17. நாணும் நனி மறந்து உரைத்தல் உய்ந்தனனே!
17. நாணும் நனி மறந்து
உரைத்தல் உய்ந்தனனே!
பாடியவர்: நொச்சிநியமங்கிழார்.
இவர் நியமம்
என்னும் ஊரைச் சார்ந்தவர் என்றும், நொச்சி வேலியால் சூழப்பட்டிருந்த ஊராகையால் அவ்வூர்
நொச்சிநியமம் என்று அழைக்கப்பட்டதாகவும் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில்
குறிப்பிடுகிறார். மற்றும், நொச்சிநியமம் என்ற ஊர் திருச்சிராப்பள்ளியிலிருந்து
முசிறிக்குச் செல்லும் வழியில் உத்தமர்கோயிலுக்கு அண்மையில் உள்ளது என்றும் அவர்
தம் நூலில் கூறுகிறார். இவர் நற்றிணையில்
மூன்று செய்யுட்களும் (17, 208, 209), அகநானூற்றில் ஒரு செய்யுளும் (52), புறநானூற்றில்
ஒரு செய்யுளும் (293) இயற்றியுள்ளார்.
திணை: குறிஞ்சி
துறை: முன்னிலைப்
புறமொழியாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
துறை விளக்கம்: ஒருவரிடம்
பேசுவதைப்போலத் தோன்றினாலும், உண்மையில் அந்தச் சொற்கள் மற்றொருவர் கேட்டு உணர வேண்டுமென்ற
நோக்கத்துடன் கூறப்படுவது முன்னிலைப் புறமொழி என்று அழைக்கப்படுகிறது. இந்தப்
பாடலில், தான் சொல்வதைத் தலைவன் உணர வேண்டுமென்ற நோக்கத்தோடு தலைவி தோழியிடம் ஒரு செய்தியைக்
கூறுகிறாள்.
பாடலின் பின்னணி:
தலைவி வாழும் இடம் ஓர் அழகிய மலைப்பகுதி. ஒருநாள்,
தலைவி அந்த மலைப்பகுதியின் தலைவனைக் கண்டாள். இருவரும் காதல் கொண்டார்கள். தோழியின்
உதவியோடு, ஒரு மறைவான இடத்தில் சில முறைப் பகலில் கூடி மகிழ்ந்தார்கள். ஒருநாள் தலைவனைச்
சந்திப்பதற்காக, வழக்கமாகச் சந்திக்கும் இடத்திற்குத் தலைவியும் தோழியும் சென்றார்கள்.
ஆனால், அன்று தலைவன் அங்கு வரவில்லை. அதனால், தலைவி மிகுந்த ஏமாற்றம் அடைந்தாள். அவனைச்
சந்திக்கலாம் என்று மீண்டும் சில நாட்கள் அதே இடத்திற்குத் தலைவி தோழியோடு சென்றாள்.
ஆனால், அப்போதும் தலைவன் வரவில்லை. அவன் வருவான் என்று எதிர்பார்த்து, அவர்கள் சந்திக்கும்
இடத்திற்குத் தலைவியும் தோழியும் நாள்தோறும் செல்வதை வழக்கமாகக் கொண்டார்கள்.
ஒருநாள்,
அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடத்திற்கு வந்து தலைவிக்காகத் தலைவன்
காத்திருந்தான். தலைவன் வந்திருக்கிறான் என்பதை அறிந்த தலைவி, அவன் சில நாட்கள்
வராததால் தான் அடைந்த வருத்தத்தைத் தலைவனுக்கு உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு,
மறைவான ஒரு இடத்தில் இருந்துகொண்டு, “தோழீ! ஒருநாள் நான் தலைவனின் மலையைப்
பார்த்தேன். அங்கு நாங்கள் இருவரும் கூடி மகிழ்ந்த நிகழ்வுகள் என் மனத்தில்
தோன்றின. அவனைச் சில நாட்களாகக் காணாததால், நான் மிகுந்த துயரம் அடைந்தேன்;
அழுதேன். நான் அழுவதைக் கண்ட என் அன்னை எனக்கு ஆறுதலாக, அன்பாகப் பேசி என்னைத்
தேற்றுவிக்க முயன்றாள். அப்பொழுது, நான் என் நாணத்தையும் மறந்து என்
களவொழுக்கத்தைப் பற்றி அவளிடம் கூற நினைத்தேன். ஆனால், கூறாது தவிர்த்தேன்.” என்று
தலைவன் கேட்குமாறு தோழியிடம் கூறுகிறாள்.
நாள்
மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து
மால் கடல் திரையின் இழிதரும் அருவி
அகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு
ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின் அன்னை 5
எவன் செய்தனையோ நின் இலங்கு எயிறு உண்கு என
மெல்லிய இனிய கூறலின் வல் விரைந்து
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து
உரைத்தல் உய்ந்தனனே தோழி சாரல்
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி 10
தீம் தொடை நரம்பின் இமிரும்
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே
அருஞ்சொற்பொருள்:
1. நாள்மழை - விடியற்காலத்தில் பெய்த
மழை (வைகறை மழை); தலைஇய – பெய்த
2. மால் - பெரிய; இழிதரும் – மேலிருந்து கீழே
விழும்
3. அகல் - அகன்ற; இரும் - பெரிய; கானம் - காடு;
அல்குதல் - தங்குதல்; அணி – அழகு
4. தகைவரை -அடக்கும் எல்லைக்குள்; சுழல்பு
– நிறைந்து, பெருக்கி
5. ஏந்து எழில் – மிகுந்த அழகு; மழைக்கண்
- குளிர்ச்சியான கண்கள்; கலுழ்தல் – அழுதல்
6. இலங்குதல் - ஒளிர்தல்; எயிறு - பல்; உண்கு–
உண்பேன்(முத்தமிடுவேன்)
7. வல் – விரைவு
8. நனி – மிகவும்
9. உய்ந்தனன் – தப்பித்தேன்; சாரல் – மலைச்சாரல்
10. மணி – நீலமணி; தும்பி – வண்டு
11. தீம் தொடை – இனிய ஓசையையுடைய யாழ் நரம்பு;
இமிரும் – ஒலிக்கும்
12. வான் – வானம்; தோய்தல் – தொடுதல்; வெற்பன்
– மலை நாடன்; அணங்கு - வருத்தம்
பதவுரை:
1. நாள்மழை தலைஇய நன் நெடும் குன்றத்து
- விடியற்காலத்தில் மழை பெய்த நல்ல நெடிய மலையிடத்தே
2. மால் கடல் திரையின் இழிதரும் அருவி -
கரிய கடலின் அலையைப்போல வீழ்கின்ற அருவியையுடைய
3. அகல் இரும் கானத்து அல்கு அணி நோக்கி
- அகன்ற பெரிய காட்டில் உறைந்திருக்கும் அழகை நோக்கி
4. தாங்கவும் தகைவரை நில்லா நீர்
சுழல்பு - அடக்கவும், அடக்கும் எல்லைக்குள் நில்லாமல் கண்களில் நீர் பெருகி
5. ஏந்து எழில் மழை கண் கலுழ்தலின்
அன்னை - மிகுந்த அழகினைக் கொண்ட குளிர்ச்சியான கண்கள் கலங்கி அழுதலால், என் அன்னை
6. எவன் செய்தனையோ நின் இலங்கு எயிறு
உண்கு என - எதனால் அழுகின்றாய்? உனது ஒளிரும் பற்களுள்ள வாயை முத்தமிடுவேன் என்று
7. மெல்லிய இனிய கூறலின் வல் விரைந்து -
மென்மையான இனிய சொற்களைக் கூறியதால், மிக வேகமாக,
8. உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து
- உயிரினும் சிறந்த நாணத்தை அறவே மறந்து
9. உரைத்தல் உய்ந்தனனே தோழி சாரல் –
சொல்லாமல் தப்பித்துக்கொண்டேன், தோழி! மலைச் சாரலில் உள்ள
10. காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி -
காந்தள் மலரின் தேனை உறிஞ்சிய நீலமணி போன்ற வண்டு
11. தீம் தொடை நரம்பின் இமிரும் -
இனிதாகத் தொடுக்கப்பட்ட நரம்பினைக் கொண்ட யாழைப்போல ஒலிக்கும்
12. வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு
எனவே - வானத்தைத் தொடும் மலைநாட்டினனின் மார்பு என்னை வருத்தியது என்று
கொண்டு கூட்டு: தோழி,
கானத்து அல்கு அணி நோக்கி, மழைக்கண், தகைவரை நில்லா நீர் சுழல்பு கலுழ்தலின்,
அன்னை எவன் செய்தனையோ நின் இலங்கு எயிறு உண்கு என மெல்லிய இனிய கூறலின், வல்
விரைந்து நாணும் மறந்து வெற்பன் மார்பு அணங்கு என உரைத்தல் உய்ந்தனன் எனக்
கூட்டுக.
உரை:
தோழீ! விடியற்காலையில் பெய்த மழை, நெடிய மலையிலிருந்து கடலின் அலையைப்போல் காட்டில் வீழ்கின்ற அழகிய
காட்சியைக் கண்டவுடன், அது தலைவனுடன்
கூடி மகிழ்ந்த இடமாதலால் என்னால் அடக்க முடியாத அளவுக்கு என் கண்களில் நீர் பெருகியது. நான் அழத்
தொடங்கினேன், நான் அழுவதைக் கண்ட என் அன்னை,
விரைந்து வந்து “ ஏன் அழுகிறாய்?
ஒளிரும் பற்களை உடையவளே! உனக்கும் நான் முத்தம் அளிக்கிறேன், அழாதே!” என்று கனிவான
சொற்களை இனிமையாகக் கூறினாள்.”என் வருத்தத்திற்குக் காரணம், மலைச்சாரலில் உள்ள
காந்தள் மலரின் தேனை உறிஞ்சிய நீலமணி போன்ற வண்டு, இனிதாகத் தொடுக்கப்பட்ட
நரம்பினைக்கொண்ட யாழைப்போல ஒலிக்கும் வானத்தைத் தொடும் மலைநாட்டினனின் மார்பைப்
பிரிந்ததனால் தோன்றிய வருத்தம்.” என்று
என் உயிரினும் சிறந்த நாணத்தை அறவே மறந்து உண்மையைச் சொல்லிவிடும் நிலையிலிருந்து, சொல்லாமல் தப்பித்துக்கொண்டேன்.
சிறப்புக் குறிப்பு:
காதலர்கள் இருவரும்
முன்பு சந்தித்து மகிழ்ந்த இடத்தை மீண்டும் பார்த்தாலோ, அல்லது அவர்கள்
மகிழ்ச்சியாக இருந்த காலத்தை நினைத்தாலோ, அந்த இனிய நினைவுகள் மீண்டும் மனதில்
தோன்றும். இங்கு, அந்த அழகான அருவிக் காட்சி தலைவிக்குப் பழைய காதல் நினைவுகளை
எழுப்பி, பிரிவாற்றாமையால் அவளுக்குத் துன்பத்தை ஏற்படுத்தியது.
அன்னை ‘எவன் செய்தனை?
நின் இலங்கு எயிறு உண்கு’ என்று மென்மையாகவும் அன்பாகவும் கேட்டபோது, அந்த இனிய
சொற்கள் தலைவியின் மனதை மயக்கின. அதனால், உயிரைவிட உயர்வாகக் கருதப்படும்
நாணத்தைக்கூட மறந்து, தன் காதலை அன்னையிடம் வெளிப்படுத்தும் நிலைக்குச் சென்று,
பின் சாமர்த்தியமாகக் கூறாமல் தப்பித்தாள் என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
உள்ளுறை உவமம்:
“காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி தீம் தொடை நரம்பின் இமிரும்” என்ற தொடர், காந்தள்
மலரில் தேன் அருந்தும் தும்பி, யாழின் நரம்பைப்போல இனிமையாக இசை எழுப்புவதைக்
குறிக்கிறது. அதுபோல, காதலனின் மார்பில் சாய்ந்து அடைந்த பேரின்பத்தை நினைத்த
தலைவியின் மனம், அவனது பெருமையையும் அன்பையும் மட்டுமே தொடர்ந்து நினைத்துக்கொண்டே
இருக்கிறது என்பதைத் தலைவி நயமாக உணர்த்துகிறாள்.
Comments
Post a Comment