19. வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே!

 

19. வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே!

 

பாடியவர்: நக்கண்ணையார்.

நக்கண்ணன் என்னும் ஆண்பாற் பெயரைப்போல் நக்கண்ணை என்பது பெண்பாற் பெயராகும்.  இவர் தந்தையார் பெயர்  பெருங்கோழி நாய்கன் . கோழி என்பது உறையூருக்கு மற்றொரு பெயர்.  நாய்கன் என்ற சொல்லுக்கு வணிகன் என்று பொருள்.  ஆகவே, நக்கண்ணையார் என்று அழைக்கப்பட்ட இப்புலவர் உறையூரைச் சார்ந்த வணிக குலத்தில் தோன்றியவர். இவர் புறநானூற்றில் மூன்று பாடல்களையும் (83, 84, 85), அகநானூற்றில் 252-ஆம் பாடலையும், நற்றிணையில் இரண்டு பாடல்களையும் (19, 87) இயற்றியவர்.

 

திணை: நெய்தல்

 

துறை: புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது

 

துறை விளக்கம்: களவொழுக்கத்தில் தலைவியோடு பழகிய பிறகு, அவளைவிட்டுச் செல்லும் தலைவனிடம் “நீ விரைவில் தலைவியைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.” என்று தோழி வற்புறுத்துவது.

 

பாடலின் பின்னணி:

கடற்கரைச் சோலையில் தாழம்பூக்கள் மொட்டவிழ்ந்து, யானைத் தந்தங்களைப் போலவும் மான் கொம்புகளைப் போலவும் காட்சியளிக்கின்றன. அந்தப் பூக்களின் நறுமணம் அந்த இடத்தையே ஒரு திருவிழாக் களத்தைப்போல மாற்றியிருக்கிறது. அத்தகைய நல்மணமிக்க நெய்தல் நிலத்துத் தலைவன், தன் காதலியைத் தேடி இரவிலும் பகலிலும் எவருக்கும் தெரியாமல் வந்து சந்தித்துவிட்டுச் செல்கிறான். இவர்களின் களவொழுக்கம் ஊரிலுள்ள பெண்களுக்குத் தெரியவந்து, அலராகப் பரவத் தொடங்குகிறது. இதனால் தலைவியின் இல்லத்தார் அவளை வீட்டை விட்டு வெளியேறாதபடி காவலில் வைக்கத் திட்டமிடுகின்றனர்.

ஒருநாள், தலைவன் வழக்கம்போல் தன் அழகிய தேரில் வந்து தலைவியைச் சந்தித்துவிட்டுப் புறப்பட ஆயத்தமாகிறான். அப்போது குறுக்கிடும் தோழி அவனிடம், "தலைவனே! இதோ உன் பாகன் தேரைச் செலுத்தத் தயாராக இருக்கிறான், நீயும் புறப்படத் துணிகிறாய். ஆனால், நீ பிரிந்து செல்லும் இந்தச் சில நாட்களைக்கூடத் தாங்க முடியாமல், உன் நினைவாலே இவள் உயிர் துறந்துவிடுவாள் என்பதை நன்றாக உணர்ந்து கொண்டு, அதன்பின் உன் ஊருக்குச் செல்; இல்லையெனில், இவளை விரைவில் மணம் செய்துகொள்." என்று வற்புறுத்துகிறாள்.

 

இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்
சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை
பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு
நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி
விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப           5
இன மணி நெடுந் தேர் பாகன் இயக்க
செலீஇய சேறி ஆயின் இவளே
வருவை ஆகிய சில் நாள்
வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே

 

 

அருஞ்சொற்பொருள்:

1. இறவு - இறால் மீன்; புறம் – முதுகுப் பக்கம்; அன்ன- போல; பிணர் – சருச்சரை (சொரசொரப்பு); தடவு - பெருமை; முதல் – அடிப்பாகம்

2, சுறவு – சுறா மீன்; கோடு – கொம்பு; கோட்டன்ன – கொம்பைப் போன்ற

3. களிறு – ஆண் யானை; மருப்பு – தந்தம்; அன்ன- போல, முதிர்பு – முதிர்ச்சியுற்று

4. நல் – நல்ல; உழை – மான் (இங்கு பெண் மான்)

5. விழவு – விழா; கமழும் – மணக்கும்; உரவு – வலிமை; உரவுநீர் – வலிய நீர் (கடல்); சேர்ப்பன் – நெய்தல் நிலத்தலைவன்

6. இன – மிகுதியாக; இயக்க – செலுத்த

7. செலீஇய – செல்லும் பொருட்டு; சேறி ஆயின் – செல்வதாய் இருந்தால்;

8. வருவை – வருவாய்; சில் – சில

9. வாழாளாதல் – வாழ மாட்டாள்; நற்கு – நன்கு; அறிந்தனை – அறிந்தவனாக; சென்மே - செல்வாயாக

 

பதவுரை:

1. இறவு புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் - இறால் மீனின் முதுகைப் போன்ற சொரசொரப்பான, பருத்த அடியைக் கொண்டதும்;

2. சுறவு கோட்டு அன்ன முள் இலை தாழை - சுறா மீனின் கொம்பினைப் போன்ற முட்களை உடைய இலைகளைக் கொண்டதுமான தாழை மரத்தின்;

3. பெரும் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு - பெரிய களிற்றின் தந்தத்தைப் போன்ற தாழம்பூவின் அரும்புகள் முதிர்ந்து

4. நன் மான் உழையின் வேறுபட தோன்றி - நல்ல பெண்மான் தலை சாய்ந்து நிற்பதைப்போல மாறுபடத் தோன்றி

5. விழவு களம் கமழும் உரவு நீர் சேர்ப்ப - திருவிழா நடக்கும் இடத்தைப் போல நறுமணம் வீசும் வலிமையான கடற்பகுதியை உடைய தலைவனே!

6. இன மணி நெடும் தேர் பாகன் இயக்க - வரிசையாக மணிகள் கட்டப்பட்ட உன்னுடைய நெடிய தேரை உனது பாகன் ஓட்ட

7. செலீஇய சேறி ஆயின் இவளே - சென்று உனது ஊரை அடைவாய், இருப்பினும், இங்கிருக்கும் தலைவி

8. வருவை ஆகிய சில் நாள் - நீ பிரிந்து சென்று மீண்டும் திரும்பி வருவதற்கு இடைப்பட்ட அந்தச் சில நாட்களைக் கூடத் தாங்காமல் உயிர் வாழ மாட்டாள் என்பதை

9. வாழாள் ஆதல் நற்கு அறிந்தனை சென்மே - நன்றாகத் தெரிந்துகொண்டு, அதன் பிறகு நீ செல்வாயாக

 

கொண்டு கூட்டு: சேர்ப்ப, பாகன், இயக்க, செலீஇய சேறி; ஆயின், வருவையாகிய சின்னாள் வாழாளாதல்  நன்கு அறிந்தனை சென்மே எனக் கூட்டுக.

 

உரை:

கடற்கரைத் தலைவனே! உங்கள் ஊரில் உள்ள தாழை மரத்தின் அடிப்பகுதி சொரசொரப்பான இறால் மீனின் முதுகுபோல் இருக்கிறது. அதன் இலைகள் சுறா மீனின் கூர்மையான கொம்புபோல் முட்கள் நிறைந்துள்ளன. அந்தத் தாழையின் அரும்புகள் ஆண் யானையின் தந்தம்போல் உள்ளன.  அந்த அரும்புகள் முதிர்ந்து, நல்ல பெண்மான் தலைசாய்த்து நிற்பதைப்போல் தோன்றுகின்றன. அந்தப் பூக்கள் விரிந்து மணம் வீசுவது, திருவிழாக் களத்தில் வீசும் நறுமணம் போலக் கடல் காற்றுடன் கலக்கிறது. நிறைய மணிகள் கட்டிய நெடிய தேரை உன் பாகன் செலுத்த, நீ உன் ஊர் செல்லும் பொருட்டுப் போகிறாய். நீ திரும்பி வருவதாகக் குறிப்பிட்ட சில நாட்கள்வரை இவள் வாழ மாட்டாள் என்பதை  நன்கு அறிந்துகொண்டு நீ செல்வாயாக!

 

சிறப்புக் குறிப்பு:

”தாழை  பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி விழவுக் களம் கமழும்.” என்பதில் உள்ளுறையாக ஒரு பொருள் இருப்பதாகத் தோன்றுகிறது. அந்த உள்ளுறைப் பொருள்: தாழம்பூ மொட்டு முதிர்ந்து கீழே சாய்ந்தால், அதன் வாசனை எல்லா இடங்களிலும் பரவி, அதைப் பற்றி எல்லாரும் பேசுவார்கள். அதுபோலத்தான், உங்கள் இருவரின் களவொழுக்கம் இப்போது எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. ஊரில் உள்ள பெண்கள் அனைவரும் இதைப்பற்றியே பேசத் தொடங்கி, இது பெரிய அலராக மாறிவிட்டது.

தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் சந்திக்கும் இடத்தை "திருவிழாக் களம்" என்று தோழி புகழ்வது, "நீங்கள் இருவரும் விரைவில்  திருமணம் செய்துகொண்டு, நம் வீட்டில் மணவிழா நடக்க வேண்டும்" என்பதைத் தலைவனுக்கு மறைமுகமாக உணர்த்துவதற்காகக் கூறுவதாகத் தோன்றுகிறது.

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே

28. கள்வர்போலக் கொடியன்!