25. பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே!

 

25. பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே!

 

பாடியவர்: பேரிசாத்தனார்

இவர் வட வண்ணக்கண் பேரிசாத்தனார் என்றும் குறிக்கப்படுகின்றார்.    பேரி என்ற சொல்லுக்கு முரசு என்று பொருள்.  இவரது இயற்பெயர் சாத்தனார்.  இவர், ஒருபாடலில் கடலலையின் ஒலிக்கு முரசின் ஒலியை உவமையாகக் கூறியதால் பேரி சாத்தனார் என்று அழைக்கப்பட்டார்.  தங்கத்தைப் பரிசோதனை செய்பவர்களுக்கு வண்ணக்கர் என்பது தொழிற்பெயர்.  மற்றும், இவர் வட நாட்டிலிருந்து தமிழகத்தில் குடியேறியதால் வட என்ற அடைமொழியும் இவர் பெயரோடு சேர்க்கப்பட்டுள்ளது.  இவர் வடம வண்ணக்கர் என்றும் குறிக்கப்படுகின்றார். இவர் புறநானூற்றில் இயற்றிய ஒரு செய்யுள் (198) மட்டுமல்லாமல் அகநானூற்றில் 5 செய்யுட்களையும் (38, 214, 242, 268, 305), நற்றிணையில் 8 செய்யுட்களையும் (25, 37, 67, 104, 199, 299, 323, 378), குறுந்தொகையில் 5 செய்யுட்களையும் (81, 159, 278, 314, 366) இயற்றியுள்ளார்.

 

திணை: குறிஞ்சி

 

துறை: தலைமகளைத் தோழி குறை நயப்புக் கூறியது

 

துறை விளக்கம்: தலைவன் தன் காதலை ஏற்குமாறு விடுத்த வேண்டுகோளை (குறையை), தோழி தலைவியிடம் கொண்டு சென்று, அவள் அதை விரும்பிக் கேட்கும் வண்ணம் பக்குவமாக எடுத்துரைப்பது.

 

பாடலின் பின்னணி:

சில நாட்களுக்குமுன் ஓர் இளைஞன் ஒரு தினைப்புனத்தில் தலைவியைக் கண்டான். அவள் அழகைக் கண்டு வியந்து, அவள் ஒரு மானுடப் பெண்ணா அல்லது விண்ணுலக மங்கையா என்று மயங்கினான். சற்று நேரத்தில், அவள் மானுடப்பெண் என்பதை உணர்ந்தான்; அவள் மீது காதல்கொண்டான். ஆனால், தன் காதலை அவள் ஏற்றுக்கொள்வாளா என்ற ஐயத்தால், அவன் தன் காதலை அவளிடம் கூறவில்லை. தலைவியும் அவன்மீது காதல்கொண்டாள். இயற்கையாக அவளிடத்தில் உள்ள நாணத்தால் தன் காதலைப் பற்றி அவளால் அவனிடம் கூற இயலவில்லை. மறுநாள், அவளை முதல்நாள் சந்தித்த இடத்திற்கு அந்த இளைஞன்  வந்தான். தலைவியும் தோழியும்  தினைப்புனத்தில் கிளிகளை விரட்டுவதற்காக அங்கு வந்தார்கள். அவர்களோடு சேர்ந்து அவனும் கிளிகளை விரட்டிப் பொழுதைக் கழித்தான்.  தன் காதலைத் தலைவியிடம் கூற விரும்பினான். ஆனால், தன் காதலைப் பற்றித் தலைவியிடம் கூற வாய்ப்பில்லாததால், அதைக் கூறாமலேயே திரும்பிச் சென்றான்.

 

அவன் அவள் நினைவாகவே இருந்தான். மறுநாள் தலைவியின் தோழியைச் சந்தித்துத் தன் காதலைப் பற்றிக் கூறி, தன் காதலைத் தலைவி ஏற்றுக்கொள்வதற்கு உதவி செய்யுமாறு வேண்டினான். அவனுக்கு உதவி செய்வதற்குத் தோழி சம்மதித்தாள். அடுத்த நாள், அந்த இளைஞனின் காதலைப் பற்றித் தலைவியிடம் கூறுவதற்குமுன், அவள் அவனை விரும்புகிறாளா என்று தெரிந்துகொள்வதற்காகப் பேச ஆரம்பித்தாள்.

 

தோழி, தலைவியிடம் ”முந்தாநாள், அந்த இளைஞன் உன்னிடம் தன் காதலைச் சொல்லத்தான் வந்தான்.  ஆனால் அதற்கேற்ற சமயம் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றான்.” என்று கூறினாள். தான் அவனைக் காதலிப்பதைப்போல் அவனும் தன்னைக் காதலிக்கிறான் என்பதை உணர்ந்த தலைவி,  அந்த இளைஞனுக்குத் தன் காதலைக் கூற வாய்ப்பில்லாமல் போய்விட்டதை நினைத்துப் பெருங்கவலை கொண்டாள். அவளது வருத்தத்தை மாற்ற எண்ணிய தோழி, "அவன் வருத்தத்துடன் செல்லவில்லை" என்று மாற்றிப் பேசினாள். தலைவி முகத்தில் அவள் அடைந்த ஏமாற்றத்தையும் காதலையும் தோழி புரிந்துகொண்டாள். தலைவி அந்த இளைஞனைக் காதலிக்கிறாளா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகத் தோழி ஒரு பொய்யைக் கூறினாள்.

 

"அவன் என்னை ஒருவிதக் காதல் பார்வையோடு பார்த்தான். தேன் தேடி அலைகின்ற வண்டு பூக்களை ஆராயாமல் சுற்றுவது போல அவனது பார்வையும் தடுமாறியது" என்று தோழி கூறினாள். அந்த இளைஞனைப் பற்றித் தோழி அவ்வாறு கூறியதைக் கேட்டவுடன்,  அச்சம், ஏமாற்றம் மற்றும் கோபம் ஆகிய உணர்வுகளால் தலைவியின் முகம் சிவந்தது.  அதைக் கண்டவுடன், தலைவி அந்த இளைஞனைக் காதலிக்கிறாள் என்பதைத் தோழி உறுதி செய்துகொண்டாள். உடனே தோழி, "உன் காதலைப் புரிந்து கொள்ளாமல் நான் இப்படிப் பேசியது என்னுடைய பண்பற்ற செயல்; அந்த நிகழ்ச்சி என் மனதில் நின்றதால் நான் நினைத்ததை உன்னிடம் பகிர்ந்துகொண்டேன்" என்று கூறித் தலைவியைச் சமாதானப்படுத்தினாள்.

 

அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன
செவ் வரி இதழ் சேண் நாறு பிடவின்
நறுந் தாது ஆடிய தும்பி பசுங் கேழ்ப்
பொன் உரை கல்லின் நல் நிறம் பெறூஉம்
வள மலை நாடன் நெருநல் நம்மொடு
கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது
அல்லல் அன்று அது காதல் அம் தோழி
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி
கண்டும் கழல் தொடி வலித்த என்
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே

 

 

அருஞ்சொற்பொருள்:

1. அவ்வளை –அழகிய சங்கு; வெரிநின் - முதுகு; ஈர்த்தன்ன – தீட்டியதைப்போல

2. செவ்வரி – சிவந்த வரி; சேண் – நெடுந்தொலைவு; நாறும் – மணக்கும் ; பிடவு – பிடவ மலர்

3. தும்பி – வண்டு; கேழ் – நிறம்

4. பெறூஉம் – பெறும்

5. நெருநல் – நேற்று

6. மலிதல் – நிறைதல்; அசைஇ – தங்கி

8. அல்லல் – துன்பம்

9. வேட்கை – விருப்பம்; ஊதா – ஊதாத

10. வண்டு ஓரன்ன – வண்டைப் போன்ற; தண்டா – கெடாத

11. வலித்தல் – செறித்தல், இறுக்கிப் பிடித்தல்

12. பண்பில் – பண்பில்லாத; நினைப்பாகின்று – நினைப்பாகவே இருக்கின்றது

 

பதவுரை:

1. அவ்வளை வெரிநின் அரக்கு ஈர்த்து அன்ன - அழகிய சங்கின் முதுகில் அரக்கைத் தேய்த்தது போல

2. செம் வரி இதழ் சேண் நாறு பிடவின் - சிவந்த வரிகளைக் கொண்ட இதழ்களையும் நெடுந்தொலைவுக்கும் மணக்கும் பிடவமலர்களின்

3. நறும் தாது ஆடிய தும்பி பசும் கேழ் - மணமிக்க தாதுக்களில் அளைந்து ஆடிய தும்பி, பசிய நிறத்தையுடைய

4. பொன் உரை கல்லின் நன் நிறம் பெறூஉம் - பொன்னை உரைத்துப்பார்க்கும் கல்லைப் போன்று நல்ல நிறத்தைப் பெறும்

5. வள மலை நாடன் நெருநல் நம்மொடு - வளமிக்க மலைநாட்டினன் நேற்று நம்மோடு

6. கிளை மலி சிறுதினை கிளி கடிந்து அசைஇ – சுற்றமாக வந்து மொய்க்கும் சிறிய தினைப்புனத்துக் கிளிகளை ஓட்டிக்கொண்டு தங்கியிருந்தவன்

7. சொல் இடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது - தன் குறையைக் கூறுவதற்கேற்ற வாய்ப்பினைப் பெறாதவனாகி அகன்று போனான், அப்படிச் சென்றது

8. அல்லல் அன்று அது காதல் அம் தோழி - நமக்குத் துன்பம் தருவதன்று, அன்புடைய தோழியே!

9. தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா - தேனை உண்ணும் விருப்பத்தினால் மலரின் தன்மையை ஆராய்ந்து பார்த்து ஊதாமல் செல்லும்

10. வண்டு ஓர் அன்ன அவன் தண்டா காட்சி - வண்டின் ஒரு தன்மையை ஒத்த அவனது கெடாத தோற்றத்தை

11. கண்டும் கழல் தொடி வலித்த என் - கண்டும் கழன்றுபோன வளையல்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டது எனது

12. பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே - பண்பற்ற செயல் என்ற நினைப்பாகவே இருக்கின்றது.

 

கொண்டு கூட்டு: தோழி, வெற்பன் நெருநல் நம்மொடு கிளிகடிந்து அசைஇ, பெறாஅன் பெயர்ந்தனன்; அது பெயர்ந்த அல்லல் அன்று; அவன் தண்டாக் காட்சி கண்டும் வலித்த என் பண்பில் செய்தி நினைப்பாகின்று எனக் கூட்டி முடிவு செய்க.

 

உரை:

தோழீ! நேற்று நம்முடைய தினைப்புனத்திற்குத் தலைவன் வந்தான். அவனுடைய மலைநாட்டில், சங்கின் முதுகுப் புறத்தில் சிவந்த அரக்கைக் கீறினாற்போல சிவந்த வரிகளையுடைய பிடவம்பூக்கள் பூத்திருக்கின்றன. அதன் நறுமணமிக்க மகரந்தத்தில் ஆடிய கரிய தும்பி (வண்டு), பொன்னின் மாற்றை அறிய உதவும் உரைகல்லில் தங்கம் உறைந்து கிடப்பதுபோலக் காட்சியளிக்கிறது. அத்தகைய வளமிக்க மலைநாடன் அவன்.

அவன் நேற்று நம்மோடு சேர்ந்து கிளிகளை ஓட்டினான். நம்முடன் அமர்ந்து இளைப்பாறினான். ஆனால், தன் காதலை வெளிப்படுத்த தகுந்த சூழலும் தனியிடமும் கிடைக்காததால், ஒன்றும் பேசாமலேயே ஊருக்குத் திரும்பிச் சென்றான். அவன் அங்கிருந்து சென்றது எனக்கு வருத்தத்தைத் தரவில்லை. மலரின் மென்மையை உணர்ந்து தேன் குடிக்காமல், கண்ட இடமெல்லாம் பறந்து திரியும் வண்டு போலத்தான் அவனும் இருக்கிறான். அத்தகைய குணம் கொண்டவனைப் பார்த்தும், அவன்மீது நான்கொண்ட காதலால், என் கையில் இருந்த வளையல்கள் தானாகவே கழன்றன. கழன்ற அந்த வளையல்களை மீளவும் செறித்துக்கொண்ட எனது பண்பற்ற செயலானது, என்னைவிட்டு அகலாத ஒரு நினைப்பாகவே இருக்கின்றதே!

 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே

28. கள்வர்போலக் கொடியன்!