10. கூந்தல் நரையொடு முடிப்பினும் நீத்தல் ஓம்புமதி!
10. கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி!
பாடியவர்: பெயர் கிடைக்கவில்லை[1]
திணை: பாலை
துறை: உடன்போக்கும்
தோழி கையடுத்தது
துறை விளக்கம்: தலைவனோடு தலைவி உடன்போகும்போது, தோழி “தலைவியை என்றும் பாதுகாப்பாயாக!” என்று தலைவனிடம் கூறுகிறாள்.
பாடலின் பின்னணி:
”தலைவா! இவள் உன் சொற்களை மெய்யென்று
நம்பித்தான் உன்னோடு உடன்போக்குக்குத் துணிந்தாள்.
கொங்கரை வென்று புகழ்பெற்ற சோழ மன்னனின் படைத்தலைவன் பழையனின் வேல் ஒருபோதும்
இலக்கைத் தவறாததுபோல், நீ கூறிய நல்ல சொற்களும் பொய்யாதவையாக இருக்க வேண்டும்.
நிமிர்ந்து நின்ற
இவளது இளமையான மார்பகங்கள் பிற்காலத்தில் தளர்ந்துபோனாலும், பொன்னைப் போன்ற இவளது
மேனியைத் தொட்டுத் தாழ்ந்து கிடக்கும் நீண்ட கரிய கூந்தல் நரைத்துப் போகும்
முதுமைப் பருவம் வந்தாலும், அன்றைக்கும் இவள் மீது உனக்கிருக்கும் காதல்
மாறக்கூடாது; இவளை விட்டுப் பிரியக் கூடாது. காலம் இவளது இளமையையும் அழகையும்
கவர்ந்துகொண்டாலும், உன் சொல்லை நம்பி உன்னையே தஞ்சமடைந்த இவளைக் கைவிடாமல்
காப்பதே உன் கடமை என்பதை மறவாதே.” என்று தோழி தலைவனிடம் தன் வேண்டுகோளை
முன்வைக்கிறாள்.
அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி பூக் கேழ் ஊர
இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க் 5
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்
வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன நின்
பிழையா நல் மொழி தேறிய இவட்கே
அருஞ்சொற்பொருள்:
1. அண்ணாந்து - நிமிர்ந்து மேல்நோக்கி;
ஏந்திய - உயர்ந்த; வனப்பு – அழகு
2. நேர் - போன்ற; மேனி – உடல்; மணி – நீலமணி
4. நீத்தல் – நீங்குதல், கைவிடாமல்; ஓம்பு
– பாதுகாப்பாயாக; மதி – அசைச்சொல்; கேழ் - ஒளி; ஊர – ஊரையுடையவனே
5. கடுங் கள் – இனிய கடுப்புடைய கள் ;
இழை அணி – நன்கு செய்யப்பட்ட அணிகலன்;
6. கொற்றம் - வெற்றி; கொங்கர் – கொங்கு
நாட்டவர்; பணீஇயர் – பணியச் செய்வதற்கு
7. கோடு - கொம்பு; போஒர் – ஓர் ஊரின்
பெயர்; கிழவோன் – உரியவன்
8. பழையன் - ஒரு குறிநில மன்னன்;
வாய்த்தன்ன – வெற்றிபெற்றதுபோல்
9. பிழையா – பிழையில்லாத; தேறிய –
தெளிந்த, நம்பிய; இவட்கு – இவளுக்கு
பதவுரை:
1. அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும் -
நிமிர்ந்து உயர்ந்த அழகிய முலைகள் தளர்ந்தாலும்
2. பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த - பொன்னைப்
போன்ற மேனியில் நீலமணிபோல் தாழ்ந்த
3. நன் நெடும் கூந்தல் நரையொடு முடிப்பினும்
- நல்ல நெடிய கூந்தல் நரைத்த முடியைக் கொண்டபோதும்
4. நீத்தல் ஓம்புமதி பூ கேழ் ஊர – கைவிடாமல்
பாதுகாப்பாயாக! பூக்கள் ஒளிறும் ஊரையுடையவனே!
5. இன் கடும் கள்ளின் இழை அணி நெடும் தேர்
- இனிய கடுக்கின்ற கள்ளினையும், அணிகலன்கள் பூட்டப்பெற்ற நெடிய தேரையும் கொண்ட
6. கொற்றச் சோழர் கொங்கர் பணீஇயர் - வெற்றியையுடைய
சோழர்கள் கொங்குநாட்டவரைப் பணியச் செய்வதற்காக
7. வெண் கோட்டு யானை போஒர் கிழவோன் - வெண்மையான
கொம்புகளையுடைய யானைகளைக் கொண்ட போஓர் என்ற ஊருக்குரியவனான
8. பழையன் வேல் வாய்த்து அன்ன நின் - பழையனின்
வெற்றிபெற்ற வேல்போல உன்னுடைய
9. பிழையா நன் மொழி தேறிய இவட்கே - பொய்க்காத
நல்ல சொற்களை நம்பிய இவளுக்கு
கொண்டுகூட்டு: ஊர, இவட்கு முலைதளரினும்
நரைமுடிப்பினும் நன்மொழி தேறிய இவட்கு, முலை தளரினும், நரை முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி என்று கூட்டுக.
உரை:
பூக்கள் ஒளிறும் ஊரையுடையவனே! இனிமையும்
வலிமையும் உடைய கள்ளையும், ஆபரணங்களால் அழகுபடுத்தப்பட்ட
தேர்களையும் உடைய சோழ வேந்தர்கள் வலிமை மிக்கவர்கள். அவர்கள் கொங்கு நாட்டவரைப்
பணியச் செய்வதற்காக, வெண்மையான தந்தங்களையுடைய யானைகளைக்கொண்டவனும், போஒர் என்னும்
ஊர்க்குத் தலைவனுமாகிய பழையன் என்பவனை ஏவினர். பழையனுடைய வேற்படை சோழர்களுக்கு வெற்றிபெற்றுத் தந்தது.
அதுபோல், உன்னுடைய பொய்க்காத நல்ல சொற்களை நம்பிய இவளுடைய நிமிர்ந்து உயர்ந்த அழகிய
முலைகள் தளர்ந்தாலும், பொன்னைப் போன்ற மேனியில் நீலமணிபோல் தாழ்ந்த நல்ல நெடிய கூந்தல்
நரையோடு முடியப்பட்டபோதும், நீ இவளுக்குப் பாதுகாப்பாக இருப்பாயாக.
சிறப்புக்
குறிப்பு:
பழையன்
என்பவன் சோழ நாட்டுக்கு உட்பட்ட போஒர் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட
வேளிர் குலத் தலைவன். இவன் சோழ மன்னனுக்கு மிக நெருக்கமானவனாகவும், சோழர் படைத்தலைவனாகவும்
விளங்கியவன். போஒர் என்னும்
ஊர், இப்பொழுது குளித்தலைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடையில் உள்ள
பெட்டவாய்த்தலை என்னும் ஊராக உள்ளது.
”பூக்கேழ்
ஊர” என்றது மலர்தோறும் சென்று தேன் உண்ணும் வண்டைப்போல் வேறுவேறு மகளிரைத் தேடிச்
செல்லாமல், தலைவியின் முதுமைப் பருவத்திலும் அவளைக் கைவிடாமல் பாதுகாப்பாயாக என்று
தோழி கூறுவதைக் குறிக்கிறது.
”போஒர்
கிழவோன் பழையன் வேல் வாய்த்தன்ன” என்றது தன்னை நம்பிப் போருக்கு அனுப்பிய
சோழனுக்குப் பழையன் வெற்றியைப்பெற்றுத் தந்ததுபோல், “உன்னை நம்பி உன்னோடு
உடன்போகும் தலைவியை என்றும் கைவிடாமல் பாதுகாப்பாயாக” என்று தோழி தலைவனுக்குக்
குறிப்பால் உணர்த்துவதைக் குறிக்கிறது.
[1] இப்பாடலை இயற்றியவர் குடவாயிற் கீரத்தனார் என்று ஓளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிப்பிடுகிறார்.
Comments
Post a Comment