18. பல் படர் அகல வருவர், தோழி!

 

18. பல் படர் அகல வருவர், தோழி!

 

பாடியவர்: பொய்கையார்

இவர் புறநானூற்றுப் பாடல் 48-இல், ‘கள்நாறும்மே கானலந் தொண்டி; அஃது எம் ஊரே’ என்று கூறியிருப்பதிலிருந்து, இவருடைய ஊர் தொண்டி என்று கருதப்படுகிறது. புறநானூற்றில் இவர் பாடிய இரண்டு பாடல்களும் (48, 49) சேரமான் கோக்கோதை மார்பனைப் புகழ்ந்து பாடப்பட்டவையாகும். இவர் நற்றிணையில் 18-ஆம் செய்யுளையும் இயற்றியுள்ளார். செங்கணான் என்ற சோழ அரசனுக்கும், சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் கழுமலம் என்ற ஊரில் போர் நிகழ்ந்தது. அப்போரில் சோழன் செங்கணான் இரும்பொறையை வென்று, அவனைக் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் காவலில் வைத்ததாக வரலாறு கூறுகிறது. சேரமான் கணைக்கால் இரும்பொறை சிறையில் இருந்தபொழுது, பொய்கையார் சோழ மன்னனைக் 'களவழி நாற்பது' என்ற நூலில் சிறப்பித்துப் பாடி, அதற்குப் பரிசாகச் சேரன் கணைக்கால் இரும்பொறையைச் சிறையிலிருந்து மீட்டார் என்று கூறப்படுகிறது. அதற்கு மாறாக, பொய்கையார் மீட்பதற்கு முன்னரே சேரமான் கணைக்கால் இரும்பொறை இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 

திணை: பாலை

 

துறை: பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது

 

துறை விளக்கம்: தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் காலத்தில், அந்தப் பிரிவைத் தாங்க முடியாமல் வருந்தும் தலைவியைத் தோழி தேற்றி, "அவர் விரைவில் வந்துவிடுவார், நீ மனதைத் தளரவிடாமல் பொறுமையோடு இருக்க வேண்டும்" என்று ஆறுதல் கூறி வற்புறுத்துகிறாள்.

 

பாடலின் பின்னணி:

தலைவன் பொருள் ஈட்டுவதற்காக வெளியூருக்குச் சென்றிருக்கிறான். கார்காலம் தொடங்குவதற்கு முன்னரே திரும்பி வருவதாகக் கூறிச் சென்றான். இப்பொழுது கார்காலம் வந்துவிட்டது, ஆனால் தலைவன் இன்னும் வரவில்லை. தலைவன் வராததால், தலைவி மிகுந்த வருத்தத்தோடு இருந்தாள்.

தலைவியைப் பார்க்க வந்த தோழி, ”உனக்கு என்ன ஆயிற்று? ஏன் இவ்வாறு அழகிழந்து, உடல் மெலிந்து காணப்படுகிறாய்? உடல் நலமில்லையா?” என்று கேட்டாள். தலைவி, “உடல் நலமாகத்தான் இருக்கிறது; மனம்தான் சரியில்லை” என்றாள்.

“என்ன கவலை உனக்கு?” என்று அக்கறையோடு கேட்டாள் தோழி. அதற்குத் தலைவி, “கார்காலம் தொடங்குவதற்கு முன் வருவதாகச் சொல்லிச் சென்ற என் கணவர் இன்னும் வரவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு யுகம்போல் எனக்குத் தோன்றுகிறது. அவர் தொண்டி நகரத்தையும் கடந்து மலைப்பகுதிக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு என்ன இன்னல்களோ? எப்பொழுது வருவார் என்றே தெரியவில்லை. அவர் வராததால் கவலையோடு இருக்கிறேன். உண்ணாமல் உறங்காமல் அவர் வருகைக்காகக் காத்திருக்கிறேன்” என்றாள்.

”நமது மன்னன் சேரமான் கணைக்கால் இரும்பொறை, மூவன் என்ற குறுநில மன்னனோடு போர் புரிந்த பொழுது, அவனுடைய யானைப்படையில் இருந்த யானை ஒன்று மதம்பிடித்து ஆரவாரம் செய்தது. அதைக் கண்டு வீரர்கள் அஞ்சி நடுங்கி, உறக்கமில்லாமல் இருந்தார்கள். யானையின் மதம் தெளிந்து சினம் அடங்கியவுடன், அனைவரும் அமைதியாக உறங்கினார்கள் என்று கேள்விப்பட்டேன். அதுபோல், உன் கணவர் வந்தவுடன் உன் துன்பங்கள் எல்லாம் பகலவனைக் கண்ட பனிபோல் மறையும். மனம் கலங்காதே! அவர் விரைவில் வருவார்” என்று கூறித் தோழி தலைவியைத் தேற்றினாள்.

 

 

பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல
வருவர் வாழி தோழி மூவன்
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்
கானல்அம் தொண்டிப் பொருநன் வென் வேல்
தெறல் அருந் தானைப் பொறையன் பாசறை         5
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்
திரை தபு கடலின் இனிது கண் படுப்ப
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத்
தடாஅ நிலை ஒரு கோட்டன்ன
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே         10

 

 

அருஞ்சொற்பொருள்:

1. பருவரல் - வருத்தம்; படர் – துன்பம்

2. மூவன் – ஒரு குறுநில மன்னன்

3. எயிறு – பல்; முள் எயிறு – கூர்மையான பல்

4. கானல் – கடற்கரைச் சோலை; தொண்டி – சேரர்க்குறிய துறைமுகப் பட்டினம்; பொருநன் – தலைவன்; வென் வேல் – வெல்லும் வேற்படை

5. தெறல் – அழித்தல், வெல்லுதல்; தானை - படை; பொறையன் – சேரமான் கணைக்கால் இரும்பொறை; பாசறை - போர்க்களத்தில் தங்கும் தற்காலிகத் தங்குமிடம்

6. நடுக்குறூஉம் – நடுங்குகின்ற; துஞ்சா - தூங்காத; மறவர் – வீரர்

7. தபுதல் – அழிதல், அடங்குதல், கெடுதல்; கண்படுதல்  – உறங்குதல்

8. கடாஅம் - மதநீர்; கழீஇய – கழுவப்பட்ட (ஒழுகிய); கதன் (கதம்) – சினம்

9. தடாஅ – பெரிதாக; கோடு – கொம்பு; கோட்டன்ன – கொம்பைப் போன்ற

10. இலங்குதல் – ஒளிர்தல்; அருவிய – அருவியையுடைய; இறந்தோர் – கடந்து சென்றவர்

 

பதவுரை:

1. பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல - துன்பம் நிறைந்த மனத்தோடு உன்னுடைய பலவகையான கவலைகளும் நீங்கும்படியாக

2. வருவர் வாழி தோழி மூவன் - வந்துவிடுவார், வாழ்க தோழியே! மூவன் என்பவனுடைய

3. முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின் - முழு வலிமை கொண்ட முள் போன்ற பற்களைப் பிடுங்கித் தன் கோட்டைக் கதவில் பதித்துவைத்த 

4. கானல் அம் தொண்டி பொருநன் வென் வேல் - கடற்கரைச் சோலையைக் கொண்ட அழகிய தொண்டியின் தலைவனான, வெல்லும் வேற்படையையுடைய

5. தெறல் அரும் தானை பொறையன் பாசறை - கடத்தற்கரிய சேனையையுடைய பொறையன் என்பானின் பாசறையில் இருக்கும்

6. நெஞ்சு நடுக்குஉறூஉம் துஞ்சா மறவர் – நெஞ்சில் அச்சத்தால் நடுக்கம் மிகுந்து உறங்காத வீரர்கள்

7. திரை தபு கடலின் இனிது கண்படுப்ப - அலைகள் ஓய்ந்த கடலைப்போல இனிதாக உறங்குமாறு

8. கடாஅம் கழீஇய கதன் அடங்கு – மதநீர் கழுவப்பட்ட, சினம் தணிந்த யானையின் 

9. தடாஅ நிலை ஒரு கோட்டு அன்ன - பெரியதாய் நிலைத்துள்ள ஒரு கொம்பைப்போல்

10. ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே - ஒளிரும் அருவியையுடைய மலையைக் கடந்து சென்ற நம் தலைவர் இதோ வந்துவிடுவார்.

    

கொண்டு கூட்டு: தோழி, வாழி, குன்றிறந்தோர் பருவரல் நெஞ்சமொடு. பல்படர் அகல வருவர், நீ வருந்தற்க எனக் கூட்டுக.

 

உரை:

தோழீ! நீ வாழ்க!  தன் பகைவனான மூவனுடைய கூர்மையான பற்களைப் பிடுங்கிப் பதித்துவைத்த கதவுகளை உடைய பொறையனின் கோட்டை கடற்கரைச் சோலைகள் நிறைந்த தொண்டி நகரதில் உள்ளது. அவன் அந்தத் தொண்டி நகரின் தலைவன்; எவராலும் வெல்ல முடியாத படையை உடையவன்.  அவனுடைய பாசறையில், இருந்த ஒற்றைகொம்பையுடைய மதம்கொண்ட யானையைக் கண்டு, வீரர்கள் அனைவரும் நெஞ்சம் நடுங்கி, அஞ்சி, உறங்காமல் இருந்தனர்.  அந்த வீரர்கள்  அலை ஓய்ந்த கடலைப்போல் இனிதாக உறங்குமாறு, அந்த யானையின் மதநீர் ஒழிந்து, சினம் தணிந்தது.  அந்த யானையின் கழுவப்பட்ட ஒற்றைக் கொம்பைப்போல் விளங்கிய  அருவியையுடைய மலையைக் கடந்து சென்ற நம் தலைவர், உனது துன்பம் நிறைந்த நெஞ்சில் உள்ள பலவகைக் கவலைகளும் நீங்கும்படி விரைவில் வந்துவிடுவார்.

 

சிறப்புக் குறிப்பு:

இரும்பொறை என்னும் சேர மன்னன் மூவன் என்னும் குறுநில மன்னனை வென்றதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அந்த வரலாற்றுச் செய்தி இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.

 

மனைவியை விட்டுப் பிரிந்து செல்லும் கணவன் கார்காலத்தில் திரும்பி வருவது வழக்கம். மலையில் அருவி தோன்றுவது தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் திரும்பிவரும் கார்காலம் வந்துவிட்டது என்பதைக் குறிக்கிறது.   

 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே

28. கள்வர்போலக் கொடியன்!