1. சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!

                                      1. சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!

 

பாடியவர்: கபிலர்

இவர் பாண்டிய நாட்டைச் சார்ந்த திருவாதவூரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர். 'புலன் அழுக்கற்ற அந்தணாளன்' என்று மாறோக்கத்து நப்பசலையார் இவரைப் புகழ்ந்துள்ளார் (புறநானூறு – 126). கபிலர் இயற்றியதாக எட்டுத்தொகை நூல்களில் 235 செய்யுட்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, புறநானூற்றில் 28 செய்யுட்களையும், கலித்தொகையில் இடம்பெறும் குறிஞ்சிக்கலி என்னும் 29 செய்யுட்களையும் இயற்றியுள்ளார். ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழின் இனிமையை எடுத்துரைக்கும் வகையில் இவர் இயற்றிய குறிஞ்சிப்பாட்டு, பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ளது. குறிஞ்சித் திணைப் பாடல்களை இயற்றுவதில் இவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சங்கப் பாடல்களில் மிகுதியான பாடல்களைப் பாடிய புலவர் இவரேயாவார், மொத்தமுள்ள 2,381 சங்கப் பாடல்களில், கபிலர் ஒருவரே 235 பாடல்களைப் பாடியுள்ளார். இது மொத்த சங்கப் பாடல்களில் 10 விழுக்காட்டிற்கும் (10%) மேலாகும்.

 

இவரால் பாடப்பெற்றோர்: அகுதை, இருங்கோவேள், ஓரி, செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான் மாந்தரஞ்ச் சேரலிரும்பொறை, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, விச்சிக்கோன், வையாவிக் கோப்பெரும் பேகன், வேள் பாரி.

 

சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பற்றிய இவரது பாடல்கள் பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்தாக அமைந்துள்ளன. அப்பாடல்களால் பெருமகிழ்ச்சி அடைந்த செல்வக் கடுங்கோ வாழியாதன், நன்றா என்னும் குன்றின்மேல் ஏறி நின்று கண்ணிற்கெட்டிய இடமெல்லாம் இவருக்குப் பரிசாக வழங்கியதுடன், நூறாயிரம் பொற்காசுகளையும் அளித்தான். ஆனால், கபிலர் பெற்ற பரிசுகள் அனைத்தையும் பிறருக்கு வழங்கிப் பரிசிலராகவும் துறவியாகவும் வாழ்ந்தார்.

 

வேள் பாரியின் நெருங்கிய நண்பரான இவர், பாரி இறந்தபின் அவரது மகளிர்க்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பை ஏற்றார். இதற்காகப் பல முயற்சிகள் மேற்கொண்ட அவர், இறுதியில் பாரியின் மகளிரை ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உயிர்நீத்ததாகக் கருதப்படுகிறது.

 

கபிலர் என்ற பெயருடைய வேறு சில புலவர்களும் இருந்ததாகத் தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 

திணை: குறிஞ்சி

 

துறை: பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது

 

துறை விளக்கம்: தலைவன் பிரிந்து செல்லவிருக்கிறான் என்ற செய்தியைத் தன்னிடம் கூறிய தோழியிடம், தலைவி அதற்கு மறுமொழியாகக் கூறியது.

 

பாடலின் பின்னணி:

தலைமைப் பண்புகள் நிறைந்த ஒரு வாலிபனும், அதே போன்ற சிறந்த குணங்களைக் கொண்ட ஒரு பெண்ணும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடங்கித் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு, தங்களது இல்லற வாழ்க்கையைத் தொடங்கி, அறவழியில் வாழ்ந்து வருகின்றனர்.

தலைவன் பொருள் ஈட்டுவதற்காகத் தன் மனைவியைவிட்டுப் பிரிந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தான் அவளை விட்டுச் சில காலம் பிரிந்து வெளியூருக்குச் செல்வதைப் பற்றிச் சொன்னால், தலைவி மனம் வருத்துவாளே என்ற சிந்தனையில் தலைவன் இருக்கிறான். அப்பொழுது, அவன் மனைவியின் தோழி அங்கு வருகிறாள். தான் பொருள் தேடப் போவதைப் பற்றி அவன் அவளிடம் கூறுகிறான். அந்தச் செய்தியைத் தோழி வந்து கூற, அதைக் கேட்ட தலைவி தன் தோழியிடம், "தலைவர் என்னைவிட்டுப் பிரிய மாட்டார்.” என்று தன் நம்பிக்கையைத் திடமாக வெளிப்படுத்துவதே இப்பாடலின் பின்னணியாகும்.

தூய்மையான தாமரை மலரின் குளிர்ந்த தாதினை ஊதி, உயர்ந்த சந்தன மரத்தில் தேனீக்கள் கட்டிய தேன்கூட்டில் உள்ள தீந்தேன் எத்துணைச் சுவையும் தூய்மையும் வாய்ந்ததோ, அத்தகு உயர்ந்த பண்புடையது நம் தலைவரின் நட்பு என்று தலைவி பெருமிதம் கொள்கிறாள். ”நீர் இல்லாமல் இவ்வுலகத்து உயிர்கள் வாழ முடியாததுபோல, அவரின்றி என்னால் வாழ இயலாது என்பதைத் தலைவரும் நன்கு உணர்ந்துள்ளார். அவர் என் மீது மிகுந்த அன்புடையவர்; எப்போதும் சொன்ன சொல்லைக் கடவாத நேர்மையானவர்; பழகப் பழக மேலும் இனிமையானவர். இத்தகைய பேரன்பு கொண்ட தலைவர், என்னைப் பிரிந்து செல்வதால் என் அழகிய நெற்றி பசலை நிறமடைந்து, யான் துன்பக் கடலில் ஆழ்ந்து சிறுமை உறுவதைக் காண ஒருபோதும் சம்மதிக்க மாட்டார். எனவே, என் உள்ளம் வருந்தும்படியான செயல்களை அவர் அறியாதவர் என்பதால், அவர் என்னைப் பிரிந்து செல்ல மாட்டார்.” என்று தலைவி கூறுகிறாள்.

நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே
தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற புரையோர் கேண்மை    
5
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்பு அறியலரே

அருஞ்சொற்பொருள்:

1. நின்ற – மாறுபடாத; சொல்லர் – சொல்லை உடையவர்; நீடு – நிலைத்த;

  இனியர் – இனிய தன்மை உடையவர்

2. பிரிபு – பிரிவு

3. மீமிசை – மேலே

4. சாந்து – சந்தன மரம்

5. புரைய - உயர்ந்த; மன்ற - உறுதியாக; புரையோர் - உயர்ந்தோர்;

  கேண்மை – நட்பு

7. நயந்து – விரும்பி

8. நறு – மணமுள்ள; நுதல் – நெற்றி; பசத்தல் – பசலை படர்தல்

9. உறுபவோ - நினைப்பாரோ; செய்பு - செய்தல்

 

பதவுரை:

1. நின்ற சொல்லர் நீடுதோறு இனியர் – மாறுபடாத சொல்லை உடையவர், நிலைத்த இனிய தன்மை உடையவர்

2. என்றும் என் தோள் பிரிபு அறியலரே - என்றும் என்  தோள்களைப் பிரிதலை அறியார்,
3. தாமரைத் தண் தாது ஊதி மீமிசை - தாமரைப்பூவின் குளிர்ந்த தாதினை ஊதி, மிக்க உயரத்திலுள்ள
4. சாந்தில் தொடுத்த தீம் தேன் போல -
சந்தனமரத்தில் சேர்த்துவைத்த இனிய தேன்போல

5. புரைய மன்ற புரையோர் கேண்மை - மேன்மையானது உயர்ந்தவர்களின் நட்பு
6. நீர் இன்று அமையா உலகம்போலத் - நீரின்றி அமைந்திராத உலகம்போல

7. தம் இன்று அமையா நம் நயந்தருளி - அவர் இன்றி அமையாத நம்மை விரும்பி அருள்செய்து
8. நறு நுதல் பசத்தல் அஞ்சி - மணக்கும் நெற்றி பசலைகொள்ளுமோ என்று அஞ்சி

9. சிறுமை உறுபவோ செய்பு அறியலரே – சிறுமையான செயலைச் செய்வாரோ? செய்தலை அறிய மாட்டார்.

 

கொண்டுகூட்டு: சொல்லராகிய காதலர், நீடுதோன்று இனியர், பிரிபறியலர்‌; அவர் கேண்மை புரைய மன்ற; நம் நயந்தருளி, அஞ்சி, சிறுமையுறுபவோ, செய்புஅறியலர்‌ என்று கூட்டு‌க.

 

உரை:

அவர் சொல்லிய சொல்லிலிருந்து மாறுபடாதவர்;  இனிமையாகப் பழகும் தன்மையுடையவர்; என் தோள்களைவிட்டு என்றும் பிரியாதவர்.  தாமரைப்பூவின் குளிர்ச்சியான தாதினைத் துளைத்து எடுத்து, வண்டு மிக உயரத்திலுள்ள சந்தன மரத்தின் உச்சியில் கொண்டுபோய் சேர்த்து வைத்த இனிய தேனைப்போல, உயர்ந்தவராகிய என் கணவரின் நட்பு உறுதியானது; மேன்மையானது.   நீர் இல்லாத உலகம்போல அவர் இன்றி நான் இல்லை என்பதை அறிந்த அவர், என் மீது வைத்திருக்கும் விருப்பத்தின் காரணமாக அருளுடன் நடப்பவர்.  அவர் என்னைவிட்டுப் பிரிவதால் என் மணமுள்ள நெற்றியில் பசலை படருமோ என்று அஞ்சி, அவர் பிரிதல் என்னும் சிறுமையான செயலைச் செய்ய நினைப்பாரோ? அவ்வாறு செய்வதற்கு அறியாதவர் அவர்!

 

சிறப்புக் குறிப்பு:

தாமரைத் தாதை தேனீக்கள் சந்தன மரத்தில் உள்ள தேன்கூட்டில்  கொண்டுபோய் வைத்ததுபோலத் தலைவன் தலைவிபால் அன்பு வைத்தான் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுரை உவமை.

 

“நீரின்று அமையாது உலகு”   என்று வான்சிறப்பு என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. 


Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே

28. கள்வர்போலக் கொடியன்!