3. வினை முடித்தன்ன இனியோள்
3. வினை முடித்தன்ன இனியோள்
பாடியவர்:
இளங்கீரனார்
இவரும் எயினந்தை மகனார் இளங்கீரனார்
என்பவரும் ஒருவரே என்று சிலர் கூறுவர். அவ்வாறாயின், இவர் அகநானூற்றில் ஒன்பது
பாடல்களும் (3, 225, 239, 289, 299, 361, 371, 395, 399) நற்றிணையில் ஆறு
பாடல்களும் (3, 62, 113, 269, 308, 346) குறுந்தொகையில் ஒரு பாடலும் (116)
இயற்றியுள்ளார்.
துறை: முன்
ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக் கூட்டிய
நெஞ்சிற்குச் சொல்லியது.
துறை விளக்கம்: முன்பொருமுறை
பொருள் ஈட்டுவதற்காகத் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், பிறகு ஊர் திரும்பினான். ஆனால்,
அவனுடைய மனம் மீண்டும் பொருள் ஈட்டச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறது. அப்படித் துடிக்கும்
தன் மனதைப் பார்த்துத் தலைவன் கூறியது.
பாடலின் பின்னணி: ”முன்பொரு
முறை பொருள் தேடச் சென்றபோது, அந்தப் பாலை நிலத்து மாலைப் பொழுதில் தலைவியின்
நினைவால் நான் பெரிதும் வருந்தினேன். அவ்வாறு இருக்க, என் நெஞ்சமே! என்னை ஏன் மீண்டும் பொருள்
தேடுவதற்காக என் மனைவியைவிட்டுப் பிரிந்து செல்லத் தூண்டுகிறாய்?” என்று தன்
நெஞ்சிடம் தலைவன் கூறுகிறான்.
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ்
சினைப்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச் 5
சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே
அருஞ்சொற்பொருள்:
1.
ஈனுதல் – பெறுதல்; உயவு - வருத்தம்;
வான் பொரு - வானத்தைத் தொடும்; சினை – கிளை
2.
அரை – அடிமரம்; நீழல் – நிழல்
3.
கட்டளை
- இங்கு கட்டளைக்கல்லைக் குறிக்கிறது. கட்டளைக் கல் – பொன்னை உரைத்துப் பார்ப்பதற்குப்
பயன்படுத்தப்படும் கல்
4.
வட்டு – விளையாட்டுக்குப்
பயன்படுத்தப்படும் கருவி
5.
வில் ஏர் உழவர் – வில்லால் வழிப்போக்கர்களைத் துன்புறுத்தி உண்ணும் வேடர்
6.
சுரன் – பாலை நிலம்; உரன் – வலிமை;
மாய்தல் – அழிதல்
7.
உள்ளுதல் – எண்ணுதல்
8.
இனியோள் – இனியவள்
9.
மாண் - மாட்சிமை; படர்தல் – நினைந்து
வருந்துதல்
பதவுரை:
1.ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடும்
சினை – குஞ்சுகளைப் பெற்ற பருந்து வருந்தி
இருக்கும் வானைத் தொடும் உயர்ந்த
கிளைகளையும்
2. பொரி அரை வேம்பின் புள்ளி நீழல் -
பொரிந்த அடிமரத்தையும் உடைய வேப்ப மரத்தின்
புள்ளிபுள்ளியான நிழலில்
3. கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து -
கட்டளைக்கல் போன்ற வட்டரங்கினை கீறிக்கொண்டு
4. கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
- கல்வி கற்காத சிறுவர்கள்
நெல்லிக்காய்களைக்கொண்டு வட்டு ஆடும்
5. வில் ஏர் உழவர் வெம் முனை சீறூர் -
வழியில் செல்லுபவர்களை வில்லால் துன்புறுத்தி
உண்ணும் வேடரின் கொடிய குடியிருப்பைக்
கொண்டிருக்கும்
6. சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை -
பாலை நிலத்தில், வலிமையை அழிக்கும் மாலைப்பொழுதில்
7. உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிய –
நினைத்துப் பார்த்தேன் அல்லவா நான்?
எண்ணிய
8. வினை முடித்து அன்ன இனியோள் -
காரியத்தை முடித்தாற்போன்ற இனிமையான
தலைவி
9. மாண் சுடரொடு படர் பொழுது எனவே - என்
இல்லத்தில் மாட்சிமைப்பட்ட விளக்கை ஏற்றித்
துன்புற்று வருந்தும் பொழுதாகும் இஃது என்று
கொண்டுகூட்டு: நெஞ்சே,
சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை எய்தக்கண்டு, இனியோள், சுடரொடு, படர்பொழுது என யான்
உள்ளினென் அல்லனோ; அதனால், நீ பிரியக் கருதுதலை ஒழிக என மாறிக் கூட்டுக.
உரை:
குஞ்சுகளைப்
பெற்றெடுத்த பெண்பருந்து ஒன்று, வெப்பம் தாங்காமல், வானை முட்டும் அளவிற்கு
உயர்ந்த கிளைகளைக் கொண்ட, பொரிந்த (வெடித்த) அடிமரத்தை உடைய வேப்ப மரத்தில்
அமர்ந்து வருத்தத்தோடு ஒலியெழுப்புகிறது. அந்த வேப்ப மரத்தின் புள்ளிகளைப் போன்ற
நிழலிலே, பொன்னை உரைத்துப் பார்க்கும் கட்டளைக்கல்லைப்போலக் கோடுகள் கிழித்து விளையாடும்
அரங்கம் (கட்டம்) அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கல்வி கற்காத வேட்டுவச் சிறுவர்கள்,
நெல்லிக்காய்களைக் வட்டுகளாகக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இச்சிறுவர்களின்
பெற்றோர், வில்லைக்கொண்டு வழிப்பறி செய்து வாழும் வேடர்கள். அவர்கள் வாழும்
சிற்றூர் போர்முனை போன்ற கொடியது. அத்தகைய கொடிய வறண்ட பாலை நிலத்து வழியில் நான்
நடந்து வந்தபோது, மனிதரின் மன வலிமையையே அழிக்கக் கூடிய மாலைப் பொழுது வந்தது.
அந்த மாலைப் பொழுதில், "நான் எண்ணிய செயலைச் செம்மையாகச் செய்து முடித்ததால்
ஏற்படும் மனநிறைவைப் போன்றவள் என் மனைவி. அவள் இப்போது நம் இல்லத்தில் அழகிய
விளக்கை ஏற்றிவைத்துவிட்டு, என் நினைவாகவே வருத்தத்தோடு காத்துக்
கொண்டிருப்பாள்" என்று என் உள்ளம் எண்ணியது.
சிறப்புக் குறிப்பு:
இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருள்: பருந்தின்
துயரத்தைக் கருதாமல் சிறுவர்கள் நெல்லிக்காயை வட்டாகக்கொண்டு விளையாடி மகிழ்வதுபோல,
தலைவியைப் பிரிந்து வருந்துவதைப் பற்றிச் சிந்திக்காமல், தலைவனின் நெஞ்சு பொருள் ஈட்டும் மகிழ்ச்சியில் மட்டுமே
குறியாக இருக்கிறது.
Comments
Post a Comment