16. நல்லதற்கு உரியை, வாழி என் நெஞ்சே!
16. நல்லதற்கு உரியை, வாழி என் நெஞ்சே!
பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார்
சிறைக்குடி என்னும்
ஊரைச் சார்ந்தவராக இருந்ததால் இப்பெயர் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவர்
குறுந்தொகையில் எட்டுப் பாடல்கள் (56, 57, 62, 132, 168, 222, 273, 300),
நற்றிணையில் ஒரு பாடல் (16) ஆகியவற்றை இயற்றியுள்ளார்
திணை: பாலை
துறை: பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை
நெருங்கித் தலைவன் செலவு அழுங்கியது.
துறை விளக்கம்: செல்வம்
ஈட்டுவதற்காகப் பிரிந்து செல்ல வேண்டும் என்று தலைவன் எண்ணினான். ஆனால், தலைவியைப்
பிரிய மனம் வராததால், தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு செல்லும் முடிவைக் கைவிடுகிறான்.
பாடலின் பின்னணி:
சில மாதங்களுக்கு முன்பு, ஒருநாள்
தலைவன் வேட்டையாடச் சென்றபொழுது, தலைவியைச் சந்தித்தான். அன்றுமுதல் இருவரும்
காதலிக்கத் தொடங்கினார்கள். களவொழுக்கத்தின் தொடக்கத்தில் அவர்கள் பகலில்
சந்தித்தார்கள்; பின்னர், இரவிலும் சந்திக்கத் தொடங்கினார்கள். நாள் தவறாமல்
அவளைச் சந்திப்பதை அவன் வழக்கமாகக் கொண்டிருந்தான்.
நாளடைவில் அவர்களின் காதல்
ஊர்மக்களுக்குத் தெரிய ஆரம்பித்து, அலர் எழத் தொடங்கியது. அதன் விளைவாக, தலைவியின்
பெற்றோரின் சம்மதத்தோடு முறைப்படி அவன் அவளைத் திருமணம் செய்துகொண்டான்.
திருமணத்திற்குப் பிறகு, அவன் தன் மனைவியை விட்டு ஒருநாள்கூடப் பிரிந்ததில்லை.
இப்பொழுது இல்வாழ்க்கையைச் சிறப்பாக
நடத்துவதற்குக் குடும்பத்திற்குப் பொருள் தேவைப்படுகிறது. ஆனால், பொருள்
தேடுவதற்கு வெளியூருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. பொருள் தேடச்
சென்றால் திரும்பி வருவதற்குச் சில மாதங்கள் ஆகலாம். தன் மனைவியை விட்டு ஒருநாள்கூடப்
பிரிந்திராத அவனுக்கு, இப்பிரிவை நினைத்தாலே பெரும் துயரமாக இருக்கிறது. தான்
பிரிந்து சென்றால் தலைவி மிகவும் வருந்துவாள் என்பதை நினைக்கும்போது, அவனது துயரம்
மேலும் அதிகமாகிறது.
அதனால், "பொருள் தேடப் போகலாமா,
வேண்டாமா?" என்று அவன் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்கிறான். சில நாட்களுக்கு முன்பு
தலைவியிடம், “நான் சில காலம் வெளியூருக்குச் சென்று பொருள் சம்பாதித்து வரலாம்
என்று நினைக்கிறேன்” என்றான். அவன் சொற்களைக் கேட்டவுடன் அவள் அழத்தொடங்கினாள்.
“நீ அழுவதை என்னால் தாங்க முடியாது, அழாதே. நான் வெளியூருக்குச் செல்லாமல்
இவ்வூரிலேயே பொருள் தேட முயல்கிறேன்” என்று கூறி அவளைச்
சமாதானப்படுத்தினான்.
ஆனால், தன் சொந்த ஊரில் போதிய பொருள்
ஈட்டுவது இயலாத செயல் என்பதை அவன் உணர்கிறான். ஆகவே, இப்பொழுது அவன் தன் மனைவியைப்
பிரிந்து சென்றுதான் பொருள் தேட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது.
வெளியூருக்குச் செல்லலாமா வேண்டாமா என்று அவனது மனதிற் பெரும் போராட்டம்
நடைபெறுகிறது.
ஒருநாள், அவன் தன் நிலையைப் பற்றிச்
சிந்தித்துக் கொண்டிருக்கும்பொழுது, தன் நெஞ்சோடு உரையாடுகிறான். அப்பொழுது, “என்
மனைவியின் இனிய முகத்தைக் காணாமல், அவளைப் பிரிந்து சென்று பொருள் தேடினால்,
எவ்வளவு பெரிய செல்வம் கிடைப்பதாக இருந்தாலும், அத்தகைய செல்வம் எனக்கு வேண்டாம்!
நான் வெளியூர் செல்ல விரும்பவில்லை” என்று தன் நெஞ்சிற்குக் கூறி, பொருள் தேடச்
செல்லும் பயணத்தைத் தவிர்க்கிறான்.
புணரின் புணராது பொருளே பொருள்வயிற்
பிரியின் புணராது புணர்வே ஆயிடைச்
செல்லினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு
உரியை வாழி என் நெஞ்சே பொருளே
வாடாப் பூவின் பொய்கை நாப்பண் 5
ஓடு மீன் வழியின் கெடுவ யானே
விழுநீர் வியலகம் தூணி ஆக
எழு மாண் அளக்கும் விழு நிதி பெறினும்
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண்
அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென் 10
எனைய ஆகுக வாழிய பொருளே
அருஞ்சொற்பொருள்:
1.
புணரின் – கூடினால் (சேர்ந்திருந்தால்); புணராது – சேராது; வயின் – இடம் ,
பொருட்டு
2.
பிரியின் – பிரிந்தால்; புணராது – சேராது; புணர்வே – சேர்க்கை; ஆயிடை –
இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை
3.
செல்லினும் – சென்றாலும்; செல்லாய் ஆயினும் – செல்லாவிட்டாலும்; நல்லதற்கு –
நல்லது செய்வதற்கு
4.
உரியை – உரிமை உடையவன்
5.
பொய்கை – நீர்நிலை; நாப்பண் – நடுவில்
6.
விழுநீர் – சிறந்த,பெரிய கடல்; வியலகம் – அகன்ற உலகம்; தூணி – முகத்தல்
அளவைக் கருவி (மரக்கால்)
7.
எழு – ஏழு; மாண் – மாட்சி (பெருமை); விழு – சிறந்த; நிதி – செல்வம்
8.
கனங்குழை – கனத்த காதணி; அமர்த்த – பொருந்திய , விருப்பமுற்ற; சேயரி –
சிவந்த வரிகள்; மழைக்கண் – குளிர்ச்சியான கண்
9.
அமர்ந்து – விரும்பி; செகுத்தனென் – ஈர்க்கப்பட்டேன் , வசப்பட்டேன் (மனம்
இழந்தேன்)
10.
எனைய – எத்தன்மையதானாலும் (என்னவானாலும்)
பதவுரை:
1. புணரின் புணராது பொருளே பொருள்வயின் -
நாம் தலைவியுடன் கூடி இருந்தால் பொருள் சேராது, பொருளின் பொருட்டு
2. பிரியின் புணராது புணர்வே ஆயிடை -
பிரிந்து சென்றால் தலைவியுடன் கூடி வாழும் இன்பம் கிட்டாது; இந்த இரண்டு
நிலைகளுக்கிடையே
3. செல்லினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு
- நீ பிரிந்து செல்ல நினைத்தாலும் அல்லது செல்லாமல் தடுத்தாலும் எனக்கு நல்லது
செய்வதற்கே
4. உரியை வாழி என் நெஞ்சே பொருளே - நீ
உரியவனாவாய்! என் நெஞ்சமே நீ வாழ்க! அந்தப் பொருளானது
5. வாடாப் பூவின் பொய்கை நாப்பண் - வாடாத
மலர்களையுடைய பொய்கையின் நடுவே
6. ஓடு மீன் வழியின் கெடுவ யானே - ஓடுகின்ற
மீன் சென்ற தடம் மறைந்து போவதைப் போல அழிந்துபோகக் கூடியது; நானும்,
7. விழு நீர் வியலகம் தூணி ஆக - சிறந்த
நீர் சூழ்ந்த இந்த அகன்ற உலகத்தையே அளக்கும் மரக்காலாகக் கொண்டு
8. எழு மாண் அளக்கும் விழு நிதி பெறினும் -
ஏழு முறை மாட்சிமைப்பட அளக்கக்கூடிய சிறந்த பெருஞ்செல்வத்தையே பெறுவதாக
இருந்தாலும்
9. கனங்குழைக்கு அமர்த்த சே அரி மழை கண் -
கனத்த காதணிகளை அணிந்த, செவ்வரி படர்ந்த குளிர்ச்சியான கண்களையுடைய அவளது
10. அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென் -
அன்போடு கூடிய இனிதான பார்வையால் கட்டுண்டு வசப்பட்டேன்;
11. எனைய ஆகுக வாழிய பொருளே - எனவே, அந்தப்
பொருள் என்னவானாலும் ஆகட்டும், யாரிடமாவது வாழட்டும்!
கொண்டு கூட்டு:
நெஞ்சே, வாழி! புணரின் பொருள் புணராது; பொருள்வயின் பிரியின் புணர்வு
புணராது; பொருள், ஓடுமீன் வழியிற் கெடுவ; நீ செல்லினும் செல்லாயாயினும், நல்லது
செய்தற்குரியை; மழைக்கண் இனிது நோக்கமொடு செகுத்தனென்; ஆகலின், விழுநிதி பெறினும்
வாரேன்; இவள் எனைய ஆகுக, பொருள் வாழிய என மாறிக் கூட்டுக.
உரை:
என் நெஞ்சமே! நீ
வாழ்க! நாம் தலைவியுடன் கூடி வாழ்ந்தால் பொருளை அடைய முடியாது. பொருளுக்காக நாம்
அவளைப் பிரிந்து சென்றால் தலைவியுடன் வாழும் இன்பத்தைப் பெற முடியாது. அதனால், நீ
பொருள் தேடச் சென்றாலும் அல்லது செல்லாமல் இங்கேயே தங்கினாலும், எனக்கு நல்லது
செய்வதற்கே உரியவனாகிறாய்.
வாடாத மலர்களையுடைய பொய்கையின் நடுவில்,
ஓடும் மீன் சென்ற சுவடு தெரியாமல் மறைவதுபோல, அழியக் கூடிய இயல்புடையது பொருள்.
பெரிய கடல் சூழ்ந்த இந்த அகன்ற உலகத்தையே ஒரு மரக்காலாகக் கொண்டு, ஏழு முறை
அளக்கக்கூடிய அத்துணைப் பெருஞ்செல்வத்தை நான் பெறுவதாக இருந்தாலும், அதை நான்
விரும்பமாட்டேன். கனத்த காதணி அணிந்த தலைவியின், சிவந்த வரிகளுடைய குளிர்ச்சியான
கண்கள் அன்போடு இனிதாகப் பார்க்கும் பார்வையால் நான் கட்டுண்டுவிட்டேன்.
ஆகையால், அவளைப் பிரிந்து உன்னோடு
பொருள் ஈட்ட வரமாட்டேன். என்னவானாலும் ஆகட்டும், அந்தப் பொருள் அதை
விரும்புபவர்களிடம் சென்று வாழட்டும்!
சிறப்புக் குறிப்பு:
இந்தப் பாட்டில், தலைவன் பொருள்
தேடுவதற்குச் செல்லலாமா வேண்டாமா என்ற மனக்குழப்பத்தோடு இருப்பதுபோல்,
பட்டினப்பாலையிலும் பொருள் தேடுவதற்குச் செல்ல விரும்பும் தலைவன் மனைவிய விட்டுப்
பிரிய முடியாமல் மனம் கலங்குகிறான்.
இப்பாட்டில், உலகத்தையே மரக்காலாகக்
கொண்டு ஏழு முறை அளக்கக்கூடிய அளவுக்குச் செல்வம் கிடைப்பதாக இருந்தாலும் மனைவியை
விட்டுப் பிரிய மாட்டேன் என்று தலைவன் கூறுவதைப்போல், பட்டினப்பாலையில் தலைவன்,
காவிரிப்பூம்பட்டினமே பரிசாகக் கிடைப்பதாக இருந்தாலும் மனைவியை விட்டுப் பிரிய
மாட்டேன் என்று கூறுவது இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
முட்டாச் சிறப்பின், பட்டினம் பெறினும்
வார் இருங் கூந்தல் வயங்குஇழை ஒழிய,
வாரேன்; வாழிய, நெஞ்சே! (பட்டினப்பாலை,
218-220)
பொருள்: நெஞ்சே! குறைவில்லாத சிறப்புடைய
காவிரிப்பூம்பட்டினத்தையே பரிசாகப் பெற்றாலும், நீண்ட கரிய கூந்தலையும்
ஒளிபொருந்திய அணிகலன்களையும் உடைய என் மனைவியைப் பிரிந்து நான் வரமாட்டேன்!
Comments
Post a Comment