26. நும்மொடு துணை ஆகிய தவறோ?
26. நும்மொடு துணை ஆகிய தவறோ?
பாடியவர்: சாத்தந்தையார்
சாத்தந்தையார்
என்னும் சொல் சாத்தனின் தந்தை எனப் பொருள்படுமாயினும் சாத்தன் என்பவரைப் பற்றிய
குறிப்பொன்றும் காணப்படாததால் சாத்தந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர் என்று
அறிஞர்கள் கருதுகின்றனர். இவர் சோழன் போர்வைக் கோப்பெரு
நற்கிள்ளியிடம் இளமைக் காலத்திலிருந்தே பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர். கோப்பெரு நற்கிள்ளி தன் தந்தையை வெறுத்து,
ஆமூர் சென்ற பொழுது,
இவரும் அவனுடனிருந்து அவன் செயல்களைக்
குறித்துள்ளார். இப்புலவர் கோப்பெரு
நற்கிள்ளியின் மற்போர் ஆற்றலைப் புகழ்ந்து பாடியுள்ளார். இவர் புறநானூற்றில் நான்கு செய்யுட்களும் (80, 81, 82, 87) நற்றிணையில்
ஒரு செய்யுளும்(26) இயற்றியுள்ளார்.
திணை: பாலை
துறை: பிரிவுக்குறிப்பு
உணர்ந்து தலைவி வேறுபட்டமை சொல்லித் தோழி செலவு அழுங்குவித்தது.
துறை விளக்கம்: தலைவன்
பொருளீட்டவோ அல்லது வேறு கடமைக்காகவோ பிரியப் போகிறான் என்பதை அறிந்த தலைவியின் உடலில்/மனதில்
ஏற்படும் மாற்றங்களை (வேறுபாட்டை) தலைவனிடம் கூறி, அவன் தன் பயணத்தைத் தவிர்த்து (அழுங்குவித்து)
அங்கேயே தங்குமாறு தோழி செய்வது.
பாடலின் பின்னணி:
பகலெல்லாம் வீசிய
கோடைக்காலத்து வெம்மையால் காடே காய்ந்துபோய்க் கிடந்தது. அந்தப் பாலைவனப்
பாதையில், அழகிய புள்ளிகள் பொருந்திய வெண்மையான அடிமரத்தைக் கொண்ட பலா மரத்தின்
முதிர்ந்த காய்கள் வெயிலின் வெப்பம் தாளாமல் சுருங்கித் தொங்கின. அத்தகைய கொடிய
காட்டின் வழியே, தன் காதலனோடு (தலைவனோடு) உடன்போக்கு (வீட்டை விட்டு வெளியேறி)
வந்தவள் அவள். அவள் பிறந்த வீட்டிலோ வறுமை என்பதே இல்லை; மலை போன்ற நெற்கூடுகள்
நிறைந்த பெரிய செல்வந்தக் குடும்பம் அது. தன் தாய் வீட்டையும், அங்கிருந்த அள்ள
அள்ளக் குறையாத நெல் வளத்தையும் அப்படியே விட்டுவிட்டுத் தன் காதலனே உலகம் என்று அவனது கையைப்
பிடித்துக்கொண்டு இந்த வெம்மை நிறைந்த காட்டுப் பாதையில் நடந்து வந்தாள்.
கூர்மையான பற்களையும், பொன்னிறத் தேமலையும், அடர்ந்த கூந்தலையும் உடைய அந்தப்
பேதை, அவனையே தன் உயிராக நம்பித் துணையாக வந்தாள்.
ஆனால் காலம் மாறியது.
திருமணத்திற்குப் பின் ஏதோ ஒரு கடமைக்காகத் தலைவன் அவளைப் பிரிந்து செல்ல
ஆயத்தமானான். அவன் அவளைவிட்டுப் பிரியப் போகிறான் என்ற செய்தியைக் கேட்டவுடன்,
அவளது உள்ளம் உடைந்துபோனது. அதோ, அவளது மெல்லிய கைகளிலிருந்து வளையல்கள் கழன்று
கீழே விழுகின்றன. அவளது வாடிய முகத்தைக் கண்ட தோழி, நேராகத் தலைவனிடம் சென்று தன்
ஆதங்கத்தைக் கொட்டினாள். "தலைவனே! அன்று தன் செல்வச் செழிப்பான தாய்
வீட்டையும் துறந்து, சுட்டெரிக்கும் வெயிலில் உனக்கு மட்டுமே நல்ல துணையாக
வந்தாளே, அஃது இவள் செய்த தவறா? அன்று உன்னோடு காட்டில் நடந்த அவளது
பெருந்தோள்கள், இன்று நீ சில காலம் அவளைவிட்டுப் பிரியப் போகிறாய் என்று
கேள்விப்பட்டவுடன் மெலிந்து, வளையல்களை நழுவ விடுகின்றன? இவளது இந்த நிலையைக்
கண்டு என் நெஞ்சம் வலிக்கிறதே! உன்னால் எப்படிப் பிரிய முடிகிறது?" என்று
தோழி கேட்க, அவளது சொற்களில் இருந்த நியாயத்தை உணர்ந்த தலைவன் தன் பயணத்தைக்
கைவிட்டு, தன் மனைவியின் கண்ணீரைத் துடைக்க அங்கேயே தங்கிவிட்டான்.
நோகோ
யானே நெகிழ்ந்தன வளையே
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை
விண்டுப் புரையும் புணர் நிலை நெடுங் கூட்டுப்
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய
சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங் காய் 5
முட முதிர் பலவின் அத்தம் நும்மொடு
கெடு துணை ஆகிய தவறோ வை எயிற்று
பொன் பொதிந்தன்ன சுணங்கின்
இருஞ் சூழ் ஓதி பெருந் தோளாட்கே
அருஞ்சொற்பொருள்:
1. நோகோ - வருந்துகின்றேன்; நெகிழ்ந்தன – கழன்று
வீழ்கின்றன
2. செவ்வி – செம்மண் பூச்சால் உண்டாகும் செந்நிறம்;
அரை – அடிப்பாகம்
3. புரையும் - போன்ற ; புணர் நிலை – அடுக்காக
அமைந்த; நெடுங்கூடு – நெடிய நெற்கூடு
4. விண்டு – மலை; பிண்டம் – தொகுதி, குவியல்
5. சுடர் – கதிரவன்; திரங்கிய - வாடிய;
6. முட முதிர் – வளைந்து முதிந்த; பலவின்
– பலாவின்; அத்தம் - வழி
7. வை - கூர்மை; எயிறு – பல்
8. சுணங்கு – தேமல்
9. இருஞ் சூழ் ஓதி - கரிய அடர்ந்த கூந்தல்; தோளாட்கே – தோள்களையுடைவளுக்கு
பதவுரை:
1. நோகோ யானே நெகிழ்ந்தன வளையே - நோகின்றேன்
நான்! நெகிழ்ந்தன வளையைல்கள்!
2. செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை - செம்மண்
பூச்சுடைய புள்ளிகளைக் கொண்ட வெண்மையான அடிப்பாகத்தையுடைய
3. விண்டு புரையும் புணர் நிலை நெடும் கூட்டு
- மலைக் குன்றுகளைப்போல், அடுத்தடுத்து நிற்கும் நெடிய நெற்கூடுகளில் இருக்கும்
4. பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய - நிறைந்த
நெல்லையுடைய தாய்வீட்டை விட்டு,
5. சுடர் முழுது எறிப்ப திரங்கி செழும் காய்
- ஞாயிறு முற்றவும் எரிக்க, வாடிப்போன செழுமையான காய்களைக் கொண்ட
6. முட முதிர் பலவின் அத்தம் நும்மொடு - வளைந்து
முதிர்ந்த பலாமரங்கள் நிற்கும் காட்டுவழியில் உம்மோடு
7. கெடு துணை ஆகிய தவறோ வை எயிற்று – உற்ற
துணையாகி இவள் வந்தது தவறோ? கூர்மையான பற்களையும்,
8. பொன் பொதிந்து அன்ன சுணங்கின் - பொன்னைப்
பொதிந்துவைத்தது போன்ற தேமலையும்,
9. இரும் சூழ் ஓதி பெரும் தோளாட்கே - கரிய
அடர்த்தியான கூந்தலையும் கொண்ட பெரிய தோள்களையுடைவளுக்காக
கொண்டு கூட்டு: தாய்மனை ஒழிய, நும்மொடு அத்தம் கெடுதுணை
ஆகிய தவறோ பணைப்பெருந்தோள் வளை நெகிழ்ந்தன; யான் நோகு எனக் கூட்டுக.
உரை:
கூர்மையான பற்களும், பொன்
போன்ற தேமலும், கரிய கூந்தலும், பருத்த தோள்களும் உடையவள் இத்தலைவி. இவள், மலையைப்
போன்ற நெடிய நெற்கூடுகளையும், வளம் மிக்க நெற்குவியல்களையும் உடைய தன் தாயின்
செல்வ இல்லத்தை விட்டுவிட்டு உன்னோடு வரத் துணிந்தாள். ஞாயிற்றின் வெயில்
முழுமையாகப் பட்டு வாடி, வளைந்த பலா மரங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் இக்கொடிய
பாலைவன வழியில், உன்னோடு துணையாகப் போவதற்கு உடன்பட்டதுதான் இவள் செய்த குற்றமா?
உன்னைப் பிரிவாள் என்று நினைத்த
மாத்திரத்திலேயே அவளது கை வளைகள் கழன்று விழுகின்றன. இவளது நிலையை எண்ணி நான் மிகவும்
வருந்துகிறேன்.
Comments
Post a Comment