22. நாடன் வந்தனன்!
22. நாடன் வந்தனன்!
பாடியவர்: தெரியவில்லை[1]
திணை: குறிஞ்சி
துறை: வரைவு மலிந்த தோழி தலைமகட்குச்
சொல்லியது
துறை விளக்கம்: விரைவில்
தலைவனுடன் தலைவிக்கு நிகழவிருக்கும் திருமணத்தைப்
பற்றிய செய்தியைத் தோழி தலைவியிடம் கூறியது.
பாடலின் பின்னணி:
ஒரு குறிஞ்சி நிலப்பகுதியில் அறுவடைக்குத் தயாராக
நின்ற தினைப்புனத்தைக் காக்கும் பொறுப்பில் தலைவியும் அவளது தோழியும் இருந்தனர். பசுமை
போர்த்திய மலைச்சரிவுகளில் காற்று மெதுவாக வீசியது. அப்போது ஒரு பெரிய பெண் குரங்கு,
தன் துணையுடன் உயர்ந்த பாறைகளில் ஏறி, முற்றிப் பழுத்த தினைக் கதிர்களை இரு கைகளும்
நிறையும் அளவுக்குப் பறித்து, அவற்றைத் தனது கன்னங்களில் அடைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன்
ஓடியது. அந்தக் காட்சியைக் கண்ட தலைவி, தன் காதலனுடன் கழித்த இனிய நாட்களை நினைத்து
மனம் நெகிழ்ந்தாள். பொருள் தேடிப் பிரிந்து சென்ற தலைவன் எப்போது திரும்புவான் என்ற
ஏக்கம் அவள் உள்ளத்தை நாளுக்கு நாள் வாட்டியது. வறட்சியால் வாடும் நிலம்போல் அவளது
முகமும் பசலையால் நிறம் இழந்தது; அவள் கண்களில் இருந்த ஒளியும் மங்கியது.
ஒருநாள்,
தலைவனும் சில பெரியோர்களும் தலைவியின் வீட்டிற்கு வந்து தலைவியின் தந்தையிடம்
பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத்
தெரிந்துகொள்ளும் ஆவலோடு, அவர்களின் உரையாடலைத் தோழி மறைந்திருந்து கவனித்தாள்.
அவர்கள் தலைவனுக்கும் தலைவிக்கும் நடக்கப்போகும் திருமணத்தைப் பற்றிப் பேசுவதைக்
கேட்ட தோழிக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவள் அங்கிருந்து விரைந்து சென்று, தலைவியிடம்,
“ தலைவன் வந்துவிட்டான். அவனோடு வேறு சிலரும் வந்திருக்கிறார்கள். அவர்கள்
உனக்கும் தலைவனுக்கும் நடைபெறவிருக்கும் திருமணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தோழி! இனி உன் துயரம் முடிந்தது. வறண்ட
நிலத்திற்கு மழை வந்ததுபோல், உன் வாழ்விற்கும் இன்பம் திரும்பி வந்துவிட்டது”
என்று மனமார வாழ்த்தினாள். இவ்வாறு, பிரிவின் வேதனையையும் கூடலின் பேரின்பத்தையும்
இயற்கை உவமைகளின் வழியாக இந்தச் சங்கப் பாடல் நயமுடன் வெளிப்படுத்துகிறது.
கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை
முந்து விளை பெருங் குரல் கொண்ட மந்தி
கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு தன்
திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி 5
வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன்
வந்தனன் வாழி தோழி உலகம்
கயம் கண் அற்ற பைது அறு காலை
பீளொடு திரங்கிய நெல்லிற்கு 10
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே
அருஞ்சொற்பொருள்:
1. கொடிச்சி – குறிஞ்சி நிலப் பெண்; அடுக்கல் – மலை அடுக்கு; பைந்தினை – பசுமையான தினைப் பயிர்
2.
முந்து விளை – முதிர்ந்து விளைந்த; பெருங்குரல் – பெரிய தினைக் கதிர்; மந்தி –
பெண் குரங்கு
3. கல்லாக் கடுவன் – அறிவு முதிராத, பயிற்சி பெறாத ஆண்
குரங்கு
நல்வரை – நல்ல மலை
4. அங்கை – உள்ளங்கை; ஞெமிடுதல் - கசக்குதல்
5. திரை அணல் – சுருக்கங்களை உடைய தாடி, தொண்டைப்பகுதி;
கொடுங்கவுள் – வளைந்த கன்னம்; முக்குதல் – நிரம்ப வாயிற்
பெய்து உண்ணுதல்
6. வான் - ஆகாயம்;
பெயல் – மழை; நோன்பியர் – நோன்பிருப்பவர்கள்
7. கை ஊண் இருக்கை – கையில் உணவை ஏந்தி அமர்ந்திருக்கும்
நிலை; நாடன் – குறிஞ்சிநிலத் தலைவன்
9. கயம் கண் அற்ற – குளங்கள் நீர் வற்றிப்போன; பைது அறு காலை
– பசுமை அழிந்த வறட்சிக் காலம்
10. பீளொடு திரங்கிய – கதிர் பருவத்திலேயே காய்ந்துபோன;
நள்ளென் யாமத்து – நள்ளிரவில்
பதவுரை:
1. கொடிச்சி காக்கும் அடுக்கல் பைம் தினை
- குறமகள் காக்கும் மலைச் சரிவிலுள்ள பசிய தினையின்
2. முந்து விளை பெரும் குரல் கொண்ட மந்தி
- முதலில் விளைந்த பெரிய கதிரினைக் கவர்ந்துகொண்ட பெண்குரங்கு
3. கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி - அவ்வாறு
பறிப்பதை அறியாத ஆண்குரங்கோடு நல்ல மலையில் ஏறி
4. அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு – உள்ளங்கை
நிறைய கசக்கித் தன் கையிலே கொண்டு, தன்னுடைய
5. திரை அணல் கொடும் கவுள் நிறைய முக்கி –
சுருக்கம் விழுந்த கன்னத்து மயிர்களையுடைய வளைந்த உள்வாய் நிறைய அமுக்கிக்கொண்டு
6. வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர் - வானிலிருந்து
விழுகின்ற மழையில் நனைந்த முதுகினையுடையவாய், நோன்பிருப்போர்
7. கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன் - கையில்
வாங்கிய உணவுடன் அமர்ந்திருப்பதைப்போல் காட்சியளிக்கும் குறிஞ்சிநிலத்தின் தலைவன்
8. வந்தனன் வாழி தோழி உலகம் - வந்துவிட்டான்,
வாழ்க தோழியே! உலகமானது
9. கயம் கண் அற்ற பைது அறு காலை - குளங்கள் காய்ந்துபோகுமாறு பசுமை நீங்கிய பொழுது
10. பீளொடு திரங்கிய நெல்லிற்கு - இளங்கதிர்களோடு
வாடிப்போன நெல்லுக்கு
11. நள்ளென் யாமத்து மழை பொழிந்து ஆங்கே –
நள்ளிரவில் மழை பொழிந்ததுபோல
கொண்டு கூட்டு: தோழி, வாழி, நெல்லிற்கு
மழைபொழிந்தாங்கு, நாடன் வந்தனன் எனக் கூட்டுக.
உரை:
தோழீ! நீ வாழ்க!
குறிஞ்சிநிலப் பெண் காவல் காக்கும் தினைப்புனத்தில் முதிர்ந்த தினைக் கதிர்களைப்
பறித்து, தன் ஆண் குரங்குடன் மலை உச்சிக்குச் சென்று, கைகளில் தேய்த்து, வாயில்
அதக்கிக்கொண்டு அமர்ந்திருக்கும் குரங்கின் தோற்றமானது, மழையில் நனைந்தபடி கையில்
உணவை ஏந்தி அமர்ந்திருக்கும் தவசிகளைப்போலத் தோன்றும். அத்தகைய மலைநாட்டை உடைய நம்
தலைவன் நம்மைத் தேடி வந்துள்ளான். உலகில் குளங்கள் வற்றி, வறட்சியால் நெற்பயிர்கள்
கதிர் பருவத்திலேயே காய்ந்து மடியும் வேளையில், நள்ளிரவில் பெய்த பெருமழையானது
எப்படி அந்தப் பயிர்களைக் காப்பாற்றுமோ, அதுபோல உன்னைத் திருமணம் செய்துகொள்ள அவன்
வந்துள்ளான்!
சிறப்புக் குறிப்பு:
“பெரிய கதிர்க்
கொத்துகளைக் கொய்த பெண் குரங்கு ஒன்று, தன் ஆண் குரங்குடன் நல்ல மலையின் மீது ஏறி”
என்பது, ”நீயும் மணவாழ்வு மேற்கொண்டு தலைவனுடன் அவனுடைய மனையகம் அடைந்து, அவன்
கொண்டுவந்த பொருளைப் பகுத்துண்டு இனிது வாழ்வாய்” என்பதைக் குறிப்பதாக ஔவை சு.
துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.
Comments
Post a Comment