11. மெய் சாயினை!
11. மெய் சாயினை!
பாடியவர்: உலோச்சனார்
இவர் சோழ
நாட்டிலிருந்த கண்பவாயில் என்னும் ஊரைச் சார்ந்தவராகக் கருதப்படுகிறார். நெய்தல்
திணைப் பாடல்களை இயற்றுவதில் வல்லவரான இவர், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
உறையூரிலிருந்து ஆட்சிபுரிந்தபோது அவனைப் பாடிப் பரிசில் பெற்றவர் (புறநானூறு –
377). இவர் புறநானூற்றில் மூன்று பாடல்கள் (258, 274, 377), நற்றிணையில் இருபது
பாடல்கள் (11, 38, 63, 64, 74, 131, 149, 191, 203, 223, 249, 254, 278, 287, 311,
331, 354, 363, 372, 398), அகநானூற்றில் எட்டுப் பாடல்கள் (20, 100, 190, 200,
210, 300, 330, 400), குறுந்தொகையில் நான்கு பாடல்கள் (175, 177, 205, 248)
ஆகியவற்றை இயற்றியுள்ளார்.
திணை: நெய்தல்
துறை: காப்பு
மிகுதிக்கண் இடையீடுபட்டு ஆற்றாளாய தலைமகட்குத் தலைமகன்
சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.
துறை விளக்கம்: பெற்றோரின்
கடுமையான காவலால் உன்னைச் சந்திக்க முடியாமல், பிரிவைத் தாங்க முடியாமல் வருந்தும்
தலைவியிடம், தலைவன் வீட்டின் வேலிக்கு வெளியே மறைந்து நின்று கேட்கும் வேளையில், தோழி
அவனுக்குக் கேட்கும்படி கூறியது.
பாடலின் பின்னணி:.
தலைவனும் தலைவியும் ஏதேச்சையாகச் சந்தித்தார்கள். முதற் சந்திப்பிலேயே
அவர்கள் காதல் வயப்பட்டனர். அதன் பிறகு சிலமுறை பகலில் சந்தித்தார்கள். ஆனால், தலைவியின்
செயல்களிலிருந்து அவள் எவரையோ காதலிக்கிறாள் என்று சந்தேகப்பட்டு, அவள் பெற்றோர் அவளைக்
கடுமையான காவலில் (இல்லக்காவலில்) வைத்தார்கள். அதனால், அவளால் வீட்டைவிட்டு வெளியே
செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தலைவி
பகலில் வெளியே போக முடியாததால், தலைவன் இரவில் தலைவியின் வீட்டுக்கு அருகே வந்து,
மறைவான இடத்தில் இருந்து குறியீடு (ஒலி) எழுப்பியவுடன், தலைவி வீட்டுக்கு வெளியே
வந்து அவனைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டாள்.
சில
நாட்களில், தலைவன் இரவில் வந்து தலைவிக்காகக் காத்திருந்தாலும், தலைவியின் தாய்
உறங்காமல் இருந்ததால், தலைவியால் வீட்டைவிட்டு வெளியே சென்று தலைவனைச் சந்திக்க
முடியாமல் போனது. இவ்வாறு சந்திப்புத் தடைப்பட்டு, தலைவி ஆற்றாமை (வருத்தம்)
மிகுந்திருந்த நிலையில், இன்று தாய் உறங்கிவிட்டாள். தலைவி வீட்டுக்கு வெளியே
தலைவனுக்காகக் காத்திருக்கிறாள்.
தலைவன்
கடற்கரைச் சாலை வழியாகத் தேரில் வரும் வழியில் பல நண்டுகள் இருக்கின்றன. தேர்ச்
சக்கரத்தில் சிக்கி அந்த நண்டுகள் அழியாதவாறு தேரைக் கவனமாக ஓட்டுமாறு
தேரோட்டியிடம் தலைவன் கூறியதற்கேற்ப, தேரோட்டி கவனமாகத் தேரை ஓட்டி வருகிறான்.
அதனால், எதிர்பார்த்த நேரத்திற்கு அவனால் வர முடியவில்லை. தலைவன் வழக்கமாகச்
சந்திக்கும் இடத்திற்குக் காலதாமதமாக வந்து சேர்ந்தான்.
அவன்
சிறைப்புறமாக (மறைவாக) இருப்பதை அறிந்த தோழி, அவனுக்கும் தலைவிக்கும் கேட்கும்
வகையில் தலைவியிடம், “சில நாட்களாகத் தலைவனைச் சந்திக்க முடியாததால் நீ உடல்
மெலிந்திருக்கிறாய். தலைவன் வரும் வழியில் இருக்கும் நண்டுகள் தேர்ச்சக்கரத்தில்
சிக்கி அழியாதவாறு கவனமாக வருவதால் காலதாமதம் ஆகலாம். தலைவன் உயிர்களிடத்தில்
மிகவும் கருணை உள்ளம் கொண்டவன். நீ இவ்வாறு உடல் மெலிந்து காணப்படுவதைக் கண்டால்
அவன் மிகவும் வருந்துவான். அத்தகைய கருணையாளன் ஒருபொழுதும் உனக்குத் துன்பம்
விளைவிக்க மாட்டான். எனவே, தலைவன் உன்னை விரைவில் திருமணம் செய்துகொண்டால், இந்தத்
தொல்லைகள் இல்லாமல் நீங்கள் மகிழ்ச்சியாக வாழலாம்” என்று கூறுகிறாள். இதன் மூலம்
தோழி, தலைவியை விரைவில் திருமணம் செய்துகொள்ளுமாறு தலைவனை மறைமுகமாகத்
தூண்டுகிறாள் (வரைவு கடாதல்).
பெய்யாது
வைகிய கோதை போல
சாயினை அவர் செய் குறி பிழைப்ப
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல்
ஒழிக மாள நின் நெஞ்சத்தானே 5
புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர
நிலவு விரிந்தன்றால் கானலானே
அருஞ்சொற்பொருள்:
1. பெய்யாது – (தலையில்) சூடாமல்.;
வைகிய – தங்கிய; கோதை – பூமாலை
2. மெய் – உடல்; சாயினை – மெலிவடைந்தாய், வாடினாய்; செய் குறி
– செய்துகொண்ட குறியீடு (சந்திக்கக் குறித்த காலம் அல்லது இடம்); பிழைப்ப –
தவறியதால்
3. உள்ளி – நினைத்து;
நொதுமலர் – அயலார்; நேர்புஉரை – பழிச்சொல்
4. புலவி – ஊடல், கோபம்;
உட்கொளல் – மனதில் கொள்ளுதல்
5. ஒழிக – ஒழிவதாக,
நீங்குவதாக; மாள – முன்னில அசைச்சொல்
6. புணரி – கடல் அலை;
பொருத – மோதிய; அடைகரை – கடலை அடுத்த கடற்கரை
7. ஆழி – தேர்ச்சக்கரம்;
மருங்கின் – அருகில், பக்கத்தில்; அலவன் – நண்டு; ஓம்பி – (நண்டுகள்
நசுங்கிவிடாமல்) பாதுகாத்து
8. வலவன் – பாகன்,
தேரோட்டி; வள்பு – கடிவாளம் (தேர்க் குதிரையின் கயிறு)
ஆய்ந்து – ஆராய்ந்து,
கவனித்துச் செலுத்தி
9. கானல் – கடற்கரைச்
சோலை
பதவுரை:
1.பெய்யாது வைகிய கோதை போல - தலையில்
சூடாமல் கீழே கிடக்கும் மாலையைப் போல
2. மெய் சாயினை அவர் செய் குறி பிழைப்ப
- உன்னுடைய
உடல் மெலிந்துவிட்டாய்! குறித்த காலத்தில் அவர் உன்னைச் சந்திக்கக் வராததால்
3. உள்ளி நொதுமலர் நேர்பு உரை
தெள்ளிதின் - அயலார் கூறும் அலர் உரைகளை நினைத்து, நிச்சயமாக
4. வாரார் என்னும் புலவி உட்கொளல் -
அவர் வரமாட்டார் என்று நினைத்து ஊடல் கொள்வதை
5. ஒழிக மாள நின் நெஞ்சத்தானே - உன்னுடைய
நெஞ்சத்திலிருந்து முற்றிலும் கைவிடுவாயாக
6. புணரி பொருத பூ மணல் அடைகரை- அலைகள் வந்து மோதுகின்ற,
மலர்கள் உதிர்ந்து கிடக்கின்ற மணல் நிறைந்த கடற்கரையில்
7. ஆழி மருங்கின் அலவன் ஓம்பி - தேரின் சக்கரங்களில் பட்டு வழியில் இருக்கும் நண்டுகள்
நசுங்கி இறந்துவிடாமல் அவற்றைக் காப்பதற்காக
8. வலவன் வள்பு ஆய்ந்து ஊர - தேரோட்டி குதிரையின்
கடிவாளக் கயிற்றைச் சுருக்கி, தேரை மெதுவாகவும் கவனமாகவும் செலுத்தி வருகிறான்
9. நிலவு விரிந்தன்றால் கானலானே - இக்
கடற்கரைச் சோலையில் நிலவொளி பரந்துள்ளது
கொண்டு கூட்டு: அவர்குறி பிழைப்ப, கோதைபோல, மெய் சாயினை; நிலவொளி
விரிந்தன்று; ஆதலால், ஏர்புரை உள்ளி வாரார் என்னும் புலவி உட்கொளல் ஒழிக என மாறிக்
கூட்டுக.
உரை:
தோழீ! தலைவன் தான்
வருவதாகச் சொல்லிச் சென்ற காலம் தவறிவிட்டதே என்று நினைத்து நீ மிகவும்
வருந்துகிறாய். தலையில் சூடாமல் கிடக்கும் பூமாலைபோல் உனது உடல் மெலிந்துவிட்டது.
'ஊரார் கூறும் பழிச்சொற்களைக் கேட்டு, இனி அவர் வரமாட்டார்' என்று தவறாக எண்ணி,
அவர் மீது கோபம் கொள்வதை உனது நெஞ்சிலிருந்து முற்றிலும் நீக்கிவிடு. அவர் உன்னைத்
தேடித் தேரில் வந்துகொண்டுதான் இருக்கிறார். கடல் அலைகள் வந்து மோதும் இந்தக்
கடற்கரை மணலில் ஏராளமான நண்டுகள் ஊர்ந்து திரிகின்றன. வேகமாகத் தேரை ஓட்டி
வந்தால், சக்கரம் ஏறி அந்த நண்டுகள் இறந்துவிடுமே என்று கருதி, தலைவன் தன்
தேரோட்டியிடம் குதிரையின் கடிவாளத்தை மெதுவாக, கவனித்துச் செலுத்தும்படி
சொல்லியிருக்கிறார். விலங்குகளுக்குக் கூடத் துன்பம் தரக்கூடாது என்ற கருணை உள்ளம்
கொண்ட அவரா உன்னைத் தவிக்க விடுவார்? நண்டுகளைக் காப்பதற்காகத் தேரை மெதுவாக ஓட்டி
வருவதால்தான் சிறிது தாமதமாகிவிட்டது. இதோ பார்!, இந்தக் கடற்கரைச் சோலையெங்கும்
நிலவொளி பரவத் தொடங்கிவிட்டது. அவர் விரைவில் வந்துவிடுவார்.
சிறப்புக் குறிப்பு:
“ஒரு சிறிய
உயிருக்கும் தீங்கு விளைவிக்காத பேரருள் கொண்ட தலைவன், உன்னுடைய மெலிவையும், உன்னை
அலர் தூற்றும் ஊராரின் பழிச்சொற்களையும் அறிந்து வாளா இருக்க மாட்டான். உனக்குத்
துன்பம் தருவது அவனுடைய இயல்பு அன்று. அவன் உன்னைத் தேடி விரைந்து வந்து மணம்
முடிப்பான்; எனவே, நீ அவன் மேல் வீணாக ஊடல் கொள்ளாதே.”, என்று தோழி தலைவியைத்
தேற்றுகிறாள்.
்ஃ
பொருள்: சிறைப்புறமாக
(மறைவாக) நிற்கும் தலைவனுக்கும் இஃது ஒரு செய்தியாக அமைகிறது: "நீ
விரைந்து இவளை மணம் முடிக்காவிடில் இவள் உயிர் வாழ மாட்டாள்; நண்டுக்கு இரங்கும்
நீ, இவள் துயரையும் நீக்க வேண்டும்" என்று அவனைத் தூண்டும் நயமும் இதில்
அடங்கியுள்ளது.
Comments
Post a Comment