31. பல நினைந்து யானும் இனையேன்!

 

31. பல நினைந்து யானும் இனையேன்!

 

பாடியவர்: நக்கீரனார்

இவர் மதுரைக் கணக்காயனாரின் மகன் என்பதனால் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று அழைக்கப்பட்டார்.  இவரும் மதுரை நக்கீரர் என்பவரும் ஒருவரே என்பது ஒரு சாரர் கருத்து.  வேறு சிலர், மதுரை நக்கீரர் வேறு இவர் வேறு என்பர்.  இவர் கடைச்சங்கத்தின் தலைவராக இருந்ததாகக் கூறப்படுகிறது.  இவர் தெளிந்த அறிவும் சிறந்த புலமையும் உடையவர்.  இவர் புறநானூற்றில் மூன்று செய்யுட்களையும் (56, 189, 395), அகநானூற்றில் 17 செய்யுட்களையும், நற்றிணையில் 7 செய்யுட்களையும், குறுந்தொகையில் 8 செய்யுட்களையும் இயற்றியவர்.  மற்றும் பத்துப்பாட்டில் முதலாவதாகிய திருமுருகாற்றுப்படையையும் ஏழாவதாகிய நெடுநல்வாடையையும் இயற்றியவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.  இறையனார் அகப்பொருளுக்கு இவர் எழுதிய உரை மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

 

திணை: நெய்தல்

 

துறை: தலைவன் சிறைப்புறத்தானாக தலைவி வன்புறை எதிரழிந்தது.

 

துறை விளக்கம்: தலைவன் வீட்டின் வெளியே மறைந்து நிற்பதை அறிந்த தோழி, தலைவியிடம் சென்று 'கவலைப்படாதே, தலைவன் விரைவில் உன்னை மணந்துகொள்வான்' என்று ஆறுதல் கூறுகிறாள். ஆனால், தலைவியால் அந்த ஆறுதலை ஏற்றுக்கொண்டு மனதைத் தேற்றிக்கொள்ள முடியவில்லை. 'என்னால் இந்தப் பிரிவைத் தாங்க முடியவில்லை' என்று தன் வருத்தத்தையும் ஆற்றாமையையும் தோழியிடம் கூறிப் புலம்புகிறாள்.

 

பாடலின் பின்னணி:

தலைவன் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்றான். தான் திரும்புவதாகச் சொல்லிச் சென்ற பருவம் வந்தும் அவன் வரவில்லை. அதனால் தலைவி பிரிவாற்றாது மிகுந்த துயருற்றாள். இந்நிலையில், தலைவன் பொருள் ஈட்டித் திரும்பி வந்து, தோழியின் உதவியோடு தலைவியைச் சந்திப்பதற்காக வீட்டின் வெளியே சிறைப்புறமாகக் (மறைவாக) காத்திருக்கிறான். தலைவன் வந்து மறைந்திருப்பதை அறிந்த தலைவி, தான் பட்ட பிரிவுத் துயரத்தையும், அவனது நாட்டின் அழகையும் அவன் உணருமாறு தோழியிடம் சொல்வதுபோலத் தலைவனுக்குக் கேட்கும்படி, "தோழீ! நம் தலைவனின் கடற்கரைத் துறையில், சிறிய வெண்மையான காக்கை இரையைத் தேடித் தன் பெடைக்கு ஊட்டி மகிழும். புன்னை மரத்தின் கிளையிலிருக்கும் கருவுற்ற வெண்மையான குருகுகள், கடலலைகளின் ஓசையைக் கேட்டு அஞ்சும். பல நாடுகளிலிருந்து கப்பல்களில் கொண்டுவரப்பட்ட பலவகைப்  பண்டங்கள் கரையில் இறக்கப்படும். தலைவனைக் கூடுவதற்கு முன், அந்த நாட்டின் கடற்கரைத் துறை எனக்கு மிகவும் இனிமையானதாகத் தோன்றியது. ஆனால், இப்போது தலைவனைப் பிரிந்து பெருந்துயரோடு பலவற்றை எண்ணி நான் வருந்திக் கொண்டிருக்கும்போது, அந்த இடத்தைக் நினைத்தாலே நெஞ்சம் மேலும் வருந்துகிறதே!" என்று கூறுகிறாள்.

 

மா இரும் பரப்பு அகம் துணிய நோக்கி
சேயிறா எறிந்த சிறு வெண் காக்கை
பாய் இரும் பனிக் கழி துழைஇ பைங் கால்
தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ சுரக்கும்
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே                5
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு பல நினைந்து
யானும் இனையேன் ஆயின் ஆனாது
வேறு பல் நாட்டில் கால் தர வந்த
பல உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல்
நெடுஞ் சினை புன்னை கடுஞ் சூல் வெண் குருகு     10
உலவுத் திரை ஓதம் வெரூஉம்
உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே

 

 

அருஞ்சொற்பொருள்:

1. மா - பெரிய; இரும் - கரிய; பரப்பு - கடற்பரப்பு; துணிய – தெளிவாக

2. சேயிறா – சே + இறா – சிவந்த இறால்; எறிந்த – பாய்ந்த

3. பாய் - பரந்த; பனிக்கழி - குளிர்ச்சியான உப்பங்கழி; துழைஇ – துழாவி;

பைங்கால் – பசுமையான கால்

4. வீழ் – விரும்பும்; பெடை – பெண் பறவை (காக்கை); பயிரிடூஉ – கூவி அழைத்து; சுரக்கும் – கொடுக்கும்

5. வீ - மலர்; ஞாழல் - ஒருவகை மரம்; துறையுமார் –  துறையும் (ஆர் – அசை)

6. புலம்பு – தனிமைத் துயரம்;

7. இனையேன் - வருந்துகின்றேன்; ஆனாது – அமையாது, நீங்காது

8. கால் – காற்று;                                          

9. பலவுறு - பலவகையான; பண்ணியம் - பண்டம்; இழிதரு – இறக்கப்படும்; நிலவுமணல் – நிலவைப் போன்ற மணல்

10. நெடுஞ்சினை – நெடிய கிளை;  கடுஞ்சூல் – முதிர்ந்த கரு; வெண்குருகு – வெண்ணிறமான குருகு

11.; ஒதம் – கடல் அலை, வெள்ளப்பெருக்கு; வெரூஉம் – அஞ்சும் (உ – அளபெடை)

12. உரவு – வலிய; சேர்ப்பன் – நெய்தல்நிலத் தலைவன்; மணம் – கூடுகை; மணவா – கூடாமல் இருந்ததற்கு, ஊங்கு – முன்பு

 

பதவுரை:

1. மா இரும் பரப்பு அகம் துணிய நோக்கி - பெரிய, கரிய கடற்பரப்பின் தெளிவை ஆராய்ந்து பார்த்து  

2. சேய் இறா எறிந்த சிறுவெண் காக்கை - சிவந்த இறாலை பிடிப்பதற்குப் பாய்ந்த சிறிய கடற்காக்கை,

3. பாய் இரும் பனி கழி துழைஇ பைம் கால் - பரந்த பெரிய குளிர்ச்சியையுடைய கழியைத் துழாவித் தேடி எடுத்த இறாலை, பசுமையான கால்களையுடைய

4. தான் வீழ் பெடைக்கு பயிரிடூஉ சுரக்கும் - தான் விரும்பும் தன் பெண்பறவையை அழைத்துக் கொடுக்கும்

5. சிறு வீ ஞாழல் துறையும் ஆர் இனிதே - சிறிய பூக்களைக் கொண்ட ஞாழல் மரங்களைக் கொண்ட துறை இனிதாக இருந்தது;

6. பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு பல நினைந்து - பெரிய தனிமைத்துயருற்ற உள்ளத்தோடு பலவற்றையும் நினைந்து

7. யானும் இனையேன் ஆயின் ஆனாது - நானும் இப்போது வருந்துகின்றேன்; ஆகையால் அந்தத் துறை இனி எனக்கு இனிமையாக அமையாது.

8. வேறு பல் நாட்டில் கால் தர வந்த - வேறு பல நாடுகளிலிருந்து காற்றினால் கொண்டுவரப்பட்ட

9. பல உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல் - பல வகைப்பட்ட பண்டங்கள் வந்து இறங்கும் நிலாவையொத்த மணற்பரப்பில்

10. நெடும் சினை புன்னை கடும் சூல் வெண்குருகு - நெடிய கிளைகளையுடைய புன்னைமரத்தில் முதிர்ந்த சூல்கொண்ட வெள்ளைக் குருகு,

11. உலவு திரை ஓதம் வெரூஉம் - உலவுகின்ற கடலலைகளைக் கண்டு அஞ்சுகின்ற

12. உரவு நீர் சேர்ப்பனொடு மணவா ஊங்கே -  வலிமையான நீரினைக் கொண்ட நெய்தல் நிலத் தலைவனோடு கூடுவதற்கு முன்னர்

 

கொண்டு கூட்டு: சிறுவீ ஞாழல் துறையும் இனிதே; பெரும்புலம்புற்ற நெஞ்சமொடு பலநினைந்து யானும் இனையேன் ஆயினேன்.

 

உரை:

தலைவனின் கடற்கரைக்கு அருகிலுள்ள உப்பங்கழியில் சிறிய வெண்ணிறக் காக்கை, கரிய கடற்பரப்பை உற்று நோக்கி, சிவந்த இறாலைப் பாய்ந்து பிடித்து, பசுமையான கால்களையுடைய தன் துணைப் பெண் பறவைக்கு உணவாக அளிக்கிறது. அங்குள்ள துறைமுகத்தின் ஞாழல் மரங்களில் சிறிய மலர்கள் பூத்திருக்கின்றன.

நிலவை ஒத்த வெண்மணல் பரப்பைக் கொண்ட அந்தத் துறைமுகத்தில், பல்வேறு நாடுகளிலிருந்து காற்றால் வந்து சேர்ந்த கப்பல்களிலிருந்து பலவகையான வணிகப் பொருட்கள் இறக்கப்படுகின்றன. அங்குள்ள நெடிய கிளைகளைக் கொண்ட புன்னை மரத்தில் தங்கியிருக்கும் கருவுற்ற வெள்ளைக் குருகு, கடலலைகளின் முழக்கத்தைக் கேட்டு அஞ்சுகிறது.

அத்தகைய வலிமை மிக்க கடலையுடைய நெய்தல்நிலத் தலைவனோடு நான் கூடுவதற்கு முன்பு, அக்கடற்கரைத் துறை எனக்கு மிகவும் இனிமையானதாக இருந்தது. ஆனால் இப்போது, அவனது பிரிவால் பெருந்துயருற்ற நெஞ்சத்துடன் பல நினைவுகளை எண்ணி நான் துன்பப்படுகின்றேன்

சிறப்புக் குறிப்பு:

உள்ளுறை: என் காதலன் பிரிந்திருந்தாலும், பொறுமையோடு நான் வீட்டில் அமைதியாகத்தான் இருக்கிறேன். ஆனால், எங்கள் காதலின் தீவிரத்தால் என் உடம்பில் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்து, ஊர்மகளிர் தேவையில்லாமல் அலர் (பழி) தூற்றுகிறார்கள். அந்தப் பழிச்சொல்லுக்கு நான் மிகவும் பயப்படுகிறேன் என்னும் கருத்து, 'உயர்ந்த கிளையிலிருக்கும் கருவுற்ற வெண்மையான கொக்கு, கடலின் பெரு அலைகளின் பேரொலியைக் கேட்டு அஞ்சுகிறது' என்ற வரிகளுக்குள் உள்ளுறைப் பொருளாகக் கூறப்பட்டுள்ளது. 

இறைச்சி: சிவந்த இறாலைப் பிடித்த சிறுவெண் காக்கை, தானுண்ணாமல் தன் பெடையை அழைத்து ஊட்டுகிறது. அதுபோல அன்பு கொண்ட தலைவன் தலைவியுடன் இருக்காமல் பிரிந்து சென்றிருப்பதை நினைத்து தலைவி வருந்துவதை இறைச்சிப் பொருளாகக் கொள்ளலாம்.

 


 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே

28. கள்வர்போலக் கொடியன்!