13. எழில் நலம் தொலைய அழாதே!
13. எழில் நலம் தொலைய அழாதே!
பாடியவர்: கபிலர்
இவர் பாண்டிய
நாட்டைச் சார்ந்த திருவாதவூரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர். 'புலன் அழுக்கற்ற
அந்தணாளன்' என்று மாறோக்கத்து நப்பசலையார் இவரைப் புகழ்ந்துள்ளார் (புறநானூறு –
126). கபிலர் இயற்றியதாக எட்டுத்தொகை நூல்களில் 234 செய்யுட்கள் காணப்படுகின்றன.
குறிப்பாக, புறநானூற்றில் 28 செய்யுட்களையும், கலித்தொகையில் இடம்பெறும்
குறிஞ்சிக்கலி என்னும் 29 செய்யுட்களையும் இயற்றியுள்ளார். ஆரிய அரசன்
பிரகத்தனுக்குத் தமிழின் இனிமையை எடுத்துரைக்கும் வகையில் இவர் இயற்றிய
குறிஞ்சிப்பாட்டு, பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ளது. குறிஞ்சித் திணைப் பாடல்களை
இயற்றுவதில் இவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சங்கப் பாடல்களில் மிகுதியான பாடல்களைப் பாடிய புலவர்
இவரேயாவார், மொத்தமுள்ள 2,381 சங்கப் பாடல்களில், கபிலர் ஒருவரே 235 பாடல்களைப் பாடியுள்ளார். இது மொத்த சங்கப் பாடல்களில் 10 விழுக்காட்டிற்கும் (10%) மேலாகும்.
இவரால்
பாடப்பெற்றோர்: அகுதை, இருங்கோவேள், ஓரி, செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான்
மாந்தரஞ்ச் சேரலிரும்பொறை, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, விச்சிக்கோன்,
வையாவிக் கோப்பெரும் பேகன், வேள் பாரி.
சேரமான் செல்வக்
கடுங்கோ வாழியாதனைப் பற்றிய இவரது பாடல்கள் பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்தாக
அமைந்துள்ளன. அப்பாடல்களால் பெருமகிழ்ச்சி அடைந்த செல்வக் கடுங்கோ வாழியாதன்,
நன்றா என்னும் குன்றின்மேல் ஏறி நின்று கண்ணிற்கெட்டிய இடமெல்லாம் இவருக்குப்
பரிசாக வழங்கியதுடன், நூறாயிரம் பொற்காசுகளையும் அளித்தான். ஆனால், கபிலர் பெற்ற
பரிசுகள் அனைத்தையும் பிறருக்கு வழங்கிப் பரிசிலராகவும் துறவியாகவும் வாழ்ந்தார்.
வேள் பாரியின்
நெருங்கிய நண்பரான இவர், பாரி இறந்தபின் அவரது மகளிர்க்குத் திருமணம் செய்து
வைக்கும் பொறுப்பை ஏற்றார். இதற்காகப் பல முயற்சிகள் மேற்கொண்ட அவர், இறுதியில்
பாரியின் மகளிரை ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து
உயிர்நீத்ததாகக் கருதப்படுகிறது.
கபிலர் என்ற பெயருடைய
வேறு சில புலவர்களும் இருந்ததாகத் தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
திணை: குறிஞ்சி
துறை: இயற்கைப் புணர்ச்சியின் பிற்றை ஞான்று
தலைவியின் வேறுபாடு கண்ட தோழி தலைவி மறைத்தற்குச் சொல்லியது.
துறை விளக்கம்: இயற்கைப்
புணர்ச்சிக்குப் பிறகு தலைவியிடம் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்ட தோழி, அதற்கான காரணம் என்ன
என்று கேட்கிறாள். உண்மையான காரணத்தைத் தலைவி மறைக்கிறாள். அப்போது, அந்த மாற்றத்திற்கான
காரணம் தனக்குத் தெரியும் என்பதைத் தோழி மறைமுகமாக உணர்த்துகிறாள்.
பாடலின் பின்னணி: தினைக்கதிர்களில் தினைகள்
வரத் தொடங்கிவிட்டன. தினையைக் கிளிகள் தின்னாமல் காவல் புரிவதற்காக நேற்று
தலைவியின் அன்னை தலைவியையும் தோழியையும் தினைப்புனத்திற்கு அனுப்பினாள்.
தினைப்புனத்திற்கு வந்த தலைவி, ஓர் இளைஞனைச் சந்தித்துக் காதல்கொண்டாள்.
தலைவனும்
தலைவியும் முதன்முதலில் சந்தித்துக் காதல்கொண்ட மறுநாள், தினைப்புனத்தில் கிளிகள்
வந்து தினையை உண்ணுகின்றன. வழக்கமாகக் குளிர் தட்டை போன்ற கருவிகளைப் பயன்படுத்தி
ஆர்வத்தோடு கிளிகளை விரட்டும் தலைவி கிளிகளை விரட்டாமல் ஆழ்ந்த சிந்தனையில்
இருக்கிறாள். தலைவியின் உடல் மற்றும் மன மாற்றங்களை அவளது தோழி
கவனித்துவிடுகிறாள். "உனக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி
வேறுபட்டிருக்கிறாய்?" என்று தோழி கேட்கிறாள்.
தன்
தோற்றத்தில் உள்ள வேறுபாட்டை அயலவர்கள் (பெற்றோர் அல்லது ஊரார்) கவனித்துவிடக்
கூடாதே என்ற அச்சத்தில், தலைவி உண்மையை மறைக்க முயல்கிறாள். அவ்வாறு மறைக்க
முயலும் பொழுது, (உண்மை வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தினால்) தலைவி அழத்
தொடங்குகிறாள்.
அப்போது
தோழி தலைவியை நோக்கி, "தோழீ! நீ எவ்வளவுதான் மறைத்தாலும் உனது காதல் எனக்குத்
தெரிந்துவிட்டது. அழாதே! அயலார் இருக்கும் இவ்விடத்தில், உன் அழகிய நலமெல்லாம்
கெடும்படியாக நீ அழாமலிருப்பாயாக!"
என்று கூறுவதாக இத்துறை அமைந்துள்ளது.
எழாஅ ஆகலின் எழில் நலம் தொலைய
அழாஅ தீமோ நொதுமலர் தலையே
ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த
பகழி அன்ன சேயரி மழைக் கண்
நல்ல பெருந் தோளோயே கொல்லன் 5
எறி பொன் பிதிரின் சிறுபல் காய
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி
மயில் அறிபு அறியா மன்னோ
பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே
அருஞ்சொற்பொருள்:
1. எழாஅ ஆகலின் - எழாததால்;
எழில் - அழகு (மென்மை); தொலைய:
அழியும்படி
2. அழாதீமோ- அழாமல் இருப்பாயாக; நொதுமலர் – அயலார்; தலை –
இடம்
3. ஏனல் – தினைப்புனம்; மா – விலங்கு(பன்றி); வீழ்த்து –
வீழ்த்தி; பறித்த – எடுத்த, பிடுங்கிய
4. பகழி - அம்பு; அன்ன –போல ; சேயரி – சிவந்த வரிகள்;
மழைக்கண் – குளிர்ச்சியான கண்கள்
6. எறிதல் - அடித்தல்; பொன் - இரும்பு; பிதிர் – பொறி; - காய்களையுடைய
7. வீ - மலர்; உகும் - உருகும்; கட்சி
– காடு
8. அறிபு - அறிவதை;
மன்னோ – அசைநிலைச் சொல்
9. பயிலல் – நெருங்கிய; குரல் - கதிர்; பைம் புறக் கிளி –
பச்சை நிறமான முதுகை உடைய கிளி
பதவுரை:
1.எழாஅ ஆகலின் எழில் நலம் தொலைய - நீ எழாததால் அழகிய
நலமெல்லாம் கெடும்படியாக
2. அழாஅதீமோ நொதுமலர் தலையே - அழாமலிருப்பாயாக! இது அயலார் இருக்குமிடம்;
3. ஏனல் காவலர் மா வீழ்த்து பறித்த - தினைப் புனக் காவலர்
காட்டுப்பன்றியைக் கொன்று வீழ்த்திவிட்டுப் பறித்த
4. பகழி அன்ன சே அரி மழை கண் - அம்பினைப் போன்ற சிவந்த
வரிகளையுடைய குளிர்ச்சியான கண்களையும்
5. நல்ல பெரும் தோளோயே கொல்லன் - நல்ல
பெரிய தோள்கள்களையும் உடையவளே! கொல்லன்
6. எறி பொன் பிதிரின் சிறுபல காய - உலைக்களத்தில் இரும்பைச் சுத்தியால்
அடிக்கும்போது சிதறிப் பரவும் தீப்பொறிபோல, சிறிய பல காய்களையுடைய
7. வேங்கை வீ உகும் ஓங்கு மலை கட்சி - வேங்கைமரத்தின் பூக்கள்
உதிர்கின்ற உயர்ந்த மலையிலுள்ள காட்டில் வாழும்
8. மயில் அறிபு அறியாமன்னோ - மயில் பார்த்துக்கொண்டிருப்பதை
அறியாத
9. பயில் குரல் கவரும் பைம் புற கிளியே - நெருங்கிய
தினைக்கதிர்களைக் கவரும் பசிய முதுகினைக் கொண்ட கிளிகளை ஓட்ட
கொண்டு கூட்டு:
தோளோய், எழாஅய் ஆகலின்,
பைம்புறக்கிளி, மயில் அறிபு அறியாமல்,
பயில்குரல் கவரும் ஆகலினனாலும், இது நொதுமலர் தலையாதலாலும், எழில்நலம் தொலைய
அழாதீமோ என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க.
உரை:
தினைப்புனக் காவலர் புனத்தில் மேய்ந்த காட்டுப்பன்றியை
அம்பால் கொன்று வீழ்த்தியபின், அதன்
உடம்பிலிருந்து பறித்த அம்பினைப்போலச் சிவந்த வரிகளையுடைய குளிர்ச்சியான
கண்களையும் பெரிய தோள்கள்களையும் உடையவளே! கொல்லனின் உலைக்களத்தில், அவன் இரும்பைச் சுத்தியால் அடிக்கும்போது
பழுக்கக் காய்ந்த இரும்பிலிருந்து சிதறிப்
பரவும் தீப்பொறிகளைப்போலச் சிறிய பல
காய்களையுடைய வேங்கை மரத்தின் பூக்கள்
உதிரும் உயர்ந்த மலையிலுள்ள காட்டில் வாழும் மயில் அறியாது என்று கருதி, நெருங்கி வளர்ந்த தினைக்கதிர்களைக் கவரும் பசிய
முதுகினைக் கொண்ட கிளிகளை ஓட்ட நீ எழாது இருக்கின்றாய். கதிர்கள் அழிந்துபோகின்றன.
அயலார் இருக்கும் இவ்விடத்தில், உன் அழகிய நலமெல்லாம் கெடும்படியாக நீ
அழாமலிருப்பாயாக!
சிறப்புக் குறிப்பு:
தலைவியின்
கண்களை வெறும் "சிவந்த வரிகளையுடைய குளிர்ந்த கண்கள்" என்று சாதாரணமாகக்
கூறாமல், "காவலர்கள் பன்றியைக் கொன்று வீழ்த்துவதற்காகப் பயன்படுத்தும்
கூர்மையான அம்பு போன்ற கண்கள்" என்றது,
காவலரின் அம்பு எப்படி ஒரு
விலங்கைக் குறிவைத்துத் தாக்குமோ, அதேபோலத் தலைவி தன் கண்கள் என்கிற அம்பினால்
தலைவனைத் தாக்கி, அந்தப் பார்வையின் மூலம் அவனுடைய உள்ளத்தைக் கவர்ந்து அவனோடு
காதல் உறவு கொண்டாள் என்பதைக் குறிக்கிறது.
தாம்
தினையைக் கவர்வது மயில் அறியாது என்று கிளிகள் நினைக்கின்றன என்றது, தான்
தலைவியோடு இருந்தபொழுதே தனக்குத் தெரியாது என்று நினைத்துத் தலைவி ஓர் இளைஞனைச்
சந்தித்துக் காதல்கொண்டாள் என்பதைத் தோழி
தலைவிக்குக் குறிப்பால் உணர்த்துவதைக் குறிக்கிறது.
Comments
Post a Comment