் - 791) என்ற குறள் இங்கு ஒப்புநோக்கத் தக்கது.

 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே

28. கள்வர்போலக் கொடியன்!