15. நாணும் விட்டேம்!

 

15. நாணும் விட்டேம்!

பாடியவர்: அறிவுடைநம்பி

இவரும் பாண்டியன் அறிவுடை நம்பி என்பவரும் ஒருவரே எனக் கருதப்படுகின்றனர். இவர் புறநானூற்றில் ஒரு பாடல் (188), குறுந்தொகையில் ஒரு பாடல் (230), நற்றிணையில் ஒரு பாடல் (15), அகநானூற்றில் ஒரு பாடல் (28) ஆகியவற்றை இயற்றியுள்ளார்.

 

திணை: நெய்தல்

 

துறை: வரைவு நீட்டித்தவழி தோழி தலைமகற்குச்சொல்லி வரைவு கடாயது

 

துறை விளக்கம்: தலைவன் திருமணம் செய்துகொள்ளாமல் காலம் தாழ்த்துகிறான். அதனால் தலைவி வருந்துவதைக் கண்ட தோழி, தலைவனிடம் சென்று இனி காலம் தாழ்த்தாமல் விரைவாகத் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திகிறாள்.

 

பாடலின் பின்னணி:

ஒருநாள் தலைவியும் அவள் தோழியும் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். மாலை நேரம் முடிந்து, கதிரவன் மறையும் நேரம் வந்ததுகூடத் தெரியாமல் மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

அப்பொழுது அங்கு ஓர் இளைஞன் (தலைவன்) தேரில் வந்தான். அவன் தேரைவிட்டு இறங்கி வந்து, “நான் இந்தக் கடற்கரைப் பகுதிக்குத் தலைவன். உங்களை இதற்குமுன் இங்குப் பார்த்ததில்லையே! நீங்கள் யார்?” என்று அன்போடு கேட்டான். அவனை முன்பின் அறியாத தலைவியும் தோழியும் அவனோடு பேசுவதற்குத் தயங்கினார்கள். தலைவியின் குவளை மலர் போன்ற கண்கள், நீண்ட கூந்தல், மாமை நிறம், சிற்றிடை, செங்காந்தள் விரல்கள் ஆகிய அனைத்தையும் கண்டு வியந்த அந்த இளைஞன், அவளோடு பேசப் பெரிதும் விரும்பினான். அவன் தன்னைப் பற்றியும், தன் நெய்தல் நில வளத்தைப் பற்றியும் பலவற்றைக் கூறினான். ஆனால், அவன் கூறியதைக் கேட்டும் கேட்காததுபோலத் தலைவியும் தோழியும் அங்கிருந்து தங்கள் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.

அவர்களைத் தொடர்ந்து சென்ற தலைவன், ”நீங்கள் யார்? எங்கிருந்து வந்தீர்கள்? இதோ, கதிரவன் மறைந்து இருள் சூழத் தொடங்கிவிட்டது. இரவு வேளையில் இந்த வழியே சென்றால், கொடிய விலங்குகளால் உங்களுக்கு இன்னல்கள் வரக்கூடும். எனவே, என்னோடு என் தேரில் வாருங்கள். நீங்கள் எங்குச் செல்ல வேண்டுமோ, அங்கு உங்களை நான் அழைத்துச் செல்கிறேன்” என்று கனிவோடு கூறினான். கொடிய விலங்குகளைப் பற்றி அவன் கூறியதைக் கேட்டு அஞ்சிய தலைவியும் தோழியும், அவனோடு செல்வதே சிறந்தது என்று கருதி, அவன் தேரில் ஏறித் தங்கள் வீட்டை அடைந்தார்கள்.

மறுநாள், அந்த இளைஞனை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று தலைவி விரும்பினாள். தோழியுடன் முதல்நாள் சென்ற அதே கடற்கரைப் பகுதிக்குச் சென்றாள். அந்த இளைஞனும் தலைவியைக் காணலாம் என்ற எதிர்பார்ப்போடு அங்கு வந்திருந்தான். தலைவியும் தலைவனும் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தச் சந்திப்பிற்குப் பிறகு, நாளடைவில் அவர்கள் இருவரும் கருத்தொருமித்த காதலர்களானார்கள். சில நாட்கள் அவர்கள் இருவரும் கூடி மகிழ்ந்தனர். அந்த இளைஞன் தலைவியைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதிமொழி அளித்தான்.

 

ஆனால், சில நாட்களுக்குப் பிறகு தலைவன் அவளைச் சந்திப்பதற்கு வரவில்லை (திருமணப் பேச்சை எடுக்காமல் காலம் தாழ்த்தினான்). இதற்கிடையில், அவர்களுடைய காதல் ஊர்மக்கள் பலருக்கும் தெரியத் தொடங்கியது. அவர்கள் தலைவியைப் பற்றிப் புறம்பேசவும் (அலர் தூற்றவும்) தொடங்கினார்கள். இதனால் தலைவி மிகவும் வருத்தமடைந்து, தன் அழகை இழந்து, உடல் மெலிந்து காணப்பட்டாள். தலைவியின் இந்த அவல நிலையைக் கண்டு மனம் கலங்கிய தோழி, தலைவனைச் சந்தித்து, “தலைவி உன்னை ஆழமாகக் காதலிக்கிறாள். உன் வாக்குறுதிகளை நம்பி அவளுடைய காதல் அரும்பியது. நீயோ அவள் பெண்மை நலத்தை நுகர்ந்துவிட்டு இப்போது பிரிந்திருக்கிறாய். ஒரு பெண்ணுக்கு இயற்கையாக இருக்கும் 'நாணம்' என்ற பண்பையும் விட்டுவிட்டு உன்னோடு பழகியவள் அவள். இப்பொழுது அவளைப் பற்றி ஊர்மக்கள் அலர் பேசுகிறார்கள்” என்று சுட்டிக்காட்டி, தலைவியை விரைவில் திருமணம் செய்துகொள்ளுமாறு (வரைவு கடாயது) நெய்தல் நிலத் தலைவனை வற்புறுத்துகிறாள்.

முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்
நுணங்கு துகில் நுடக்கம் போல கணம் கொள
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப
பூவின் அன்ன நலம் புதிது உண்டு
நீ புணர்ந்தனையேம் அன்மையின் யாமே      5
நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி
மாசு இல் கற்பின் மடவோள் குழவி
பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு
சேணும் எம்மொடு வந்த
நாணும் விட்டேம் அலர்க இவ் ஊரே          10

 

அருஞ்சொற்பொருள்:

1. திரை - அலை; கொழீய – அலையினால் திரட்டப்பட்ட, வாரிக் குவிக்கப்பட்ட; மூரி – பெரிய, பெருமை ; எக்கர் – மணல்மேடு

2. நுணங்கு – நுண்ணிய;  துகில் – ஆடை; நுடக்கம் – அசைவு; கணம் கொள – மிகுதிப்பட

3. ஊதை – வாடைக் காற்று; உரவு – வலிமை;  சேர்ப்பன் – நெய்தல் நிலத்தலைவன்

4. நலம் – பெண்மை நலம்

5. புணர்ந்தனையேம் (புணர்ந்த+அனையேம்)  - நீ எங்களோடு கூடியிருந்தபொழுது; அன்மை - இல்லாமை; யாமே – நாங்கள் (ஏ – அசைநிலை)

6. நேர்பு – செம்மை, உடன்படுதல்; தாங்கத் தாங்கி – வருத்தத்தோடு அதனை ஏற்று;

7. மடவோள் – இளம்பெண்; குழவி – குழந்தை

8. கைவிட்டாங்கு – கைவிட்டதைப்போல்

9. சேணும் – நெடுங்காலத்தும்

10. நாணும் – வெட்கத்தையும்;  விட்டேம் - கைவிட்டோம்; அலர்க – அலர் எழட்டும்

 

பதவுரை:

1.முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் - முழங்குகின்ற கடலலைகள் கொழித்துக் கொணர்ந்த பெரிய மணல்மேட்டின்மேல்

2. நுணங்கு துகில் நுடக்கம்போல கணம் கொள - நுண்ணிய நூலாலான ஆடை சுருண்டு ஓடுவதுபோலத் திரட்சி உண்டாக

3. ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப - வாடைக் காற்று மணலைத் தூற்றுகின்ற வலிமையான கடற்கரையின் தலைவனே!

4. பூவின் அன்ன நலம் புதிது உண்டு - பூவைப் போன்ற எம் தலைவியின் பெண்மைநலத்தைப் புதிதாக நுகர்ந்து

5. நீ புணர்ந்த அனையேம் அன்மையின் யாமே - நீ எம்முடன் சேர்ந்திருந்தபொழுது நாங்கள் இருந்ததைப்போல் இப்பொழுது நாங்கள் இல்லாததால்,

6. நேர்பு உடை நெஞ்சம் தாங்கத் தாங்கி – உம்மோடு உடன்பட்ட எமது நெஞ்சம் தாங்குமளவுக்குத் தாங்கி,

7. மாசு இல் கற்பின் மடவோள் குழவி - குற்றமற்ற கற்பினையுடைய இளையவள் ஒருத்தி தன் குழந்தையைப்

8. பேஎய் வாங்க கைவிட்டு ஆங்கு - பேய் கைப்பற்றப் பறிகொடுத்ததைப்போல

9. சேணும் எம்மொடு வந்த - நெடுங்காலம் எம்மோடிருந்த

10. நாணும் விட்டேம் அலர்க இ ஊரே - நாணத்தைக் கைவிட்டோம். இனி இவ்வூரார் எத்துணை அலர் கூறுவாராயினும் கூறட்டும்.

 

கொண்டு கூட்டு: சேர்ப்ப, புதுநலம் உண்டு நீ புணர்ந்தனையேம் அன்மையின், யாம், நெஞ்சம் தாங்கத் தாங்கி, மடவோள் குழவி கைவிட்டாங்கு நாணும் விட்டேம், இவ்வூர் அலர்க எனக் கூட்டுக.

 

உரை:

முழங்குகின்ற கடலலைகள் கொழித்துக் கொணர்ந்த பெரிய மணல்மேட்டின்மேல் நுண்ணிய நூலாலான ஆடை சுருண்டு ஓடுவதுபோல வாடைக் காற்று மணலைத் தூற்றுகின்ற வலிமையான கடற்கரையின் தலைவனே! பூவைப் போன்ற எம் தலைவியின் பெண்மைநலத்தைப் புதிதாக நுகர்ந்து நீ எம்முடன் சேர்ந்திருந்தபொழுது நாங்கள் இருந்ததைப்போல் இப்போது நாங்கள் இல்லை. குற்றமற்ற கற்பினையுடைய இளம்பெண் ஒருத்தி தன் குழந்தையைப் பேய் கைப்பற்றப் பறிகொடுத்ததைப்போல நாங்கள் நாணத்தைக் கைவிட்டுவிட்டோம்.  இனி,  இவ்வூரார் எத்துணை அலர் கூறுவாராயினும் கூறட்டும்.

 

சிறப்புக் குறிப்பு:

கடல் அலைகள் கரையில் கொண்டு வந்து குவித்த மணல் மேட்டிலிருந்து, வாடைக் காற்று மணல் துகள்களை அள்ளிக் காற்றில் தூற்றுவதைப்போலத்  தலைவனாகிய உன்னால் கைவிடப்பட்டுத் தனித்து நிற்கும் தலைவியைப் பற்றி இந்த ஊர் மக்கள் பலவாறாகப் பழிச்சொற்களைக் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.  

 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே

28. கள்வர்போலக் கொடியன்!