20. வாழிய மடந்தை!

 

20. வாழிய மடந்தை!

பாடியவர்: ஓரம்போகியார்

இவர் ஐங்குறுநூற்றில் மருதம் பற்றிய நூறு செய்யுட்களையும் இயற்றியவர்.  மேலும், இவர் அகநானூற்றில் இரண்டு செய்யுட்களையும் (286, 316), குறுந்தொகையில் ஐந்து செய்யுட்களையும் ( 10, 70, 122, 177, 384), நற்றிணையில் இரண்டு செய்யுட்களையும் (20, 360) இயற்றியுள்ளார்.  இவர் சேரமான் ஆதன் அவினி, சோழன் கடுமான் கிள்ளி, பாண்டியன், மத்தி, விராஅன் ஆகியோரைப் பாடியுள்ளார். 

திணை: மருதம்

துறை: பரத்தையிற்பிரிந்து வந்த தலைமகன் யாரையும் அறியேன் என்றாற்குத் தலைவி கூறியது.

துறை விளக்கம்: பரத்தையிடமிருந்து திரும்பி வந்த தலைவன், தலைவியிடம் வந்து, "எனக்கு உன்னைத் தவிர வேறு யாரையும் தெரியாது; நான் எந்தத் தவறும் செய்யவில்லை" என்று பொய் கூறுகிறான்.  அவ்வாறு அவன் கூறியதைக் கேட்டு, கோபமும் ஊடலும் கொண்ட தலைவி அவனுக்குப் பதில் கூறுவதாக அமைந்தது.

 

பாடலின் பின்னணி:

ஒருநாள் தலைமகன் பரத்தையருடன் காலம் கழித்துவிட்டு, பின்னர் தலைமகளிடம் திரும்பி வருகிறான். அவன் நீண்ட நாட்கள் தன்னைப் பிரிந்திருந்ததற்கான காரணத்தை மறைக்க முயன்று, “நான் வேறு எந்தப் பெண்ணையும் அறியேன்; உன்னையே நினைத்திருந்தேன்” என்று கூறுகிறான். ஆனால் தலைமகள் அவன் சொற்களை நம்பவில்லை. அவன் பரத்தையருடன் இருந்ததைப் பலரும் கண்டிருந்தனர் என்பதையும், அதனைத் தானும் அறிந்திருப்பதையும் உணர்த்தும் வகையில் அவனுக்குப் பதிலளிக்கிறாள்.

அவள், “மலர்மணம் வீசும் கூந்தலையுடைய, அணிகலன்களால் ஒளிரும் ஒரு மடந்தை, உன் மார்பில் துயிலிருந்து எழுந்து, வளையல்கள் ஒலிக்கத் தெருவில் நடந்துசென்றாள். அவளுடைய பார்வையும், தோற்றமும், அணிகலன்களும், உன்னுடன் இருந்ததற்கான சான்றுகளாக விளங்கின. இவற்றையெல்லாம் கண்ட பிறகும், ‘நான் யாரையும் அறியேன்’ என்று கூறுவதை என்னால் நம்ப முடியாது?” என்று கேட்டு, அவனுடைய பொய்யை வெளிப்படுத்துகிறாள். இவ்வாறு, தலைமகள் தன் ஊடலையும், தலைமகனின் பொய்மையையும் நயமாக வெளிப்படுத்துகிறாள்.

 

ஐய குறுமகட் கண்டிகும் வைகி
மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர்த்
தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்குஇயல் அசைவர கலிங்கம் துயல்வர
செறிதொடி தெளிர்ப்ப வீசி மறுகில்           5
பூப்போல் உண்கண் பெயர்ப்ப நோக்கிச்
சென்றனள் வாழிய மடந்தை நுண் பல்
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர்குழை
பழம்பிணி வைகிய தோள் இணைக்                10
குழைந்த கோதை கொடி முயங்கலளே

 

 

அருஞ்சொற்பொருள்:

1. ஐய – ஐயனே (தலைவனே) ; குறுமகள் – இளமகள் (இங்கு பரத்தையைக் குறிக்கிறது); கண்டிகும் - கண்டோம்; வைகி – தங்கி

2. மகிழ்நன் - தலைவன்; துஞ்சி - உறங்கி; அவிழ்தல் - மலர்தல்; இணர் – பூங்கொத்து

3. தேம்பாய் – தேன் வழியும்; மராஅம் - கடம்பமரம்; கமழும் – மணக்கும்;

கூந்தல் - தலைமுடி

4. துளங்குதல் – துவளுதல்; அசைவரல் - சரிதல்; கலிங்கம் – ஆடை; துயல்வர – அசைந்து ஆட

5. செறிதல் - நெருக்கமாக இருத்தல்; தொடி - வளையல்; தெளிர்ப்ப – ஒலிக்க; மறுகு – தெரு

6. உண்கண் – மைதீட்டிய கண்கள் ; பெயர்ப்ப – சுழல

7. மடந்தை – இளம்பெண் (இங்கு பரத்தையைக் குறிக்கிறது)

8. சுணங்கு – தேமல்; அணிவுறுதல் - அணிதல்; பூணள் – அணிகலன்களை உடையவள்

9. முயக்கு – தழுவுகை; ஞெமிர்தல் - நசுங்குதல்; சோர்தல் – நிலை குலைதல்; குழை - காதணி;

10. பழம்பிணி - பழைய துயரம்; வைகிய – தங்கிய

11. குழைந்த - கசங்கிய; கோதை – பூமாலை; முயங்கலள் – முயக்கத்திலிருந்து நீங்கியவள்

 

பதவுரை:

1.ஐய குறுமகள் கண்டிகும் வைகி - ஐயனே! ஓர் இளம்பெண்ணைக் கண்டோம்; உன்னோடு தங்கி

2. மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர் – உன் மார்பில் உறங்கி, மலர்ந்த கொத்துக்களையுடைய

3. தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல் - தேன் ஒழுகும் கடம்பமரத்தின் பூக்கள் மணக்கும் கூந்தல்

4. துளங்கு இயல் அசைவர கலிங்கம் துயல்வர - அசைய, கட்டியிருந்த ஆடை தளர்ந்து அசைய,

5. செறி தொடி தெளிர்ப்ப வீசி மறுகில் – நெருங்கிய வளையல்கள் ஒலிக்கக் கைகளை வீசித் தெருவில்

6. பூப்போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி - பூப்போன்ற மையுண்ட கண்கள் சுழலப் பார்த்துக்கொண்டே

7. சென்றனள் வாழிய மடந்தை நுண் பல் - நடந்து சென்றாள், வாழ்க அந்தப் பெண்! நுண்மையான பல

8. சுணங்கு அணிவு உற்ற விளங்கு பூணள் - அழகுத்தேமல் படர்ந்து, ஒளிவிடும் அணிகலன்களை அணிந்த,

9. மார்பு உறு முயக்கு இடை ஞெமிர்ந்த சோர் குழை – (உன்)மார்பு முயக்குதலால் நசுங்கி நிலைகுலைந்து தொங்கும் காதணிகளையும்

10. பழம் பிணி வைகிய தோள் இணை – நீண்ட காலமாகக் காமநோய்கொண்ட  தோள்களையும்

11. குழைந்த கோதை கொடி முயங்கலளே – கசங்கிய மாலையினையும் உடைய கொடி போன்ற அவள் உன் முயக்கத்திலிருந்து நீங்கினவள்

 

உரை:

ஐயனே! ஓர் இளம்பெண்ணைக் கண்டோம். உன்னோடு தங்கியிருந்து, உன் மார்பில் உறங்கியதால், அவள் கூந்தலில் சூடியிருந்த மலர்கள் கலைந்து, கடம்பமரத்தின் தேன் நிறைந்த பூக்களைப்போல் நறுமணம் வீசி, அவள் முதுகில் அசைந்தது. அவளுடைய மெல்லிய ஆடை தளர்ந்து அசைந்தது. அவள் தெருவில் நடந்து சென்றபொழுது, அவள் கைகளில் நெருக்கமாக அணிந்திருந்த வளையல்கள் ஒலித்தன; மலர்களை ஒத்த மையிட்ட கண்கள் சுழலும்படி பார்த்துக்கொண்டு சென்றாள். வாழ்க அந்தப் பெண்! அவள் நுண்மையான பல அழகுத்தேமல் உடையவள்; ஒளிவிடும் அணிகலன்களை அணிந்தவள். நீ தழுவியதால், அவள் காதணிகள் நசுங்கி நிலைகுலைந்து தொங்குகின்றன. நீண்ட காலமாகக் காமநோய்கொண்ட  தோள்களையும் கசங்கிய மாலையினையும் உடைய கொடி போன்ற அவள் உன் முயக்கத்திலிருந்து நீங்கினவள். நீ அவளோடு வாழ்க!

 

சிறப்புக் குறிப்பு:

பரத்தையோடு தொடர்புகொண்ட கணவன், “நான் எவரையும் அறியேன்” என்று சொன்னது பொய் என்று தனக்குத் தெரியும் என்பதை அவனுக்குத் தெரியப்படுத்துவதற்காக “ ஐய, குறுமகள் கண்டிகும்” என்றாள் தலைவி.

 'மராஅம் கமழும் கூந்தல்' மற்றும் 'குழைந்த கோதை' என்பதன் மூலம், தலைவன் பரத்தையோடு நெருக்கமாக இருந்ததற்குச் சான்று என்று தலைவி கூறுகிறாள்.

தன் கைகளை வீசி, கண்களைச் சுழற்றித் தெருவில் நடந்து செல்வதன் மூலம், "தலைவன் இப்போது என்னுடையவன்" என்பதை ஊருக்கே பறைசாற்றுவதுபோல் அவளது நடை அமைந்திருப்பதைத் தலைவி சுட்டிக்காட்டுகிறாள்.

 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே

28. கள்வர்போலக் கொடியன்!