21. வலவ, உதுக் காண்!
21. வலவ, உதுக் காண்!
பாடியவர்: மருதன் இளநாகனார்
இவரை மதுரை
மருதன் இளநாகனார் என்றும் கூறுவர். இவர்
பாடிய பாட்டுக்களை ஆராய்ந்து பார்த்தால் இவர் திருச்செந்தூர் அருகில் பிறந்தவராக
இருக்கலாம் என்று ஔவை சு. துரைசாமிப்பிள்ளை குறிப்பிடுகிறார். இவர் மருதத்திணை சார்ந்த பாடல்களை இயற்றுவதில்
வல்லவர். இவர் தந்தை பெயர் மருதன். ஆகவே, தந்தையின் பெயர் காரணமாகவும் மருதத்திணைக்குரிய பாடல்களை
இயற்றியதாலும் இவர் மருதன் இளநாகனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று
கருதப்படுகிறது. இவரது இயற்பெயர் இளநாகன். இவர் புறநானூற்றில் ஐந்து செய்யுட்களும்,
அகநானூற்றில் 23 செய்யுட்களும், கலித்தொகையில் மருதக்கலி எனப்படும் 35 செய்யுட்களும், குறுந்தொகையில் 4 செய்யுட்களும், நற்றிணையில் 12 செய்யுட்களும் இயற்றியுள்ளார்.
திணை: முல்லை
துறை: வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச்
சொல்லியது
துறை விளக்கம்: தன் கடமையை (போர் அல்லது தொழில்) வெற்றிகரமாக
முடித்துவிட்டு வீடு திரும்பும் தலைவன், தன் தேரோட்டியிடம் (பாகனிடம்) சொல்வது.
பாடலின் பின்னணி:
தலைவன், கார்காலம் தொடங்குவதற்குள் தன் கடமைகளை
முடித்துவிட்டுத் திரும்பிவிடுவதாகத் தலைவியிடம் கூறிப் பிரிந்து சென்றான்.
சொன்னபடி கார்காலமும் தொடங்கி, மழையும் பெய்ய ஆரம்பித்துவிட்டது. தன் பணியை
முடித்த தலைவன், வெகுதொலைவிலிருந்து தன் மனைவியைக் காண்பதற்காகத் தேரில் விரைந்து
வந்துகொண்டிருக்கிறான். அவனுடைய தேருக்குப் பின்னால் அவனது பணியாட்கள் தொடர்ந்து
நடந்து வருகிறார்கள். நீண்ட தூரம் வேகமாக நடந்து வந்ததால் அவர்கள் மிகவும்
களைப்படைந்துள்ளனர்.
வரும் வழியில் தலைவன் ஒரு காட்சியைக் காண்கிறான். மழை
பெய்து ஓய்ந்த ஈரமான காட்டில், அழகிய புள்ளிகளை உடைய ஒரு காட்டுக்கோழி (கான
வாரணம்) தன் அலகால் மண்ணைத் தோண்டி, கிடைத்த இரையைத் தன் பேடைக் கோழிக்கு
(பெட்டைக் கோழி) ஊட்டுவதற்காக அன்போடு பார்த்துக் கொண்டு நிற்கிறது.
இந்தக் காட்சியைக் கண்டதும், தலைவனுக்குத் தன் மனைவியின்
நினைவு மேலோங்குகிறது; அவளை விரைந்து சென்று காண வேண்டும் என்ற ஆவல்
பெருக்கெடுக்கிறது. உடனே அவன் தன் தேர்ப்பாகனை நோக்கி, "பாகனே! மிகு
தொலைவிலிருந்து நடந்து வந்ததால், களைப்படைந்த நம் பணியாட்கள், தம் இடையில் கட்டிய
கச்சையைத் தளர்த்தி, ஆங்காங்கே தங்கி இளைப்பாறி மெல்ல வரட்டும். நீ குதிரைகளைத்
தார்க்கோலால் தீண்டித் தேரை விரைந்து
செலுத்துவாயாக! அதோ பார், அந்தக் காட்டுக்கோழியின் அன்பான நிலையை!" என்று
கூறுகிறான்.
விரைப் பரி வருந்திய வீங்கு செலல்
இளையர்
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ
வேண்டு அமர் நடையர் மென்மெல வருக
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு
ஏமதி வலவ தேரே உதுக் காண் 5
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன
அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக்
காமரு தகைய கான வாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி 10
நாள் இரை கவர மாட்டி தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே
அருஞ்சொற்பொருள்:
1.விரைதல் – வேகமாகச் செல்லுதல்; பரி - குதிரை;
வீங்குதல் – மிகுதல்; செலல் – செல்லுதல்
2. அரை - இடுப்பு;
செறிதல் – நெருங்குதல்; கச்சை - இடுப்பில் இறுக்கிக் கட்டும் துணிப்பட்டை; அசைஇ – தங்கி
3. அமர் – விருப்பம்;
மென்மெல – மெல்லமெல்ல
4. வை – கூர்மை;
தீண்டி - தொட்டு
5. ஏமதி - ஏவுமதி
என்பது திரிந்து ஏமதி ஆகியது. ஏவுதல் – செலுத்துதல்; வலவன் - தேரோட்டி; உதுக்காண்
– அங்கே பார்;
6. உருக்குறு – உருக்கப்பட்ட;
விதிர்த்தல் – தெளித்தல்
7. அரிக் குரல்
– அரித்த ஓசை; மிடறு - கழுத்து; பொறி – புள்ளி
8. காமரு – காண்பவர்
விரும்பும்; தகைய – தன்மை உடையதாக; வாரணம் – காட்டுக்கோழி
9. பெயல் - மழை;
வியல் – அகன்ற; புறவு – காடு
10. மலிர - நன்றாக;
கெண்டி – கிளறி
11. நாள் – காலை;
மாட்டி – பற்றிக்கொண்டு
12. பேடை – பெண்
கோழி; பெருந்தகு - பெருமை வாய்ந்த
பதவுரை:
1. விரை பரி வருந்திய வீங்கு
செலல் இளையர் - விரைந்த நடையினால் வருந்திய நெடுந்தொலைவு பயணம்செய்த பணியாட்கள்
2. அரை செறி கச்சை யாப்பு அழித்து
அசைஇ - இடுப்பில் இறுகக் கட்டிய கச்சையை அவிழ்த்துவிட்டுத் தங்கியவாறு
3. வேண்டு அமர் நடையர் மென்மெல
வருக - வேண்டிய விருப்பமுடைய நடையினராய் மெல்லமெல்ல வரட்டும்;
4. தீண்டா வை முள் தீண்டி நாம்
செலற்கு - இதுவரை தீண்டாத கூரிய முள்ளையுள்ள தார்க்கோலால் தீண்டி, நாம் செல்வதற்கு
5. ஏமதி வலவ தேரே உது காண்
- விரைந்து தேரைச் செலுத்துவாயாக! வலவனே! அங்கே பார்!
6. உருக்குறு நறு நெய் பால்
விதிர்த்து அன் - உருக்கிய நறுமணமுள்ள நெய்யைப் பாலில் தெளித்தாற்போல்
7. அரி குரல் மிடற்ற அம் நுண்
பல் பொறி – அரித்த ஓசையையுடைய கழுத்தையும், அழகிய நுண்ணிய பல பொறிகளையும் கொண்ட
8. காமரு தகைய கான வாரணம் -
காண்போர் விரும்பும் தன்மையவான காட்டுக்கோழியின் சேவல்
9. பெயல் நீர் போகிய வியல் நெடும்
புறவில் - மழை நீர் ஓடிய அகன்ற நெடிய முல்லைக்காட்டில்
10. புலரா ஈர் மணல் மலிர கெண்டி
- புலராத ஈர மணலை நன்றாகக் கிளறி
11. நாள் இரை கவர மாட்டி தன்
- அன்றைய நாளுக்குரிய இரையை அலகினால் பற்றிக்
கொண்டு
12. பேடை நோக்கிய பெரும் தகு
நிலையே - தன் பெடையை நோக்குகின்ற பெருமை வாய்ந்த நிலையினை
கொண்டு கூட்டு: வலவ, வாரணம் புறவிற் கெண்டி, நாளிரை
மாட்டிப் பெடை நோக்கிய பெருந்தகு நிலையை உதுக்காண்; இதனைக் கண்டும் தாழ்த்துச்
சேறல் நன்றன்று; ஆதலால், இளையர் அசைஇ வேண்டமர் நடையர், மென்மெல வருக; நாம்
செலற்குத் தீண்டா வைமுள் தீண்டி, ஏமதி எனக் கூட்டுக.
உரை:
பாகனே! வேகமாக நடந்ததால் களைப்படைந்த பணியாட்கள், தங்களின்
இடுப்புக் கச்சையை அவிழ்த்துவிட்டு மெதுவாக ஓய்வெடுத்துக் கொண்டு வரட்டும். நீ
கூர்மையான தார்க்கோலால் குதிரையை முடுக்கித் தேரை விரைவாகச் செலுத்துவாயாக! அதோ
பார்! உருகிய நெய்யில் பாலைத் தெளித்ததுபோல கரகரப்பான ஓசை எழுப்பும் கழுத்தையும், அழகான புள்ளிகளையும் உடைய
காட்டுக்கோழி ஒன்று, மழை பெய்து ஈரம் காயாத காட்டின் மண்ணைக் கிண்டி,
புழுவைப்பிடித்துத் தன் பேடைக் கோழிக்குக் கொடுக்கப் பெருமையோடு நோக்கி நிற்கும் காட்சியைக்
பார்!
சிறப்புக் குறிப்பு:
சேவற்கோழி தன் பேடைக் கோழியிடம் அன்புகாட்டுவதைப்
பார்த்த தலைவன் தானும் விரைந்து சென்று தன் மனைவியிடத்தில் அன்பு காட்டவேண்டும் என்று
ஆவலோடு இருக்கிறான்.
Comments
Post a Comment